வினோத்தும் சுதனும் நண்பர்கள். அன்று இருவரும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள். பேச்சு சுவாரசியத்தில் அவர்கள் இருவரும் ஊருக்குச் சற்றுத் தொலைவில் இருந்த காட்டிற்கு சென்று விட்டார்கள். அப்போது சற்றுத் தூரத்தில் ஒரு கரடி வந்து கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். இருவர் மனதிலும் பயம் பற்றிக் கொண்டது.
வினோத் : ஐயோ, கரடி வருகுது. இப்போது என்ன செய்யலாம்? நாம் இருவரும் ஒரு மரத்துக்கு மேல் ஏறுவோம். கரடிக்கு மரம் ஏறத் தெரியாது. வினோத் சொன்னதைக் கேட்ட சுதன் பயந்தான்.
சுதன் : வினோத் எனக்கு மரம் ஏறத்தெரியாதே...
ஆனால் வினோத் காத்திருக்கவில்லை. சுதனைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. உடனே அங்கேயிருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.
கரடி வேகமாக நெருங்க ஆரம்பித்தது. அப்போது சுதனுக்கு எப்போதோ படித்த ஒரு விடயம் நினைவிற்கு வந்தது.
இறந்து போனவர்களைக் கரடி சாப்பிடாது என்பதே அந்த விடயம். உடனடியாக அங்கே படுத்துக்கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு இறந்து போனது போல நடிக்க ஆரம்பித்தான். கரடி அவனை நெருங்கி முகர்ந்து பார்த்தது. கீழே கிடக்கும் சுதனை இறந்து போன மனிதன் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டது.
இப்போது சுதன் எழுந்தான். வினோத் மரத்திலிருந்து இறங்கி வந்தான்.
வினோத் : சுதன், கரடி உனது காதில் ஏதோ சொல்லியதே என்ன அது?
சுதன் : அது ஒன்றுமில்லை. உன்னைப் போல ஆபத்து வேளையில் உதவாதவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளாதே என்று எனக்கு அறிவுரை கூறியது.
இதைக் கேட்ட வினோத் வெட்கித் தலை குனிந்தான்.