பூவைத் தேடிப் பறந்து திரிவேன்
வண்ணத்துப் பூச்சியும் அல்ல.
தொட்டவர்களை நான் கொட்டியும் விடுவேன்
குளவிப் பூச்சியும் அல்ல.
மாந்தர் குடிக்க மருந்தும் தருவேன்
மருத்துவர் தானும் அல்ல.
நான் யார்?
சிந்தியுங்கள்.....பிள்ளைகளே, சிந்தியுங்கள். நீங்கள் மனிதர்கள். நானோ ஒரு சின்னஞ்சிறிய பூச்சி எனது மூளையும் மிகச் சிறியது. ஆனாலும் உங்களைப் போலவே எனது இனத்தாரும் கெட்டிக்காரர்கள் தான். எங்களுக்குப் பறக்கவும் நடக்கவும் பார்க்கவும் முகரவும் முடியும். ஏன் நடனமாடக்கூட முடியும். உங்கள் வீடுகளில் உள்ளவை போலவே எங்கள் கூடுகளிலும் பல அறைகள் உள்ளன. எங்களுக்கும் கணிதம் தெரியும் ஆச்சரியமாக இருக்கிறதா?
எங்கள் கூட்டின் அறைகள் அறுகோண வடிவத்தில் அமைந்திருப்பதே அதற்கு சாட்சி. நாங்கள் ஒரே கூட்டில் ஆயிரக் கணக்கில் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வோம். எங்கள் கூட்டத்திற்கு ஒரு தலைவி இருப்பார். நாங்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தேனிருக்கும் மலர்களைச் சரியாகக் காண்போம். தேனையும் கொண்டுவந்து கூட்டின் வதைகளில் சேர்ப்போம். அதனையே நீங்களும் எடுத்துச் சுவைக்கிறீர்கள். இப்போது நான் யாரென உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
நான் ஒரு தேனீ !
எங்களிடமிருந்து தேனை எடுத்துக் கொள்ளும் நீங்கள் எங்களுக்கு என்ன உபகாரம் செய்கிறீர்கள். பிள்ளைகளே சிந்தியுங்கள். நீங்களும் எங்களுக்கு உதவலாம். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நிறைய மலர்ச்செடிகளை நட்டு வளருங்கள். இருக்கின்ற மலர்ச் செடிகளையும் பராமரியுங்கள். இச் செயல் உங்கள் வீட்டையும் அழகுபடுத்தும், எங்களுக்கும் மகிழ்ச்சி தரும்.
கொட்டுதல் | - குத்துதல் |
மருத்துவர் | - வைத்தியர் |
முகர்தல் | - மணத்தல் |
வதை | - தேன்கூடு |
உபகாரம் | - உதவி |
மகிழ்ச்சி | - சந்தோசம் |
மாந்தர் | - மனிதர் |
சிந்தித்தல் | - யோசித்தல் |
மலர் | - பூ |
சுவை | - உருசி |
பராமரித்தல் | - ஆதரித்து வளர்த்தல் |