பாடம் 2 : திருக்குறளில் வாய்மையும் அறிவுடைமையும்

ஆசிரியர் குறிப்பு:

ஈராயிரம் வருடங்களுக்கு முன்னரேயே தமிழ் மொழியில் திருக்குறள் இயற்றப் பட்டிருத்தல் வேண்டும் எனப் பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருக்குறளை ஆக்கியவரின் இயற்பெயர் அறியக் கிடைக்காமையால், திருவள்ளுவர் எனும் பெயரால் தெய்வீகத் தன்மை பொருந்திய இந்நூலின் ஆசிரியர் அறியப்படுகின்றார். திரு என்பது செல்வம் எனவும், போற்றுதற்குரியது அல்லது பெருமைக் குரியது எனவும் பொருள்படும். உலகத்து மக்கள் யாவரதும் வாழ்வு செம்மையாக அமைவதற்கு வேண்டிய வாழ்வியல் உண்மைகளை, தமது நூலின் மூலம் உணர்த்துவதனால் அவரைத் தெய்வப் புலவர் எனவும் கூறுவார்கள்.

நூலின் சிறப்பு

உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பொருட்களைப் பற்றிக் கூறுவதனால், முப்பால் எனவும் குறிப்பிடப்படுகின்றது. நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களில், இரண்டடியால் (Couplet) ஆக்கப்பட்ட ஆயிரத்து முந்நூற்று முப்பது பாடல்களைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. அப் பாடல்கள் குறள் வெண்பா வகையைச் சேர்ந்தவையாகும். ஏழு சொற்களைக் கொண்டு ஈரடியால் ஆக்கப்பட்ட ஒவ்வொரு பாடலும் ஆழ்ந்த கருத்துக்களைக் கூறுகின்றது. எனவேதான் இடைக்காடனார் எனும் புலவர் ‘கடுகைத் துளைத்து எழுகடலைப் புகுத்திய பா’ என்று திருக்குறளைப் புகழ்ந்துள்ளார்.

உரை ஆசிரியர்கள்

இந்நூலிற்கு பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காக்கை பாடினியார் போன்ற பல புலவர்கள் உரை எழுதி இருக்கின்றனர். திருக்குறளுக்கு எழுதப்பட்ட எல்லா உரைகளிலும் பரிமேலழகரது உரையே பொருள் விளக்கும் சிறப்பாலும், உரை கூறும் நயத்தாலும், சிறந்ததென அறிஞர் பெருமக்கள் பாராட்டுவார்கள். பல பிறநாட்டு மொழி அறிஞர்களாலும் விரும்பிப் படிக்கப்பட்டு, இதுவரை ஏறக்குறைய 127 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகின்றது.

திருக்குறளில் முதலில் கூறப்பட்ட அறத்துப்பாலில் காணப்படும் வாய்மை எனும் அதிகாரத்தையும், அடுத்துப் பொருட்பாலில் காணப்படும் அறிவுடைமை எனும் அதிகாரத்தையும் பார்ப்போம்.

வாய்மை

1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

If one’s speech does not wrong any creature, While being factually correct; that is truthfulness.

பொருள் : மெய்மை என்று மதிக்கப்படும் பண்பு யாது என்றால் அது பிறருக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதலாகும்.

2. பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்.

Even untruth might attain the value of truth, If it is productive of unmixed good, with the least blemish.

பொருள் : மற்றவர்களுக்கு தீமை இல்லாத நன்மையைத் தருமாயின் பொய்யும், சந்தர்ப்பத்தினைப் பொறுத்து உண்மையாகக் கருதப்படும்.

3.தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

Do not utter falsehood about what your conscience knows to be true: For later, your own conscience will continue to hurt you.

பொருள் :ஒருவர் தனது உள்ளம் அறிந்து பொய் கூறக்கூடாது. பொய் கூறினால் அவரது மனமே அப் பொய்க்குச் சாட்சியாக நின்று அவரை வருத்தும்.

4. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

If he lives true to his inner mind, He lives in the hearts of all mankind.

பொருள் : தனது உள்ளம் அறியப் பொய்யில்லாமல் வாழ்வானாயின் அத்தகையவன் உலகமக்கள் யாவரின் உள்ளங்களிலும் வாழ்வான்.

5.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம்செய் வாரின் தலை.

If one is truthful in thought and word, It is better than penance and charity

பொருள் :மனத்துள் நிறைந்த வாய்மை பேசுபவன், தவத்துடன் தானம் செய்பவர்களிலும் சிறப்பு உடையவனாவான்.

6.பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும்.

The entire world esteems a truthful man, for whom Other virtues come without any effort.

பொருள் : பொய் பேசாமை போன்று ஒருவருக்கு புகழ் தருவது வேறில்லை. அவர் வருந்தித் தேடாமலே தானாக நன்மைகள் சேரும்.

7.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பெற

செய்யாமை செய்யாமை நன்று.

If one speaks the truth and only truth, He needs not seek other virtues.

பொருள் :பொய் சொல்லாமை எனும் அறத்தை இடைவிடாது கடைப்பிடித்தால், வேறு அறங்களைச் செய்ய வேண்டியதில்லை.

8. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

Water purifies the body outer; Truthfulness is the detergent of the heart.

பொருள் :நீரினால் உடல் தூய்மை பெறுவது போன்று உள்ளத் தூய்மை மெய்ம்மையால் பெறப்படும்.

9.எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

Lamps do not give the light that holy men desire: It is the light of the Truth that illuminates their path.

பொருள் :சான்றோர்க்குப் புறஇருளை நீக்கும் விளக்குகளை விட, அகத்தின் இருளை நீக்கும், பொய் பேசாமையே உண்மையான விளக்காகும்.

10.யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தோன்றும்

வாய்மையின் நல்ல பிற.

Of all things confirmed in our experience, There is nothing more precious than truth.

பொருள் :அறிஞர் உணர்ந்த சிறப்பு மிகுந்த உண்மைப் பொருட்களில் மெய்மையை விட மேலானது வேறு எதுவும் இல்லை.

அறிவு உடைமை

1.அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்கள் ஆகா அரண்.

Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.

பொருள் : பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் சுற்றிவர அமைக்கப்பட்ட - காவல் வேலி போன்றது அறிவு ஆகும்.

2.சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.

Not to permit the mind to go where it lists, to keep it from evil and to employ it in good, this is wisdo

பொருள் :மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

3.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

To discern the truth in evrey thing, by whomsoever spoken, is wisdom.

பொருள் :எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

4.எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom

பொருள் :நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

5.உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு.

To secre the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged ,and ) not opening and closing (like the lotus flower)

பொருள் :உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

6.எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.

To live as the world lives, is wisdom.

பொருள் :உயர்ந்தோர் வழியில் உலகம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

7.அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

The learned use their wisdom to judge and foresee causes and effects; those who do not know this are the unwise.

பொருள் :ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்

8.அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

Not to fear ought to be feared, is folly; be wise to fear what should be feared, to avoid frightful evil.

பொருள் :அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்

9.எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.

No terrifying calamity will happen to the wise who foresee and guard against surprise shocks

பொருள் :வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர் களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

10.அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.

Those who possess wisdom, possess every thing; those who have not wisdom,whatever they may possess, have nothing

பொருள் :அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமை யில்லை அறிவு உள்ளவர்கள் சகல செல்வங்களையும் சேர்ந்து இருப்பர்.