பாடம் 13: கடிதம் எழுதுதல்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, செய்தியினை ஒருவரிடம் இருந்து மற்ற ஒருவருக்கு அறிவிப்பதற்குப் பல முறைகளைக் கையாண்டு இருக்கின்றனர். அரசன் இரகசியமான செய்தியை ஓலையில் எழுதி, தனது தூதுவன் மூலம் அன்றேல் புறாக்களின் காலில் கட்டி அனுப்புவது வழக்கம். அவ்வாறு செய்திகள் அனுப்பிய கதைகளை, எமது மொழியில் மாத்திரம் அன்றிப் பிற மொழிக் கதைகளிலும் நாம் படிக்கமுடிகின்றது. பிற்காலத்தில் கடிதங்களைப் பரிமாறுவதற்கான அஞ்சல் சேவை உலகமெங்கும் பிரசித்தி பெற்றது. கடிதங்களுக்கு முத்திரைகள் ஒட்டப்பட்டுத் தபால் அலுவலகங்களால் கையாளப்பட்டன. தற்காலத்தில் பெரும்பாலானவர்கள், தமது செய்திகளை மின்னஞ்சல் மூலம் பரிமாறிக் கொள்கின்றனர்.

பொது மக்கள் தமது அன்பை வெளிப்படுத்தவும், சுகம் அறியவும், வேறு செய்திகளை அறிவிக்கவும் கடிதம் எழுதுவார்கள். கடிதங்கள் பலவகைப்படும். அவற்றிலே உறவுமுறைக் கடிதம் ஒன்றைக் கீழே காண்போம்.


215, காசியோபறி வீதி,

வாற்போட்,

இலண்டன்,

ஐக்கிய இராச்சியம்.

2008/01/10.

அருமைத் தோழி கனிமொழி,

உங்களது கடிதம் நேற்றுக் கிடைத்தது. உங்கள் எல்லோரதும் சுகம் அறிந்து மகிழ்ந்தேன். நான் நலமே உள்ளேன். எனது பெற்றோரும் சகோதரரும் சுகமாக இருக்கிறார்கள்.

உமது கடிதத்தில் நல்லூர்த் தேர்த் திருவிழாபற்றி எழுதியிருந்தீர். ஆடி, ஆவணி மாதங்களில் இருபத்தியேழு நாட்கள் இடம் பெறும் நல்லூர்க் கந்தன் கோவில் திருவிழாவுக்குத் தமிழ் மக்கள் உலகம் எங்கும் இருந்து வந்து சேவிப்பதை நானும் அறிவேன். அங்கு தேர்த் திருவிழாவும், சப்பரத் திருவிழாவும் தீர்த்தத் திருவிழாவும் மிகவும் சிறப்பாக இடம்பெறும் என எனது தாயார் கூறினார். எனக்கும் அதைப் பார்க்க ஆசை. அடுத்த வருடம் அப்பா என்னையும் அழைத்து வருவார்.

நான் இருக்கும் நாட்டின் இடங்கள் பற்றிக் கேட்டிருந்தீர் . இம்முறை இலண்டனில் உள்ள 'கீத்ரோ" விமான நிலையம் பற்றி எழுதுகின்றேன். நீர் இங்கு வரும்போது உமது விமானம் பெரும்பாலும் 'கீத்ரோ" (Heathrow) அல்லது 'கற்விக்" (Gatwick) விமான நிலையத்தில் தான் வந்து இறங்கும். இவை இரண்டும் சன நெருக்கம் கொண்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 'கீத்ரோ" விமான நிலையம் உலகின் மூன்றாவது பெரிய விமான நிலையம். அது அதிகளவு பயணிகள் வந்து போவதில் முதலாம் இடத்தில் இருக்கிறது. ஒரு வருடத்தில் சராசரியாக 800 இலட்சம் பயணிகளுக்கு மேல், பல்வேறு நாடுகளிலிருந்தும் இவ் விமான நிலையத்தின் ஊடாக வந்து போகின்றனர். 'கீத்ரோ" விமான நிலையம் 1930ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அந்த இடம் விமானம் கட்டுவதற்கும், பரீட்சித்துப் பார்ப்பதற்கும் நிறுவப்பட்டது. 1946ஆம் ஆண்டிலிருந்துதான் பயணிகள் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இங்கு பல நவீன வசதிகள் உண்டு. 'கீத்ரோ" விமான நிலையத்தில் ஐந்து பயணிகள் தரிப்பு நிலையங்கள் (Terminals) உள்ளன. தரிப்பு நிலையங்களிலிருந்து பயணிகள் தாம் விரும்பும் இடங்களுக்குப் போய் வருவதற்குச் சாதகமாகப் பேருந்து, தொடருந்துச் சேவைகள் அடிக்கடி உண்டு. புதிதாக வரும் பயணிகளுக்கு மலைப்பை ஏற்படுத்தும் விதமாக, விமான நிலையத்தின் உள்ளே பல அங்காடிகளும், வரிச்சலுகை விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. சுங்கத்திணைக்களமும், அவசர வைத்திய வசதியும் இந்த விமான நிலையத்தில் உண்டு.

ஊரிலே எமது நண்பர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் சுகமறிய ஆசை. உம்மை, இந்த விமான நிலையத்தில் விரைவில் சந்திப்பேன் என எண்ணுகிறேன். உங்களது பெற்றோருக்கும் சகோதரருக்கும் எனது பணிவான அன்பைத் தெரியப்படுத்தவும்.

அன்புத் தோழி,

தேன்மொழி.