பாடம் 13: தொப்பி வியாபாரியும் குரங்குகளும்

ஒரு நாள் ஒரு தொப்பி வியாபாரி தொப்பிகளை விற்பதற்காகப் பாதையால் நடந்து போய்க்கொண்டு இருந்தான்.

அப்போது வெய்யில் கடுமையாக இருந்தது. ஒரு மரத்தின் கீழே தனது தொப்பிக் கூடையைத் தலையிலிருந்து இறக்கி வைத்தான். களைப்பின் மிகுதியால் அவன் படுத்துத் தூங்கிவிட்டான். அந்த மரத்தில் சில குரங்குகள் வசித்தன. அவை வியாபாரியின் தலையிலும் அவனது கூடையிலும் இருக்கும் தொப்பிகளைப் பார்த்தன.

கீழே இறங்கி வந்து தொப்பிகளை எடுத்து வியாபாரியைப் போல் தமது தலையில் தொப்பிகளைப் போட்டுக் கொண்டு மரத்தின் மேலே ஏறிக் கொண்டன. சிறிது நேரத்தின் பின் வியாபாரி நித்திரை விட்டெழுந்தான். அவன் தனது கூடையிலிருந்த தொப்பிகளைக் காணாது அங்கும் இங்கும் பார்த்தான். மரத்தின் மேலே குரங்குகள் தனது தொப்பிகளைப் போட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டான். என்ன செய்யலாம் என்று யோசித்தான். தனது தொப்பியைக் கழற்றித் தலையைச் சொறிந்து கொண்டு இருந்தான். இதைப் பார்த்த குரங்குகளும் அவனைப் போலவே செய்தன. அதைக் கண்ட வியாபாரிக்கு ஒரு யுத்தி தோன்றியது. அவன் தனது தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி எறிந்தான்.

அதைப் பார்த்த குரங்குகள் அவனைப் போலவே தமது தொப்பிகளைக் கழற்றி இருந்த கூடையுள் எறிந்தன.

உடனே வியாபாரி கீழே விழுந்த தொப்பிகளைக் கூடைக்குள் எடுத்துப் போட்டுக் கொண்டான். கூடையைத் தனது தலையில் தூக்கி வைத்துக் கொண்ட வியாபாரி மகிழ்ச்சியுடன் தொப்பிகளை விற்பதற்காக நடையைத் தொடர்ந்தான்.