நிலா நிலா ஓடி வா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில்ப் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா
முன்னொரு காலத்திலே ஒரு வீட்டில் பல எலிகள் வாழ்ந்தன. அங்கே ஒரு பூனையும் வாழ்ந்தது. பூனையைக் காணும்போதெல்லாம் எலிகளுக்கு மிகவும் பயமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டு வாழ்வது எலிகளுக்குப் பிடிக்கவில்லை. எல்லா எலிகளும் ஒரு நாள் ஒரு கூட்டம் கூடி இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசித்தன.
ஓர் எலி “பூனையின் கழுத்திலே ஒரு மணியைக் கட்டி விட்டால் அது எம்மைத் துரத்த வரும்போது எமக்கு மணிச்சத்தம் கேட்கும். நாம் எல்லோரும் ஓடி ஒளிந்து கொள்ளலாம்” என்று கூறியது. “ஆமாம்! இது மிகவும் நல்ல யோசனை அப்படியே செய்வோம் என்று எல்லோரும் ஆமோதித்தன.
அங்கிருந்த மிகவும் புத்திசாலியான வயது முதிர்ந்த ஓர் எலி உடனே “பிள்ளைகளே! நீங்கள் கூறுவது நல்ல யோசனைதான். ஆனால் உங்களில் யார் பூனையின் கழுத்தில் மணியைக் கட்டப் போகிறீர்கள்?” என்று கேட்டது. எல்லா எலிகளும் அப்போதுதான் தங்கள் முட்டாள் தனமான முடிவை எண்ணிக் கவலைப்பட்டன. பிள்ளைகளே! நாங்கள் எப்போதும் நன்றாக ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்.