பாடம் 13: ஏன்? எதற்கு?

முகத்தில் கண்கள் எதற்காக?
முழுதாய் எதையும் பார்ப்பதற்கு.
மூக்கு எமக்கு எதற்காக?
முகர்ந்து எதையும் அறிவதற்கு.
செவிகள் இரண்டு எதற்காக?
செய்திகள் எல்லாம் கேட்பதற்கு.
வரிசைப் பற்கள் எதற்காக?
வகையாய் மென்று தின்பதற்கு.
நீண்ட நாக்கு எதற்காக?
நன்றாய்க் கனிவாய் பேசுதற்கு
நீண்ட கால்கள் எதற்காக?
நன்றாய் நடந்து செல்வதற்கு.
உடலில் கைகள் எதற்காக?
உதவி செய்து வாழ்வதற்கு.
உறுப்பின் பயனை அறிந்தோமே
உடலைப் பாதுகாத்திடுவோம்.

______________________________________________________________________________________________________________________________________________________________________________

உரத்து வாசிப்போம்

கண்

1. பொருட்களைப் பார்க்க உதவுகிறது.

2.பாடங்கள் படிக்க உதவுகிறது.

3.அழகை இரசிக்க உதவுகிறது.

மூக்கு

1. சுவாசிக்க உதவுகிறது.

2. மணங்களை அறிய உதவுகின்றது.

வாய், பல், நாக்கு

1.இவை மூன்றும் உணவு உண்ண உதவுகின்றன.

2. கனிவாய்ப் பேச உதவுகின்றன.

3. சுவைகளை அறிய உதவுகின்றன.

செவி

1. ஒலிகளைக் கேட்க உதவுகிறது.

கை

1. எழுதுவதற்கு உதவுகிறது.

2.பொருட்களைப் பிடிக்க உதவுகிறது.

3.சாப்பிட உதவுகிறது.

4. வேலை செய்ய உதவுகிறது.

கால்

1.நடந்து செல்ல உதவுகிறது.

2. விளையாட உதவுகிறது.

3.உடலைத் தாங்கி நிற்கிறது.


ஒருமை, பன்மை சொற்களை வாசிப்போம்.

1)
இலை இலைகள்
காய் காய்கள்
வீடு வீடுகள்
கண் கண்கள்
மலர் மலர்கள்
பறவை பறவைகள்

2)
பழம் பழங்கள்
மரம் மரங்கள்
நிறம் நிறங்கள்
புத்தகம் புத்தகங்கள்
காகம் காகங்கள்
நீ நீங்கள்

3)
புல் புற்கள்
கல் கற்கள்
பல் பற்கள்
சொல் சொற்கள்

4)
நாள் நாட்கள்
முள் முட்கள்

5)
பூ பூக்கள்
ஈக்கள்

6)
தம்பி தம்பிமார்
குரு குருமார்