பாடம் 16:வீட்டுவேலை

எமது விடுமுறையின்போது நானும் நண்பர்களும் ஒரு பிரசித்திபெற்ற இந்திய நகரத்திற்குப் பயணம் செய்ய ஆலோசித்தோம். சில நண்பர்கள் மும்பாய் நகர் செல்லவும், சிலர் கொல்கத்தா நகர் செல்லவும் விரும்பினர். ஈற்றில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தலமாக விளங்கும் காஞ்சிப் பட்டணம் செல்வதற்கு நானும் நண்பர்களும் ஒரு மனதாகத் தீர்மானம் செய்தோம்.

எமது பயணத்திற்கு முன்னேற்பாடாகத் தேவைப்படும் சுற்றுலா விபரங்களைக் கணினி மூலமும், அண்மையில் இருந்த நூலகத்தில் இருந்த நூல்கள் மூலமும் தேடி அறிந்தோம். பயணத்திற்கு வேண்டிய கடவுச் சீட்டுக்கள், விசா அனுமதிகள், விடுதி ஒழுங்குகள் என்பவற்றைத் தாமதமின்றிப் பெற்றுக்கொண்டோம். தவிர்க்க முடியாத தேவைகளைப் பூர்த்தி செய்வதில், நம்பகரமான ஒரு பிரயாண முகவரின் உதவி தேவைப் பட்டது. கணிசமான பணமும், சில நாட்களும் செலவான பின் பிரயாண ஒழுங்குகள் நிச்சயம் ஆயின.

குறித்த நாளில் விமானம் மூலம், சென்னை மீனம்பாக்கம் விமானத்தளத்தில் இறங்கி, சென்னை நகரில் ஏற்பாடு செய்திருந்த விடுதிக்கு வாடகை வண்டியில் சென்றடைந்தோம். எமது விமானப் பயணக் களைப்புத் தீர்ந்த பின், அடுத்த நாள் அதிகாலையில் பேருந்து மூலம் புறப்படலாம் எனத் தீர்மானித்தோம். தமிழ் நாட்டின் தலை நகரான காஞ்சிபுரம் சென்னைப் பட்டணத்திலிருந்து தென் மேற்குத் திசையில் எழுபத்தாறு கிலோ மீற்றர் தொலைவில், பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது.

காஞ்சி நகரம் பற்றிப் பல பண்டைய இலக்கியங்களில் கூறப்படுள்ளது. பரிபாடல் எனும் நூல் தொண்டைமான் இளந்திரையன் எனும் மன்னன் ஏறக்குறைய ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் காஞ்சியை ஆண்டதாகக் கூறுகின்றது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் புத்தபிரான் காஞ்சிக்கு வந்ததாக எழுதியுள்ளார் என்று எம்முடன் பயணித்த தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர் கூறியதைக் கேட்டு வியந்தோம்.

அவர் மேலும் மூன்றாம் நூற்றாண்டு முதல் பல்லவரின் ஆட்சிக் காலத்தில் தான் காஞ்சி பெரும் முன்னேற்றம் கண்டது. முதலாம் மகேந்திரவர்மன் எனும் பல்லவ மன்னன் காஞ்சியை பல்லவர்களின் தலை நகரம் ஆக்கினான். பல்லவ மன்னர்களின் பின்னர் ஆண்ட சோழ, நாயக்க மன்னர்களின் காலங்களில் அது மேலும் விரிவடைந்தது என்ற வரலாற்று உண்மைகளையும் கூறினார்.

நாங்கள் காஞ்சியில் பயணித்த சாலைகள் யாவுமே பலவிதமான மோட்டார் வாகனங்களாலும், மக்களாலும் நிரம்பி வழிந்தன. காஞ்சியில் எங்கு பார்த்தாலும் நடைபாதை வியாபாரிகளும், மக்களும் கலந்த ஆரவாரமான நடமாட்டம் காணப்பட்டது. அப்பப்பா! காஞ்சிப் பட்டினத்தில் எங்கு திரும்பினாலும் கோயில்களும், கடைகளுமாக ஊரே விழாக்கோலம் கொண்டதுபோல இருந்தது. இரு கைகளையும் தலைக்குமேல் வைத்து கோயில்களை வணங்கிய படியே ஊர் முழுவதும் வலம் வரலாம். இதனால் தமிழ் நாட்டின் பழமையான மரபுக்கு எடுத்துக்காட்டான காஞ்சிபுரத்தினை, கோவில் நகரம் எனப் பல நூல்களில் குறிப்பிடுவது மிகையாகாது.

