பாடம் 21: வந்தது யார்?

நரி : அதோ! அங்கே பாருங்கள். அந்தப் புதர் அசைகிறதே.

முயல் : பின்னால் ஏதோ இருக்கிறது போலும்!

மான் : ஆமாம் எனக்கும் ஏதோ அசையும் சத்தம் கேட்கிறது.

குருவி : ஏன் பயப்படுகிறீர்கள். எட்டிப் பார்ப்போமா?

குரங்கு: வேண்டாம்! வேண்டாம்! இங்கிருந்தபடியே பார்ப்போம்.

நரி : குரங்காரே! நீர் மரத்தில் ஏறிப் பாரும்.

குரங்கு: ஆ! பளபளக்கும் கண்கள் தெரிகின்றனவே!

கரடி : ஆந்தையாக இருக்குமோ!

குருவி : இல்லை! கூர்மையான பற்களும் இருக்கின்றன.

முயல் : ஐயோ! சிறுத்தைப் புலியா?

மான் : இல்லை! தடித்த கால்களும் தெரிகிறது.

நரி : பெரிய வயிறு தெரிகிறதா? பாருங்கள்.

குரங்கு: ஆமாம்! ஆமாம்! மிக நீண்ட வயிறு இருக்கிறது

.

கரடி : அப்படியா? அது ஒட்டகமாகத்தான் இருக்க வேண்டும்.

குருவி : இல்லை! இல்லை! நீளமான வால் உள்ளதே!

மான் :

ஓகோ! ஓநாயாக இருக்குமோ?

முயல் : இல்லை! இல்லை! தடித்த, பட்டை பட்டையாகத் தோல் தெரிகிறதே!

(அப்போது புதரின் பின்னால் இருந்து மிகப் பெரிய உருவம் ஒன்று மெல்ல மெல்ல, அசைந்து, அசைந்து வந்தது. விலங்குகள் தலை தெறிக்க எதிர்த்திசையில் ஓடத் தொடங்கின.)

குரங்கு: ஆ..........! ஐயோ! ஓடுங்கள்! ஓடுங்கள்!

கரடி : ஆ..........! ஐயோ.................! என்னால் ஓட முடியவில்லையே!

நரி : ஆபத்து! ஆபத்து! வேகமாக ஓடுங்கள்.

முயல் : ஓடு, ஓடு................! வேகமாக மறைந்து கொள்ளுங்கள்.

குருவி : கீச்.........கீச்............ விரைந்து ஓடுங்கள்.

மான் : ம்......... ம்......... விரையுங்கள். வேகமாக ஓடுங்கள்

.

(அந்த உருவம். வேகமாக அசையத் தொடங்குகிறது.)

அந்தப் பிரமாண்டமான உருவம் என்னவாக இருக்கும் என்று உங்களால் கூறமுடியுமா?

உரத்து வாசிப்போம்.

நேற்று நடந்தது நாளை நடக்கப்போவது
உணவு உண்டேன் உணவு உண்பேன்
பாடம் படித்தேன் பாடம் படிப்பேன்
படுத்து உறங்கினேன் படுத்து உறங்குவேன்
ஓடி விளையாடினேன் ஓடி விளையாடுவேன்
கடவுளை வணங்கினேன் கடவுளை வணங்குவேன்
பாடசாலை சென்றேன் பாடசாலை செல்வேன்
உதவி செய்தேன் உதவி செய்வேன்
நடனம் ஆடினேன் நடனம் ஆடுவேன்
பாட்டுப் பாடினேன் பாட்டுப் பாடுவேன்
கை கழுவினேன் கை கழுவுவேன்

உயிரினங்களின் குரல்கள்

ஆடு - கத்தும் அணில் - கீச்சிடும்
ஆந்தை - அலறும் கரடி - உறுமும்
கழுதை - கத்தும் காகம் - கரையும்
கிளி - பேசும் குதிரை - கனைக்கும்
குயில் - பாடும் கோழி - கொக்கரிக்கும்
சேவல் - கூவும் சிங்கம் - கர்ச்சிக்கும்
தேனீ - இரையும், ரீங்காரமிடும் நரி - ஊளையிடும்
நாய் - குரைக்கும் பசு - கதறும்
பல்லி - சொல்லும் பாம்பு - இரையும்
புறா - முனகும் பூனை - சீறும்
மயில் - அகவும் யானை - பிளிறும்