![]() |
![]() |
![]() |
நாம் குழந்தைப் பருவம் முதல் பேசிவரும் தமிழ் மொழி எமது தாய்மொழி ஆகும். தமிழ்மொழி ஓர் இனிமையான மொழி. தமிழ் என்பதற்கு அன்பு பக்தி இனிமை எனப் பொருள் உண்டு. உலகில் உள்ள மூத்த மொழிகளிலே தமிழும் ஒன்றாகும். தமிழைத் “தமிழ்த்தாய்” என்று அன்போடும், பணிவோடும் வணங்குவர். தமிழ் இசைத்தமிழ், இயற்றமிழ், நாடகத்தமிழ் என மூன்று வகைப்படும். பல ஆயிரம் வருடங்களிற்கு முன்பே பல இலக்கிய இலக்கண நூல்கள் தமிழ் மொழியில் எழுந்துள்ளன.
நாம் தமிழைப் பிழையில்லாமல் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தமிழ் இலக்கணம் உதவுகிறது. தமிழ் இலக்கியங்கள் தமிழரின் வாழ்க்கை முறைகளை விளக்கிக் கூறுகின்றன. தமிழிலே பழமை வாய்ந்த பல சிறந்த நூல்கள் இருக்கின்றன. அவற்றுள் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். திருவள்ளுவர், ஒளவையார், தொல்காப்பியர், நக்கீரர், பரணர், கபிலர், பூதன் தேவனார், பாரதியார், பாரதிதாசன், சி.வை.தாமோதரனார் உ.வே.சுவாமிநாதஐயர், கம்பர், சமயக்குரவர்கள், யாழ்ப்பாண ஆறுமுகநாவலர், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர், நவாலியுர் சோமசுந்தரப்புலவர், போன்ற பலரும் தமிழைப் பேணி வளர்த்தார்கள்.
தமிழ் எங்கள் உயிர் போன்றது. தமிழ் மக்களாகிய நாம் எங்கே வாழ்ந்தாலும் தமிழைக் கற்க வேண்டும். எமது வீடுகளில் தமிழிலேயே பேச வேண்டும். பழமையூம் பெருமையூம் கொண்ட தமிழ்மொழியின் சிறப்புக்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் வேண்டும்.