தமிழ் மொழியிலே சங்ககாலம் தொடக்கம் சமகாலம் வரை அறக் கருத்துக்களைக் கூறும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. மிகவும் தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்கள் அகத்திணையையும் புறத்திணையையும் முதன்மைப் படுத்தியபோதிலும் ஆங்காங்கே அறநெறிக் கருத்துக்களையும் வலியுறுத்தியுள்ளன. உதாரணமாகக் கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற சங்கப் பாடலிலே இடம்பெறும்,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” “தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோரன்ன”
என்ற அடிகள் போலப் பல்வேறு பாடல்களில் உயர்ந்த பல அறநெறிக் கருத்துக்கள் கூறப்படுகின்றன.
தமிழ் இலக்கிய வரலாற்று முறையில் சங்கமருவியகாலம் என அழைக்கப்படும் காலம் நீதிநூல்களின் காலமாகக் கருதப்படுகின்றது. இக் காலப்பகுதியை அறநூற்காலம் என்றும் அழைப்பர். வாய்மை, நடுநிலைமை, குற்றம்கடிதல், பெரியோரைப் பேணுதல், கற்புடைமை, பிறர்மனை நயவாமை, பயனில சொல்லாமை, சினம் காத்தல், நட்பினில் பிழை பொறுத்தல் போன்ற பல அறங்களை, இக் காலப் பகுதியில் எழுந்த நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. திருக்குறளோடு நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, சிறுபஞ்சமூலம், திரிகடுகம், பழமொழிநானூறு முதலான நூல்கள் நீதிநூல்களாகக் கூறப்படுகின்றன. மனிதவாழ்க்கைக்குத் தேவையான அறம், நீதி, ஆசாரம், ஒழுக்கம் முதலானவற்றை இக்காலத்து நீதிநூல்கள் வலியுறுத்தின.
மனித இனத்திற்குத் தேவையான பல நீதிக்கருத்துக்களைத் திருக்குறள் போதிக்கின்றது. பண்புடைமை என்னும் அதிகாரத்தில் இருந்து ஒரு குறளை அறநெறியின் அடித்தளமாக எடுத்துக் காட்டலாம்.
“அரம்பாலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்” (997)
மக்கள் அரத்தின் கூர்மை போன்று அறிவுக் கூர்மை கொண்டவராக இருக்கலாம். ஆனால் அவர்களிடம் மற்றவர்களை நேசிக்கும் பண்பு இல்லையானால், அவர்கள் உணர்ச்சி அற்ற மரத்தினை ஒத்தவர்கள் என இப் பாடல் மூலம் மனித நேயத்தின் முக்கியத்துவம் கூறப்படுகின்றது.
தமிழ்மொழியிலே நீதிக்கருத்துக்களைப் பெருமளவுக்கு வலியுறுத்திய புலவர்களிலே ஒளவையாருக்குத் தனித்துவமானதோர் சிறப்பிடம் உண்டு. அவர் பாடிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை, உலகநீதி வெற்றிவேற்கை, நன்னெறி முதலான நீதிநூல்கள் தமிழிலே தோன்றித் தமிழ் மக்களை ‘நீதிவழுவா நெறிமுறையில்’ வாழ்வதற்கு வழி காட்டின. ‘அறம் செய விரும்பு’ என ஆத்தி சூடியிலும், ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ எனக் கொன்றைவேந்தனிலும் கூறிய ஒளவையார், நல்வழி எனும் நூலில் பின்வரும் பாடல் மூலம் சமத்துவ சமுதாய கருத்துடன் தான தருமம் செய்வதன் சிறப்பினைக் கூறுகின்றார்.
சாதி இரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி.
வளரும் பருவத்தில் சிறுவர்கள் தமிழ் அகரவரிசையைப் படிக்கும் போதே அதனுடன் சேர்ந்து நீதிக்கருத்துக்களையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற கல்வியியல் சிந்தனையுடையவராக ஒளவையார் திகழ்ந்தார். அவரது நூல்கள் சிறுவர்களுக்கு மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் நீதிக் கருத்துக்களை அறிவுறுத்துவனவாக அமைகின்றன.
சமண முனிவர்களால் பாடப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ள நாலடிநானூறு எனும் நூலில் பின்வரும் நீதிக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
“அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மை எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார் வாய்ச் சொல்.’’
(பொருள் : நீதி நெறி அறிந்து அதன்படி ஒழுகுங்கள். இறப்பு நிச்சயம் என உணர்ந்து தீமைக்கு அஞ்சுங்கள். பிறரின் கடும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். எவருக்கும் வஞ்சனை செய்யாதீர்கள். தீயவர்களின் நட்பை விரும்பாதீர்கள். சான்றோர்களின் நல்ல போதனைகளை ஏற்று ஒழுகுங்கள். )
நீதிநூற்காலம் எனக் கூறப்பட்ட சங்கமருவிய காலத்திலே எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு காப்பியங்களும் கதைகளின் வழியே, அறக்கருத்துக்களையே வலியுறுத்துகின்றன.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந் தூட்டும்”
எனறு; கூறபப்டும ;மூனறு; சிறபப்hன நீதிகக்ருதது;கக்ள ;சிலபப்திகாரதத்pன் அடிப்படைப் பாடுபொருளாக அமைந்துள்ளன.
