பாடம் 7 : உதவி செய்வோம் உதவி செய்வோம்

ஒரு காட்டிலே சிறிய முயல் ஒன்று தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது. முயல் அழகிய தோட்டம் ஒன்றை அமைத்து, பல பயிர்களையும் தானியங்களையும் வளர்த்து வந்தது. ஒரு நாள் தனது தோட்டத்தில் விளைந்த பயிர்களை மூட்டைகளாகக் கட்டி வண்டியில் வைத்து சந்தைக்கு இழுத்துச் சென்றது.

வழியிலே ஒரு மூட்டை கீழே விழுந்து விட்டது. மூட்டை பாரமாக இருந்ததால் முயலால் அதைத் தூக்க முடியவில்லை. அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தது. பக்கத்திலே உதவ யாருமே இல்லை. என்ன செய்வது என்று முயல் திகைத்து நின்றது. அப்போது அந்த வழியாகக் காட்டரசன் சிங்கம் வந்தது.

சிங்க ராசாவைக் கண்ட முயல் அவரை வணங்கி நின்றது. ஆனால் உதவி கேட்கத் தயங்கியது. சிங்க ராசா எதுவும் கேட்காமலே மூட்டையைத் தூக்கி வண்டி மீது வைத்தது.

முயல், அரசே, தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்றது.

உடனே சிங்கம், தம்பி! நீ எனக்கு நன்றி செலுத்த வேண்டாம். இதே போல் பிறர் சிரமப்படும்போது நீ அவர்களுக்கு உதவி செய். அது போதும் என்றது. நாம் பிறருக்கு உதவி செய்வோம்.

எமக்கு உதவி செய்வோருக்கு நன்றி கூறுவோம்.