பாடம் 20:இலங்கையிலுள்ள சில தலங்கள்

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பல பிரசித்தி பெற்ற இடங்கள் இருக்கின்றன. அதேபோல் இலங்கையிலும் பல புகழ் பெற்ற புராதன இந்து மதத்தலங்கள் இருக்கின்றன. ஈழம், லங்கா, இலங்கை, தப்ரபேன், சிலோன் எனப் பெயர்கள் கொண்ட நாடு ஸ்ரீலங்கா எனத்தற்போது பெயர்கொண்டுள்ளது. அங்கே மதம், வரலாறு சம்பந்தமான பல தலங்கள் புகழ் பெற்று விளங்குகின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் முருகன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பானவை. உலகின் பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் அங்கே செல்வார்கள். அகன்ற வீதிகளும், அருகே இருக்கும் ஆறுமுக நாவலரின் சிலையும் இந்த இந்து ஆலயத்திற்கு மேலும் அழகு சேர்ப்பவையாகும்.

திருகோணமலையில் இருக்கும் கோணேஸ்வரர் ஆலயம் இயற்கை அழகுடன் கூடிய கடற்கரையில் அமைந்திருக்கின்றது. இலங்கையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. மட்டக்களப்பில் இருக்கும் மீன்பாடும் வாவியும், இயற்கைக் காட்சிகளும் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவன. இதேபோல் மன்னாரில் இருக்கும் திருக்கேதீஸ்வரமும், தெற்கே இருக்கும் கதிர்காமமும் பாடல் பெற்ற தலங்களாகும். திருக்கேதீஸ்வரத்தின் அருகே இருக்கும் பாலாவியும் புனிதமானது. இவைகளோடு கிண்ணியாவில் இருக்கும் சுடு நீர்க் கிணறுகளும் வரலாற்றுப் பிரசித்தி பெற்றவை.

இலங்கையின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் சிவனொளிபாதமலையும் இயற்கையாக அமைந்த ஒரு குன்றாகும். இதன் உச்சியிலே இந்துக் கடவுளாகிய சிவபெருமான் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்ததற்கான அடையாளம் இருப்பதாக நம்புவதாலேயே இதற்குச் சிவன்-ஒளி-பாதம்-மலை என்று பெயர் வந்தது. கிறிஸ்தவ, முஸ்லிம் சமயத்தவர்களும் இம்மலையினை புனிதத்தலமாக உரிமை கொண்டாடுவர். சகல மதத்தவர்களும் தமது நம்பிக்கைகளின்படி அங்கே சென்று வழிபடுவது வழக்கமாகிவிட்டது.

கிறிஸ்தவர்கள் மத்தியில் மடு மாதா கோவில், பௌத்தர்கள் மத்தியில் கண்டியில் அமைந்திருக்கும் தலதா மாளிகை போன்றவை பிரபலமானவையாகும். தம்புல்ல குகை, சிகிரியா ஓவியங்கள் என்பன மிகவும் வரலாற்றுப் பெருமை பெற்றவை. ஆண்டு தோறும் பல சுற்றுலாப் பயணிகள் இவ்விடங்களுக்குச் சென்று வருவார்கள். இலங்கையில் இன்னும் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்றன. காலம் காலமாக இடம் பெற்ற படையெடுப்புக்களாலும் யுத்தங்களினாலும் பல இடங்கள் அழிக்கப்பட்டும், கவனிப்பார் அற்றும் இருக்கின்றன.

சொற்களின் பொருள்களை அறிவோம்

பிரசித்தி - புகழ்
பக்தர் - வழிபடுவோர்
தலம் - புனித இடம்
குன்று - மலை
யுத்தம் - சண்டை
அற்றும் - இல்லாமலும்