முதலில் நாம் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள் எல்லாவற்றிலும் பழமையானது எனப்படும் கைலாசநாதர் கோயிலைத் தரிசிக்கச் சென்றோம். கம்பீரமாக அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் இராசசிம்மன் எனும் பல்லவ மன்னனால் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிறப்பாகக் கட்டப்பட்டதாகவும், பின்னர் அவனது மகனான மூன்றாம் வர்மனால் மேலும் அழகுபடுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கோயிலின் நடுவில் சிவலிங்க வடிவில் கைலாசநாதர் காட்சி அருளுகின்றார். எல்லாமாக ஐம்பத்தெட்டு கர்ப்பக் கிரகங்கள், சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய தெய்வங்களுக்காக நிர்மாணம் செய்யப்பட்டு இருப்பதனை அறிந்து ஆச்சரியம் கொண்டோம். வெளிச் சுற்றுச் சுவர், கோயில் மாடங்களைச் சேர்த்து இணைத்ததுபோலக் கட்டப்பட்டு இருந்தது. அந்தச் சுற்றுப் பிரகாரம் பல்லவ காலக் கட்டிடக்கலையின் திறமையைக் காட்டி நின்றது.

முன்புறத்திலே சிங்கத்தின் தலைகளால் சுமக்கப்படுவதுபோன்று வடிவமைக்கப்பட்ட தூண்களாலான மண்டபங்கள் காணப்பட்டன. கோயிலின் வெளிப்பகுதி முழுவதிலும் கல்லில் செதுக்கப்பட்ட யாளி எனும் விலங்கின் சிற்ப வரிசை அமைந்துள்ளது. கோயிலின் சுவர்களில் எல்லாம் தமிழரின் சிற்பக்கலைக்குச் சான்றாகப் பல அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தன.

அடுத்தநாள் காலையில் வரதராசப் பெருமாள் கோயிலைப் பார்க்கப் புறப்பட்டோம். இந்த ஆலயம் பத்தாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்டு பின்னர் ஆண்ட நாயக்க மன்னர்களால் பெருப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மிக்க அழகுடன் விளங்கும் திருமாலின் நின்ற, இருந்த, கிடந்த மூன்று மூர்த்தங்களையும் , மூன்று அடுக்குகளில் பிரதிட்டை செய்து கட்டப்பட்டுள்ளமை இக் கோயிலின் சிறப்பு ஆகும்.

அடாடா! கருங்கல்லில் பொழியப்பட்டுத் தொங்கிய சங்கிலிகளையும், தூண்களில் அமைக்கப்பட்ட சிற்பங்களையும் பார்த்து சுவைப்பதற்கு இரு கண்கள் போதாது. சுற்றிப் பார்ப்பதற்கு பல மணி நேரத்தினை எம்மை அறியாமலேயே செலவிட்டோம். மேலும், நூறு தூண்கள் கொண்ட கல் மண்டபத்தினையும் இக் கோயிலில் கண்டு வியந்தோம்.

அன்று மாலையில் காஞ்சி காமாட்சி அம்மனின் ஆலய தரிசனம் காணச்சென்றோம். இந்த ஆலயம் ஆறாம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் கட்டப்பட்டதாக அறிந்தோம். பொற்றட்டினால் வேயப்பட்ட விதானத்தை உடைய இக்கோயிலின் சந்நிதியில் நின்று மக்கள் அம்மனை வணங்கிய காட்சியைக் கண்டோம் நுழைவாயிலின் வலது புறத்தே, கல்யாண மண்டபம் வியக்கத்தக்க வகையில் நிர்மாணிக்கப்பட்டமை மனதினைக் கவர்ந்தது.

காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் ஐம்பத்து ஒன்பது மீற்றர் உயரமான வாசல் கோபுரத்தினை உடைய ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் பார்ப்பதற்குப் புறப்பட்டோம். ஏறக் குறைய முப்பது ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. விஜயநகர மன்னர் காலத்தில் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

காஞ்சி மாநகரம் பட்டு நெசவுக்குப் புகழ்பெற்றது. இந்த நகர மக்களில் எண்பது வீதமானோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ராஜராஜ சோழ மன்னன் பட்டு நெசவுசெய்வோரை இந்த நகரத்திற்கு வரவழைத்து இத்தொழிலை ஊக்குவித்தான் எனக் கூறப்படுகின்றது. இன்று பெரும்பாலானோர் தமது வீடுகளில் இருந்து கொண்டே, பட்டுத் தொழில் செய்கின்றனர். நாமும் எமது காஞ்சிப் பயணத்தின் நினைவாகச் சில பட்டு விற்பனைத் தலங்கட்குச் சென்று பார்வையிட்டோம்.

மேலும் பல விசேடமான தலங்கள் காஞ்சிபுரத்தில் இருந்தபோதிலும், எம்மால் யாவற்றையும் பார்க்க முடியவில்லை. அடுத்த தடவை அவற்றைப் பார்க்கலாம் என்று மனதினைத் தேற்றிக் கொண்டு, எமது இருப்பிடம் வந்து சேர்ந்தோம்.