சுதா, குமுதா இருவரும் பேனா நண்பர்கள். குமுதா இலங்கையில் வாழும் சிறுமி. ஆனால் சுதா இங்கிலாந்தில் வாழ்கிறாள்.
ஒரு நாள் குமுதாவுக்கு சுதாவிடமிருந்து கடிதம் வந்தது. தன்னுடன் உலக அதிசயங்களைப் பார்க்க வருமாறு சுதா அழைத்திருந்தாள். குமுதா மகிழ்ச்சியடைந்தாள். ஒரு நாள் இருவரும் ஆகாய விமானத்தில் புறப்பட்டனர்.
முதலில் தாஜ்மஹால் சென்றார்கள். தாஜ்மஹால் இந்தியாவில் ஆக்ரா என்னுமிடத்தில் இருக்கிறது. அது பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட அழகான மாளிகை. தாஜ்மஹால் தன் மனைவியின் ஞாபகமாக ஷாஜஹான் எனும் அரசனால் கட்டப்பட்டது.
இரண்டாவதாக சீனாவிலுள்ள பெருஞ்சுவரைப் பார்க்கப்போனார்கள். ஏறக்குறைய, கி.மு. 476ம் ஆண்டளவில் கட்ட ஆரம்பிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் சிதைந்து போயுள்ள இந்த சுவரின் நீளம் கிழக்கிலிருந்து மேற்காக ஐயாயிரத்து ஐந்நூறு மைல்களாகும்.
பின்னர் எகிப்திய பிரமிட்டுக் களைப் பார்த்தார்கள். பிரமிட்டுக்கள் கூம்பக வடிவில் காணப்பட்டன. அவற்றுள் பழைய எகிப்திய பேரரசர்களின் கல்லறைகள் உள்ளன. இவை நாலாயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்டவையாகும்.
அடுத்து ஈபில் கோபுரத்தைப் பார்த்தார்கள். ஈஃபில் கோபுரம் பிரான்சின் தலைநகரான பாரீசில் இருக்கிறது. இந்தக் கோபுரம் முழுவதும் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து ஒன்பதில் கட்டி முடிக்கப்பட்ட இதன் உயரம் 986 அடி யாகும்.
அதன் பின்னர் இத்தாலி நாட்டுக்குச் சென்றார்கள். அங்கு பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தைப் பார்த்தார்கள். நேராகக் கட்டப்பட்ட அந்தக் கோபுரம் சிறிது சாய்ந்து நிற்கின்றது. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கோபுரம் சிறிது சிறிதாக சாய்ந்து விழும் அபாயத்தை கட்டட பொறியியல் வல்லுனர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
பின்னர் அமெரிக்கா சென்றார்கள். நியூயோர்க் நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திரச் சிலையைப் பார்த்தார்கள். அது பிரான்ஸ் மக்களால் அமெரிக்க மக்களுக்குக் கொடுக்கப்பட்ட அன்பளிப்புச் சின்னமாகும். இச்சிலை செம்பினால் ஆக்கப்பட்டது.
உலக அதிசயங்களைப் பார்த்த பின்னர் இந்தியாவின் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கினார்கள். அங்குள்ள கோபுரங்களையும், சிற்ப வேலைகளையும் பார்த்து மலைத்துப்போய் விட்டார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் உலக அதிசயங்களில் ஒன்றாக ஆக்கவேண்டும் என்ற செய்திகளைப் படித்தது அப்போது அவளுக்கு நினைவிற்கு வந்தது. கடைசியாக குமுதாவின் தாய்நாடான இலங்கைக்கு வந்தார்கள்.
கொழும்பிலிருந்து மோட்டார் வண்டியில் சென்று சிகிரியா குகை ஓவியங்களைப் பார்த்தார்கள். சிகிரியா மலையின் உச்சியில் புராதனமான ஒரு அரண்மனையின் இடிபாடுகளையும் கண்டனர். இது காசியப்பன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது.
பின்னர் குமுதா, சுதாவைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள். தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்தாள். அவர்கள் சுதாவுக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர். பின்னர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
உலகின் ஏழு பழைய அதிசயங்கள் என்று பாபிலோனியாவின் தொங்கு தோட்டம் எகிப்த்தின் பிரமிட்டுக்கள், மனிதத்தலை கொண்ட சிங்கத்தின் சிலை, கிரேக்க நாட்டு டயானாவின் ஆலயம், சூஸ் கடவுளின் சிலை, அலேக்சாந்திரியாவின் வெளிச்சவீடு, அப்பல்லோவின் வெண்கலச்சிலை ஆகியவற்றைக் குறிப்பிடுவார்கள். தற்காலத்தில் கண்டறியப்படும் தொழில் நுட்ப மாற்றங்களால் புதிய புதிய உலக அதிசயங்கள் தோன்றிய வண்ணமே இருப்பதனை நாம் அறிய முடிகின்றது.
குமுதாவிற்கும் அவளது குடும்பத்தினருக்கும், அவர்களின் மனம் உவந்த உபசரிப்புக்கு நன்றி கூறிய பின்னர் சுதா இங்கிலாந்துக்குப் பயணம் ஆனாள்.