பாடம் 9:தைத்திருநாள்

தைத்திருநாள் இல்லமெல்லாம்

தளிர்த்திடும் தைப்பொங்கல்

இத்தனை நாள் காத்திருந்தோம்

இனிய தமிழ்ப் பொங்கல்.


கோலமிட்டு விளக்கேற்றி

கும்பிடுவார் அம்மா

பொங்கலுக்குப்

பானை வைப்பார் அப்பா

விரும்பிய மா வாழை பலா

விதம் விதமாய் கனிகள்

கரும்பு இளநீர் படைத்து நிதம்

களித்திடுவோம் நாங்கள்.


வெண்ணிறப் பால் பொங்கி வர

வெடிசுடுவோம் நாங்கள்

இன்னமுதப் பொங்கலுண்டு

மகிழ்ந்திடுவோம் நாங்கள்.

பொங்கல் திருநாள்

தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். முதல் நாள் சூரியப் பொங்கல் எனப்படுகிறது. அந்நாளில் உழவர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்துகின்றனர். பயிர்கள் வளர மழையும் வெய்யிலும் தேவையாகும். அவற்றைத் தருபவன் சூரியனே.

சூரியப் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கலாகும். இந்நாளில் தனக்கு உதவிய விலங்கினங்களுக்கு உழவன் நன்றி செலுத்துகிறான்.


தைத்திருநாளில் நாம் -

அதிகாலையில் எழுவோம்,

குளித்து நீராடுவோம்,

வாசலில் கோலம் போடுவோம்,

மாவிலைத் தோரணம் கட்டுவோம்,

நிறைகுடம் வைப்போம்,

குத்து விளக்கு ஏற்றுவோம்.

அம்மா புதுப்பானையில் பொங்கல் பொங்குவார்.

அப்பா வாழை இலையில் பொங்கல் படைப்பார்.

பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றையும் சூரியனுக்குப் படைப்போம். அண்ணா பட்டாசு கொளுத்துவார். எல்லோரும் சூரியனை வணங்குவோம் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்போம்.

சூரியனை வணங்குவோம்.

உழவரை மதிப்போம்.