பாடம் 10: படிக்கும் அறை

படத்தைப் பாருங்கள். படத்தில் உள்ளது வீட்டில் உள்ள ஓர் அறை. உங்கள் வீட்டிலும் இப்படி ஓர் அறை இருக்கிறதா? இது நரேனின் படிக்கும் அறை. அழகாகவும் ஒழுங்காகவும் இருக்கிறதல்லவா?

அறையில் போதியளவு வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளன. வீட்டில் ஏனைய சத்தங்கள் நரேனின் படிக்கும் அறையில் கேட்பதில்லை. தரையில் இளங் கபில நிற (Light brown) தரை விரிப்பு போடப்பட்டுள்ளது. அறை மிகவும் சுத்தமாக இருக்கிறது. அறையின் வலது மூலையில் படிக்கும் மேசை உள்ளது. மேசையில்

ஒரு பேனாத் தாங்கியும் மேசை விளக்கும் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மேசை நாட்காட்டியும் வைக்கப்பட்டுள்ளது. புத்தக அடுக்குகளில் புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டுள்ளன. மேசையின் அருகில் ஒரு கழிவுக் கூடை வைக்கப்பட்டுள்ளது.

அறையில் இடது மூலையில் ஒரு கணினியும் அதற்குரிய உபகரணங்களும் மேசையில் வைக்கப்பட்டுள்ளன. படிக்கும் மேசைக்கு ஒரு நாற்காலி இருப்பது போல இதற்கும் இரு கதிரைகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடுகளிலும் அவற்றின் கல்வித்தரங்களுக்கு ஏற்ப, படிக்கும் அறைகள் மாறுபடும். பெற்றோர்களின் வசதிகளுக்கு ஏற்பவும் பிள்ளைகளின் அறைகள் இருக்கும். சில வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் ஒரே அறையைப் படிப்பதற்காக பயன்படுத்துவர். நாம் எமது அறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே வேளையில் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேறவும் வேண்டும்.

நரேனின் அறையில் தேவையற்ற பொருட்கள் காணப்படவில்லை. அவன் இடையூறு இல்லாமல் அமைதியாகப் படிப்பதற்கு இந்த அறை மிகவும் உதவியாய் உள்ளது. படிப்பதற்கு வேண்டிய முக்கியமானவை எல்லாம் அவனது படிப்பறையில் காணப்படுகிறது.

நரேன் தனது அறையைச் சுத்தமாக வைத்திருப்பதனைப் பெரிதும் விரும்புவான். வாரத்தில் ஒரு தடவைக்குக் குறையாது தனது அறையினைச் சுத்தம் செய்வான். அவனது பெற்றோரும், சகோதரரும், நண்பர்களும் நரேனின் அறை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருப்பதனைக் கண்டு பாராட்டுவார்கள்.