பாடம் 7: செய்யுந் தொழிலே தெய்வம்

இன்றைய உலகம் சுமுகமாக இயங்குவதற்கு பல்வேறுபட்ட தொழில்களின் இடைவிடாத செயல்பாடு அவசியம். அத் தொழில்கள் நேரடியான மனித வலுவினையும் மனிதனால் ஆக்கப்பட்ட எந்திர வலுவையும் கொண்டதாக அமைந்துள்ளது. அவ்வாறானசேவைகள் மக்களின்உயிர்நாடிகள் போன்றவை. சுகாதார சேவை, போக்குவரத்துச் சேவை போன்ற துறைகளில் கடமை செய்பவர்கள் மக்களின் தினசரி வாழ்க்கைக்கு இன்றியமையாதவர்கள்.

“செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நமது செல்வம்”. இதனைப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற புலவர் ஆவார். தொழில் செய்தால் உழைப்பு வரும். உழைப்பில்லாமல் சீவிக்க முடியாது. நாம் உண்ண, உடுக்க உழைக்க வேண்டும். சீரான வீட்டில் வசிக்கவும் உழைக்கவேண்டும். ஆதலால் எவரும் தொழில் தேடிச் செய்ய வேண்டும். “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பது எமது ஆன்றோர் பொன்மொழி. இதனாலே முயற்சிசெய், முன்னேறலாம் என்ற எண்ணம் ஏற்படும்.

எந்தத் தொழிலைச் செய்தாலும் அதனைக் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செய்தல் வேண்டும். பிறக்கும்போது எல்லா மக்களும் சமமே என்பார்கள். பிறந்த பின் சிலர் ஏழைகளாகவும், சிலர் செல்வர்களாகவும், வருகிறார்கள்.இதற்குக் காரணம் என்ன என்று எண்ணிப் பார்க்கலாம். எதைச் செய்தாலும், விரும்பித் திறமையாய்ச் செய்வதனாலே, உயர்ச்சியும் புகழ்ச்சியும் செல்வமும் செழிப்பும் வரும். திருவள்ளுவரும் தனது பாட்டிலே, “தோன்றில் புகழொடு தோன்றுக”; என்கிறார். புகழொடு வாழத் தொழில்களில் ஈடுபட வேண்டும். பல நாடுகளில் தொழிலை வைத்து மனிதனைத் தரம் பிரித்துத் தாழ்த்தும் கொடுமை இதுவரை மாறவில்லை. அரசியல் சட்டங்கள் மூலம் சமுதாய பேதங்களை ஒழிக்க சமுதாயத் தலைவர்கள் பாடு படுகின்றனர். எமது இனத்தவர்களில் பலர் மேலை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வாழுகின்றார்கள். அவர்கள் தமது தகுதிக்கு ஏற்ற பல்வேறு தொழில்களைச் செய்கின்றார்கள். தற்காலத்தில் சுதந்திரமாக தாம் விரும்பிய தொழிலைத் தெரிவு செயும் வாய்ப்பும் வசதியும் யாவருக்கும் உண்டு. தான் விரும்பிய தொழிலைச் செயும் போது தொழிலாளி உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் தனது கடமையைச் செய்வான். அவ்வாறு எல்லாத் தொழிலாளரும் தமது கடமைகளைச் செயும் போது மொத்த உற்பத்தித் திறன் பெருகும். மக்களும் நாடும் வளம் பெறும். “காவல் செய்வோனும் சேவையே செய்கிறான்”; என்று மில்ரன் என்ற ஆங்கிலப் புலவர் கூறுகிறார். அதன்மூலம் தொழில்களில் பேதம் இல்லை என அறிகிறோம்.

மேற்குலக நாடுகளில் பல்வேறுபட்ட தொழில்களைக் கற்பிக்கும் நிறுவனங்கள் உண்டு. அத்துடன் தொழில்நுட்பக் கல்லூரிகள், சர்வகலாசாலைகள் போன்றனவும் உண்டு. முன்பு சில தொழில்களே இருந்தன. இன்று தொழிற்பிரிவுகள் ஏராளம் உண்டு. இன்று படித்த பலர் விஞ்ஞானிகளாய், ஆய்வாளர்களாய், மருத்துவர்களாய், எந்திரவியல் நிபுணர்களாய், ஆசிரியர்களாய், தாதிகளாய், வியாபாரம் செய்பவர்களாய் இருக்கிறார்கள். நாமும் ஒரு துறையைத் தேர்ந்து விரும்பிக் கற்க வேண்டும். இதனால் அறிவு வளர்வதுடன் தொழில் வாய்ப்புகளும் பெருகும்.

“மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார்.”

மேற்கூறிய பாடல் ஒருவர் ஒரு வேலையைச் செய்ய ஆரம்பித்தால், வேறு விடயங்களில் தமது பொழுதை வீணாக்காது, ஒருமித்த கவனத்துடன் முயன்று தம் முயற்சியில், வெற்றி பெறுதல் வேண்டும் என்ற கருத்தைக் கூறுகின்றது.