பல்லவர் காலம் எனும் பக்திநெறிக்காலத்திலே எழுந்த நூல்களில் பெருமளவுக்குப் பக்திப்பாடல்களே பாடப்பட்டன. இவை பக்தி உணர்ச்சியை மேம்படுத்துவனவாக அமைந்து அறநெறிக் கருத்துக்களைச் சொல்லிச் செல்கின்றன. சமண மதத்தைச் சேர்ந்த துறவிகளால் ஆக்கப்பட்டு நிலையிலாத உலக வாழ்வின் பற்றில் உழலாது நிரந்தரமான உண்மையைத் தேடிப் பக்தி செய்யும் படி போதிக்கும் இலக்கியங்களையே இக்காலப் பகுதியில் காணமுடிகின்றது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார், மாணிக்கவாசகர் போன்ற சைவ நாயன்மார்கள் ஆயிரக்கணக்கான தேவார திருவாசகங்களைப் பாடி அருளினார்கள். அதே போன்று வைணவ சமயத்தினைச் சேர்ந்த பெரியாழ்வார், பொயi;கயாழவ்hர,; பூததத்hழவ்hர் போனN;றார ; பல பாசுரஙக்ளைப ;பாடினாரக்ள.; இறை உணர்வைப் பெறுவதற்கு தீய மார்க்கத்தினை விட்டு விலகி வாழ வேண்டும் என்பதுவே அவர்கள் அருளிச் செய்த பக்திப்பாடல்களின் உட்பொருளாக அமைந்துள்ளன.
பல்லவர் காலப்பகுதியை அடுத்து வரும் சோழர் காலத்தைக் காவிய காலம் என அழைப்பது வழக்கம். தமிழ்க் காவியங்களின் சிகரம் எனப் போற்றப்படும் கம்பராமாயணம் இக்காலப்பகுதியிலேயே தோன்றியது. அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பொருளாகக் கொண்ட அடிநாதமாகக் கொண்ட கம்பராமாயணம் வாழ்வியலுள் காணப்படும் பல்வேறு வகையான நீதிக்கருத்துக்களை கதையூடாக வலியுறுத்திச் செல்கின்றது. இக்காவியத்திலே அரசநீதி, தேசப்பற்று, குருபக்தி, மனைவியின் கடமை, கணவனின் கடமை, குடிமக்கள் கடமை சாதிபாராட்டாமை முதலான பல்வேறு கருத்துக்களும் பொதிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தருமம் வெல்லும் அதர்மம் தோற்கும் என்பதை உலகுக்குச் சிறப்பாக உணர்த்திய காவியமாகக் கம்பராமாயணத்தைக் குறிப்பிடலாம். கதாபாத்திரங்களினூடு சமூகநீதிகள் பலவற்றை காவிய இரசனையுடன் மக்கள் மனதில் பதியும்படி சொல்லிச்சென்ற காவியங்களிற் கம்பராமாயணத்திற்குச் சிறப்பிடம் உண்டு.
தமிழ் மொழியில் எழுந்த காப்பியங்கள், காவியங்கள், சிற்றிலக்கியங்கள் மட்டுமன்றித் தனிப்பாடல்கள் கூட இலைமறை காய் போன்று நீதிக் கருத்துக்களை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளதைக் காண்கின்றோம். காவியங்களும் புராணங்களும் சமூகநீதியை, நீதிநெறியில் அமைந்த தனிமனித வாழ்வியலை, அரசதர்மத்தை வலியுறுத்துகின்ற அதேவேளை அநீதி, ஆணவம், அகம்பாவம், அகந்தை முதலியவற்றின் அழிவையும் வலியுறுத்தத் தவறவில்லை.
19ஆம் நூற்றாண்டு முதலாகப் புதிய தலைமுறையினர் தமது படைப்புகளினூடு சமூகநீதிகள் பலவற்றை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, நாவலர் தமது பாடநூல்களிலே அறநெறிக்கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தமிழில் எழுந்த ஆரம்பகால நாவல், சிறுகதை முதலியனவும் ஒருவகையிலே நீதிக்கருத்துக்களை உட்பொருளாகக் கூறின. பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்கள் பலவும், தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெறுவதைக் கூறுவதனைக் காணமுடிகின்றது. மேலும் பாரதியார், பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை போன்ற பலர் சமுதாய நீதி, சுதந்திரம் சமத்துவம் பற்றிப் பல இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.
மக்களின் வாழ்வு சுபீட்சமாக விளங்குவதற்கு மூடநம்பிக்கைகள் ஒழிந்து மடமை நீங்கி சமூகத்தில் நன்னெறிகள் யாவராலும் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். அவ்வாறான பரந்த சமதர்ம நோக்கத்தின் அடிப்படையில்தான் பண்டுதொட்டு இன்றுவரை தமிழ்நூல்களில் அறநெறிக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தீமைகள் யாவும் அழிந்து நன்மைகள் ஓங்குதல் வேண்டும் என்பதனையே தமது படைப்புக்களின் இலட்சியமாகக் கொண்டு அறிஞர் பெருமக்கள் அழியாத பல இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.