பாடம் 9: பூனைகளும் குரங்கும்

ஓர் ஊரிலே இரண்டு பூனைகள் நண்பர்களாக இருந்தன. அவை எப்போதும் தமக்குக் கிடைத்த உணவைப் பகிர்ந்து உண்ணுவது வழக்கம். ஒரு நாள் ஒரு பூனையிடம் ஓர் அப்பம் கிடைத்தது. அந்தப் பூனைக்கு அந்த அப்பத்தை தான் மட்டும் உண்ண வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் மற்றப் பூனையோ அப்பத்தில் பாதி தரும்படி சண்டை போடத் தொடங்கியது. கடைசியில் இரண்டு பூனைகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தன.

“நாம் இருவரும் சண்டை போட்டுப் பயன் ஒன்றும் இல்லை. ஒரு நீதிபதியிடம் செல்லலாம்” என முடிவு செய்து ஒரு குரங்கிடம் சென்று தீர்ப்புக் கூறும்படி கேட்டன. அந்தக் குரங்கு பூனைகளின் ஒற்றுமை இல்லாத மனப்பான்மையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்தது.

அந்த அப்பத்தை இரண்டாகப் பிரித்து ஒரு தராசின் இரண்டு தட்டுகளிலும் போட்டது. ஒரு பக்கம் மற்றைய பக்கத்தைவிடச் சற்றுப் பெரிதாகத் தெரிந்தது. உடனே குரங்கு நீதிபதி கூடுதலாக இருந்த அப்பத் துண்டில் ஒரு கடி கடித்தது. கடித்த அப்பத் துண்டை ஒரு பக்கத் தராசில் போட்டதும் மற்றப் பக்கம் அதிக பாரத்தினால் பதியத் தொடங்கியது.

குரங்கு நீதிபதி அந்தப் பக்க அப்பத்துண்டையும் எடுத்துக் கடித்தது. அதனால் மீண்டும் தராசின் பாரம் வித்தியாசப்பட்டது. இப்படியே மாறி மாறிக் கடித்து அப்பம் முழுவதையும் குரங்கே சாப்பிட்டு முடித்துவிட்டது. பூனைகள் தந்திரக் குரங்கிடம் தாம் மோசம் போனதை எண்ணி இனிமேல் சண்டைபோடாது இருப்பது நல்லது என்று கூறிக் கொண்டன. பிள்ளைகளே! நாம் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்கள் எம்மை ஏமாற்றி விடுவார்கள்.