ஓர் ஆற்றங்கரையில் இருந்த மரத்திலே ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த ஆற்றிலே ஒரு முதலையும் வசித்து வந்தது. மரத்திலே இருந்த பழங்களைச் சாப்பிட்டு முதலையும், குரங்கும் நண்பர்கள் ஆயின. இருவரும் நெடுநேரம் அங்கே இருந்து விளையாடுவார்கள். இது முதலையின் மனைவிக்குப் பிடிக்கவில்லை.
ஒரு நாள் முதலையின் மனைவி குரங்கின் இருதயத்தைச் சாப்பிட்டால் தனது நோய் குணமாகிவிடும் என்று கூறியது. தனது கணவனிடம் தந்திரமாக அந்தக் குரங்கை அழைத்து வரும்படி கூறியது. இதனை அறிந்த நண்பனான முதலை மிகவும் கவலை கொண்டது. ஆனால் குரங்கிடம் தனது மனைவிக்கு உடம்பு சுகமில்லை என்ற செய்தியை மட்டுமே கூறியது.
குரங்கு தானும் வந்து முதலையின் மனைவியைப் பார்ப்பதாகக் கூறி முதலையின் முதுகில் ஏறி அமர்ந்தது. நடு வழியில் போகும் போதுதான் முதலை உண்மையைக் கூறியது. உடனே குரங்கு ஆழமாகச் சிந்தித்தது. “நண்பா! நீ ஏன் இதனை முன்னரே கூறியிருக்கக் கூடாது. நான் என் இதயத்தைக் கழற்றி அந்த மரத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். நாம் திரும்பிச் சென்று அதனை எடுத்து வருவோம்” என்றது.
முதலையும் அதனை நம்பி, அந்த மரத்தடிக்குத் திரும்பிச் சென்றது. உடனே குரங்கு முதலையின் முதுகிலிருந்து விரைவாக இறங்கி மரத்தில் ஏறிப் பாதுகாப்பாக உட்கார்ந்தது. முதலையைப் பார்த்து “நண்பா! இதயத்தை யாராவது மரத்தில் வைப்பார்களா? உன் மனைவி என்னைச் சூழ்ச்சியால் கொல்லப் பார்த்தாள். நான் எனது புத்திக் கூர்மையால் தப்பித்துக் கொண்டேன்” என்றது.
ஆபத்து வரும்போது தெளிவாகச் சிந்தித்தால், துன்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற உண்மையை நாம் இக்கதை மூலம் அறியமுடிகிறது.
_______________________________________________________________________________________________________________________________________________
_______________________________________________________________________________________________________________________________________________
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
உரவோர் என்கை இரவாது ஈதல்.
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
ஏவா மக்கள் மூவா மருந்து.
ஐயம் புகினும் செய்வன செய்.
ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.
ஒளவையார்.
_______________________________________________________________________________________________________________________________________________