ஒரு நாள் காட்டுச் சேவல் ஒன்று கீழே மேய்ந்து கொண்டிருந்தது. அதனைக் கண்ட குள்ள நரி ஒன்று சேவலைப் பிடிப்பதற்காகப் பதுங்கிப் பதுங்கி வந்தது. அருகே சருகுகள் நொருங்குவது கேட்டுச் சேவல் பறந்து சென்று அருகில் இருந்த மரக்கிளையில் அமர்ந்தது. நரி ஏமாற்றம் அடைந்தது. சேவலைத் தன் தந்திரத்தால் பிடிக்க வேண்டும் என்று எண்ணியது.
மரக்கிளையில் இருந்த சேவலை நோக்கி “அண்ணா! நேற்று இரவு நடந்த கூட்டத்திற்கு ஏன் வரவில்லை?” என்று கேட்டது. “நான் உங்களைப் போல் இரவில் நடமாடி வேட்டையாடுபவன் அல்ல. இரவில் தூங்கி காலையில் விழித்துக் கொள்வதுதான் வழக்கம் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டது. “ஆமாம் தெரியும் ஆனால் மறந்துவிட்டேன். இன்று செய்தி கேட்டீர்களா? நேற்று இரவு இந்தக் காட்டில் நடந்த கூட்டத்திலே எல்லா விலங்குகளும் யாரையும் கொல்லக்கூடாது, எல்லோரும் சகோதரர்களாக வாழவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இனிமேல் நீங்கள் பயப்படாமல் கீழே இறங்கி வந்து மேயலாம்” என்றது. நரி தந்திரமுள்ள ஒரு மிருகம் என்பது சேவலுக்குத் தெரியும். அதனால் சேவல் உடனே அதனை நம்பவில்லை. நரி கூறியது உண்மையா என்று பார்க்க எண்ணிய சேவல் “தம்பி உன் நண்பர்களான வேட்டை நாய்க் கூட்டம் வருவது என் கண்களுக்குத் தெரிகிறது. அவர்களுடன் முதலில் பேசு நான் பின்னர் கீழே இறங்கி வருகிறேன்” என்றது.
அதனைக் கேட்ட குள்ள நரி துள்ளிக் குதித்து ஓட ஆரம்பித்தது. “தம்பி எதற்காக ஓடுகிறாய்? எல்லா விலங்குகளும் சகோதரர்கள் ஆகிவிட்டார்கள் என்று இப்போதுதானே கூறினாய்” என்று கேட்டது.
“ஆம் அது உண்மைதான் ஆனால் அந்தச் செய்தி இந்த வேட்டை நாய்களுக்கு எட்டாமல் போயிருக்கலாம் அல்லவா?” என்று கூறிக்கொண்டே ஓட்டம் பிடித்தது. நரியின் மோசத்தை அறிந்த சேவல் எப்போதும் எதிரிகளை நம்பாது மிகுந்த கவனத்துடன் வாழ்ந்தது.