தம்மால் பயன் படுத்தக்கூடியதும், தமக்குப் பயன்படுவதுமான தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில் அவற்றுடன் தொடர்பு கொண்டவர்களை அணுகி விடயதானம் பெறும் நிகழ்வினை, நேர்காணல், செவ்வி காணல் அல்லது பேட்டி என்பார்கள். உரையாடல், உணர்வு வெளிப்பாடு, உடல் குறிப்பு, போன்ற பலவும் கலந்ததே பேட்டி ஆகும்.
ஊடகத்துறையினராலும், தனிப்பட்ட ஆய்வாளர்களாலும், அரசாங்கத் திணைக்களங்களைச் சார்ந்தவர்களினாலும், தனியார் நிறுவனங்களினாலும், அவரவர்களின் தேவைக்கு ஏற்ப, பல்வேறு தரப்பினரிடம் இருந்து தகவல்கள் திரட்டப் படுகின்றன. தனிப்பட்டவராயின் நேரில் தனியாகச் சென்று அல்லது தமது உதவியாளர் உதவியுடன் சென்று பேட்டி எடுப்பார். தற்காலத்தில் நவீன முறைகளைக் கையாண்டு தொலைத் தொடர்புச் சாதனங்கள் மூலமும் பேட்டிகள் நடாத்தப்படுகின்றன. விளக்கமான முறையில் காணொளி, ஒலிபெருக்கி, ஒலி, ஒளிப்பதிவு செய்யும் கையடக்கக் கருவிகள் போன்ற நவீன சாதனங்களின் துணை கொண்டு, விளக்கமாகப் பேட்டி காணும் முறைகள் அதி வேகமாக வளர்ந்து வருகின்றன.
செவ்வி காண்பவர் அந்த அந்தத் துறை சார்ந்த ஆழமான அறிவு கொண்டிருத்தல் மிகவும் அவசியமாகும். தகவல் தருபவரிடம் தொடர்ச்;சியாகக் கேள்விக் கணைகளை சளைக்காது தொடுப்பதற்கு வேண்டிய சுறுசுறுப்பும், தளர்வின்மையும் கொண்டவராகப் பேட்டியாளர் இருத்தல் வேண்டும். தகவலாளரின் ஆழ்மனத்தில் இருக்கும் செய்திகளை வெளிக் கொணரும் வண்ணம் நுட்பமாக உரையாடும் திறமை பேட்டியைச் சிறப்பிக்கும் பொருத்தமான தோற்றமும் சுவையான பேச்சு நடையும் செவ்வியைச் சோர்வு படாது நடத்துவதற்குப் பெரிதும் துணை புரியும்.
பேட்டி காண்பவர் தாம் பேட்டி காணப் போகும் நபருடன், முன்னர் ஏதாவது உடன்படிக்கை செய்திருந்தால், அந்த உடன்பாட்டிற்கு அமையச் செயற்படல் வேண்டும். தனிமனித உரிமைகளைப் பாதுகாக்குஞ் சட்டங்களை மீறாத வண்ணம் பேட்டி காண்பவர் நாணயமான நடத்தை கொண்டவராகத் தமது கடமையில் கண்ணாக இருத்தல் வேண்டும். நேர்காணல் செய்ய விளையும் ஒருவர் தமது தேடலுக்கு ஏற்ற வகையான பேட்டிமுறையினைத் தேர்வு செய்து நிகழ்த்தமுடியும். அத்தகைய பேட்டி முறைகள் பின் வருமாறு பல வகைப் பட்டதாக அமைந்துள்ளன.
எதுவிதமான முன்னேற்பாடுகளும் செய்யாது பேட்டி எடுப்பவர் தகவல் தருபவரை அணுகிப் பேட்டி எடுப்பது முறைப்படுத்தப்படாத பேட்டி (nondirective interview) எனவும், கட்டமைப்பு அற்ற பேட்டி (unstructured interview) எனவும் கூறப்படுகின்றது. இவ்வகையான பேட்டி இடம், காலம், நேரம், பொருள் என்பவற்றினை அனுசரித்து, சுருக்கமான அறிமுகத்துடன் ஆரம்பமாகும். வரையறை, கட்டுப்பாடு எதுவுமின்றி நேர்முகமாக உரையாடல் இடம் பெறும். இம்முறையில் உடனடியானதும்,நுணுக்கமானதுமான தகவல்களைத் தகவலாளியிடமிருந்து வெளிக்கொண்டுவர முடியும்.
பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அறிஞர், கலைஞர், பொதுமக்கள் ஆகியோர் தகவல்களை உடனடியாக வழங்கக்கூடிய திறன் கொண்டவர்கள். அவர்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியதும் அவர்களை அணுகி எடுக்கப்படும் பேட்டிகள் கட்டமைப்பு அற்ற பேட்டிகளாகும். பத்திரிகை நிருபர்கள் இத்தகைய பேட்டிகளைத் தவற விடாது எதிர்கொள்வர். சில சமயம் பேட்டி நேரத்தில் எதிர்பாராத தடைகள் எழக்கூடும். அவ்வாறு ஏற்படக் கூடிய தடைகளுக்கு முகம் கொடுக்கும் திறமை பேட்டி காண்பவருக்கு அவசியமானது. தொடர்பாடலைத் தங்கு தடை இன்றி நிகழ்த்தி, பேட்டி காண்பவர் அரிய, அதிக தகவல்களைப் பெறுவதன் மூலம் பேட்டி சிறப்பாக அமையும் வாய்ப்புக்கள் உண்டு. சந்தர்ப்பத்திற்கு ஏற்ற முறையில் வினாக்களை அடுத்தடுத்து எழுப்பும் சாமர்த்தியம் பேட்டி எடுப்பவருக்கு வேண்டும். வெளிப்படையாக நேருக்கு நேர் இடம் பெறுவதனால் உண்மையும், நம்பகத்தன்மையும் கொண்ட தகவல்களை இவ்வகையிலான பேட்டி முறையில் எதிர்பார்க்கலாம்.
பேட்டி எடுக்கும் முன்னரே தொடர்பு கொண்டு, தகவல் பெறுபவர் தகவல் வழங்குபவர் ஆகிய இரு தரப்பினரும் தம்மைத் தயார்ப் படுத்திய பின்னர் நடாத்தப்படுவதும் ஒரு வகையான பேட்டி முறையாகும். இதனை முறைப்படுத்தப்பட்ட பேட்டி (directive interview) அல்லது கட்டமைப்புடைய பேட்டி (structured interview) என்பர். பேட்டி எடுப்பவர் முன் கூட்டியே வரையறுக்கப்பட்ட வினாக்களைத் தயார் செய்து அது பற்றித் தகவலாளியுடன் கலந்துரையாடுவார். இந்த முறையில் தகவலாளிக்கு வினாக்களைத் தேர்ந்து தயார்ப்படுத்தும் வசதி கிடைக்கின்றது. அதன் பின்னரே பேட்டி காண்பதற்குரிய நேரமும் இடமும் நிர்ணயிக்கப்படுகின்றன.
இவ்வகையான முறைப்படுத்தப்பட்ட பேட்டிகளில் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் தகவல்களைப் பெறுவதில் இடர்ப்பாடுகள் உண்டு. அறிய விரும்பும் எல்லாத் தகவல்களையும் விபரமாக அறிந்து கொள்ள முடியாத சங்கடத்தினைச் சில நேரங்களில் எதிர்நோக்கும் நிலையும் காணப்படலாம். நேரம் ஒதுக்கச் சிரமப்படும் பிரமுகர்களையும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் அரசியல் துறையினரையும், புகழ் பெற்ற கலைஞர்களையும் பேட்டி காண்பதற்கு இவ்வகையான முன்னேற்பாடு செய்யப்பட்ட கட்டமைப்புடைய பேட்டிமுறையினைப் பயன்படுத்துகின்றனர்.
