பாடம் 6: ஒளவையார்

ஒளவையார் மிகச் சிறந்த தமிழ்ப் பெண் புலவர் ஆவார். இவர் இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டிலே வாழ்ந்தவர். இவருடைய தந்தையின் பெயர் பகவன். இவருடைய தாயின் பெயர் ஆதி. ஒளவையாருக்கு அதியமான், திருவள்ளுவர், கபிலர் என்ற மூன்று சகோதரர்களும், உறுவை, உப்பை, வள்ளி என்ற மூன்று சகோதரிகளும் இருந்தனர். ஒளவையார் என்னும் பெயரில் வேறும் பல பெண்புலவர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

ஒளவையார் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, நன்னெறி போன்ற பல நீதி நூல்களை எமக்காக எழுதியுள்ளார். நல்ல பல நீதிக் கருத்துக்களையும் பண்பு களையும் இவர் எழுதிய நூல்களில் காணலாம். ஒளவை யாருடைய பாடல்களில் பெரும்பாலானவை கல்வி அறிவை ஊட்டவும், பண்பை வளர்க்கவும் பாடப்பட்டவை ஆகும்.

“அறம் செய விரும்பு” என்று தொடங்கிப் பாடிய ஆத்திசூடி சிறுவர்களுக்கு மிகவும் ஏற்றதாகும். அதியமான என்ற அரசன் கொடுத்த நெல்லிக் கனியை உண்டு நீண்ட காலம் வாழ்ந்தவர். இவரை எல்லோரும் செல்லமாக ஒளவைப் பாட்டி என்று அழைப்பர்.

ஒளவைக் கிழவி நம் கிழவி

அமிழ்தின் இனிய சொற் கிழவி



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கொன்றை வேந்தன்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

சீரைத் தேடின் ஏரைத் தேடு.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.