பாடம் 9:தைப்பொங்கல் விழா

பொங்கல் திருநாள் ஒவ்வொரு வருடமும் தைமாதத்தில் கொண்டாடப்படும். இது அறுவடைத்திருநாள், தமிழர் திருநாள் எனப் பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும். பொங்கல் விழா, தமிழ் மக்களால் கொண்டாடப்படும் விழாக்களில் முதன்மையானது. தைமாதப் பிறப்பின் போது புது அரிசியில் பொங்கல் செய்து, சூரியனுக்குப் படையலிட்டு இத் திருநாள் கொண்டாடப்படும். சில பகுதி மக்களால் பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படும். முதல் நாள் கொண்டாடப்படும் விழாவைப் போகி என்றும், இரண்டாம் நாள் விழாவைச் சூரியனுக்கான பொங்கல் என்றும், மூன்றாம் நாள் விழாவை மாட்டுப் பொங்கல் எனவும், நான்காவது நாள் விழாவை, காணும் பொங்கல் எனவும் அழைப்பது வழக்கம்.

போகிப்பண்டிகை தினத்தன்று அதிகாலையில் வீட்டில் உள்ள பழைய துணிமணிகளையும், உபயோகிக்க முடியாத பொருட்களையும் வீட்டின் முன் போட்டுத் தீயிட்டுக் கொளுத்துவர். புதிய துணிமணிகளையும், வேண்டிய புதிய பாவனைப் பொருட்களையும் வாங்குவார்கள். பண்டிகைக் காலத்தில் உட்கொள்ள விதவிதமான பலகாரங்களைத் தயாரிப்பார்கள். அந்த வருடம் முழுதும் நல்ல மழையைத் தந்து மக்களின் வாழ்வைச் செழுமைப்படுத்தும்படி மழைக்குரிய தெய்வமான வருணனை வேண்டி வணங்குவார்கள்.

அடுத்த நாள் கொண்டாடப்படுவது சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் விழா ஆகும்.வீட்டின் முன்புறமோ அல்லது பின்புறமோ கோலமிட்டு அதன் நடுவே பானை வைத்துப் பொங்கல் பொங்குவர். அப்போது பானையில் மாவிலை, மஞ்சள், இஞ்சியிலை போன்றவற்றைக் கட்டுவர். இவை மங்கலத்துக்கும் பசுமைக்கும் அடையாளமாகும். பொங்கலின் போது அரிசி பொங்கி வரும் போது பெண்கள் “பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்” என குரலிடுவர். இந்தப் பொங்கலின் போது கரும்பும் படைப்பர். கரும்பு வாழ்வில் இனிமையையும், மகிழ்வினையும் குறிக்கும். எனவே பொங்கல் விழா என்பது மக்கள் வாழ்வில் மங்கலம், செழுமை, இனிமை என்பன நிலைத்து நிற்கச் சூரியனை வேண்டும் விழா ஆகும். இதனை உழவர் திருநாள் எனவும் கூறுவார்கள். மற்றைய தினங்களை விட இத்திருநாள் பெரும்பான்மையான தமிழர்களால் பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அடுத்துக் கொண்டாடப்படும் விழா மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல் ஆகும். இவ்விழா ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்குத் தோள் கொடுத்து உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகக் கொண்டாடப்படும். அன்று பசுமாடுகள், காளை மாடுகளுக்குக் குளிப்பாட்டி கொம்புகளில் வர்ணம் தீட்டிக் கழுத்தில் மாலைகள் சூட்டுவர். கிராமப் பகுதிகளில் பட்டிப் பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு அல்லது ஜல்லிக்கட்டு எனும் தமிழரின் வீர விளையாட்டு நடைபெறுவதும் வழமை. ஈழத்தில் பொதுவாக அன்றைய தினம் மாட்டுச் சவாரிப் போட்டிகள் நடைபெறுவதும் உண்டு.

பொங்கல் பண்டிகைக் காலத்தில் இறுதியாகக் கொண்டாடப்படுவது காணும் பொங்கல் விழா ஆகும். பொங்கல் விழாவையொட்டி உற்றார், உறவினர், நண்பர்கள் சந்தித்துப் பேசி பரிசில்கள் பரிமாறி மகிழ்வது இத்தினத்தில் ஆகும். இந்த நாளில் பெண்கள் அரிசியில் சர்க்கரை சேர்த்துக் காகங்களுக்குக் கொடுப்பர். இப்படிச் செய்தால் சகோதர பாசம் நிலைக்கும் என்பது மரபாகும். மேலும் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் ஒன்று கூடிப் பரிசில்கள் பரிமாறி மகிழ்வார்கள்.


பொங்கலைப் பற்றிக் குழந்தைக் கவிஞர் அழவள்ளியப்பா பாடிய

ஓசை நயம் மிகுந்த ஒரு பாடலைப் பார்ப்போம்.

வெள்ளை எல்லாம் அடித்து வைத்து,

வீட்டை நன்கு மெழுகி வைத்து,

விடியும் போதே குளித்துவிட்டு,

விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து,

கோலமிட்ட பானையதில்

கொத்து மஞ்சள் கட்டி வைத்து,

அந்தப் பானை தன்னைத் தூக்கி

அடுப்பில் வைத்துப் பாலை ஊற்றிப்

பொங்கிப் பாலும் வருகையிலே


“பொங்கலோ பால்பொங்கல்” என்போம்.

தேங்காயோடு கரும்பும் சோறும்

தெய்வத்துக்குப் படைத்து வைத்து

ஒன்று சேர்ந்து உண்டிடுவோம்

ஓடி ஆடிப் பாடிடுவோம்.