மேலும் குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட சூழலில் நடாத்தப்படும் நேர்காணலை ஒருமுகப்பட்ட பேட்டி (குழஉரளநன iவெநசஎநைற) எனக் கூறுவர். குறிப்பிட்ட ஸ்தாபனத்தின் தேவைக்காகத் தனி நபரால் அல்லது ஒரு சிறு குழுவினரால், குறிப்பிட்ட தனி நபருடன் அல்லது நபர்களுடன் இவ் வகையான பேட்டிகள் நடத்தப்பட்டுத் தகவல்கள் சேகரிக்கப்படும். தேவைப்படும் போது அத் தகவல்களைத் தளமாகக் கொண்டு தமது முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடனே இவ் வகையான பேட்டிகள் ஒழுங்கு செய்யப்படும்.
பெரும்பாலும் இவ் வகையான பேட்டிகள் வர்த்தக விருத்திக்காகவும், விளம்பரத்திற்காகவும் நடத்தப்படுகின்றன. அவ்வாறான பேட்டிகள் ஸ்தாபன ரீதியாக, போதிய முன் அறிவித்தலுடன் இடம் பெறும். பணிக்கு அமர்த்துவோர் ஒழுங்கு செய்யும் நேர்காணல், உடல் நலமருத்துவரின் நேர்காணல் போன்றவை இவற்றில் அடங்கும். வரையறைகள் கொண்ட இவ்வகையான பேட்டிமுறைகளில் உத்தியோகபூர்வமாக, ஆடம்பரமும், போலித்தனமும் வெளிப்படையாகக் காணப்படுவதாக அமைந்திருக்கும்.
குறிப்பிட்ட கால இடையீட்டில் திரும்பத் திரும்ப ஒரே வகையான தகவல்களைத் திரட்டும் பொருட்டு இடம் பெறும் நேர்காணல், பன்முறைப் பேட்டி (சுநிநயவநன iவெநசஎநைற) எனக் கூறப்படும். சமூதாய அரசியல் நிலவரங்களைப் புள்ளிவிபரங்கள் மூலம் அறிய அரசியல் ஸ்தாபனங்களினாலும், தனிப்பட்ட நிறுவனங்களினாலும் இவ்வகையான பேட்டிகள் நடாத்தப்படுகின்றன. குடிசனப் பரம்பல், பொருளாதார நிலை, மக்களின் மனச்சார்பு போன்ற விபரங்களை அறிவதற்காக சந்தர்ப்பம், இடம், காலம், போன்ற அடிப்படையில் நிகழ்த்தப்படும் இவ்வாறான பேட்டிகள் உபயோகப்படும். இத்தகைய பேட்டிகள் அதிக மனித வலுவுடன், பெரும் பொருட் செலவில் பரந்த அளவில் நிகழ்த்தப்படுகின்றன.
மேற்காணும் வகைகளில் தமக்குப் பொருத்தமான பேட்டி முறையில் வேண்டிய விபரங்கள் திரட்டப்படுகின்றன. பல்வேறுபட்ட வழிகளால் அவ்வாறு சேகரித்துப் பெறப்படும் தரவுகள் பொறுப்பு வாய்ந்தவர்களால் தரவாரியாகத் தொகுக்கப்பட்டு ஆய்வாளர்களின் பார்வைக்கு உட்படுத்தப்படும். அவற்றினை நுணுகி ஆய்வதன் மூலம் நம்பகரமான முடிபுகளை முகாமையாளரால் பெற முடியும். முறைப்படி பெற்ற தரவுகளின்; அடிப்படையில் துல்லியமான வழிமுறைகளைத் தேர்ந்து, பொறுப்பதிகாரிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வரைபுகளை ஆக்குகின்றனர். பாரிய திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு, முகாமைத்துவ எந்திரத்தின் ஒரு கருவியாகப் பேட்டி முறைகள் கையாளப்படுகின்றன. இவ்வாறான பேட்டிகள் பிரதேச ரீதியாகவும், சர்வதேச மட்டத்திலும் இடம் பெறுகின்றன. நிகழ்காலத்துப் பேட்டிகள்தான் சமுதாயத்தின் உயிர்த் துடிப்பைக் காட்டும் கைநாடி என்று கூறப்படுகின்றது.