என் பெயர் வசந்தன். நான் என் பெற்றோருடன் கனடாவில் வசிக்கிறேன். இங்கு மக்கள் பெரும்பாலும் பெற்றோர் பிள்ளைகள் அடங்கிய சிறிய குடும்பங்களாகவே வாழ்கின்றனர். எனது குடும்பம் சற்றுப் பெரியது. அப்பா, அம்மா, நான், அக்கா, தம்பி, தங் கை, தாத்தா, அம்மம்மா, சித்தப்பா ஆகியோர் ஒன்றாக வாழ்கின்றோம். எமது வீடு ஆறு அறைகள் கொண்ட வசதியான பெரிய வீடாகும். அத்துடன் மோட்டார் வாகனங்கள் பாதுகாப்பாக வைப்பதற்குரிய கூடமும், மூன்று குளியல் அறைகளும் உண்டு.
மேல்நாட்டில் பணியாட்களுக்குக் கூலி அதிகம். எனவே வீட்டில் உள்ளவர்களே வீட்டுப் பொறுப்புக்களைப் பகிர்ந்து செய்ய முனைகின்றார்கள். எங்கள் வீட்டில் வேலைகளைப் பகிர்ந்து நாங்களே செய்கின்றோம். பண வசதி, போக்குவரவு வசதி, தேவையான பொருட்களை வாங்கும் வசதி கொண்டு வாழ்ந்த போதிலும் ஒன்றாக ஒரு வீட்டில் வாழ்பவர்களுக்குப் பல பொறுப்புக்கள் உண்டு. பெரும்பாலும் தாயும் தந்தையும் குடும்பத்தின் பொறுப்புக்களைக் கவனித்துக் கொள்வார்கள். அவர்களால் செய்ய முடியாத வேலைகளைப் பணியாட்களைக் கொண்டு செய்விப்பார்கள். சில சமயங்களில் அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த உறவினர்களும் ஒத்தாசை புரிவார்கள்.
எனது வீட்டில் காலையில் எழுந்தவுடன் எல்லோரும் தங்கள் தங்கள் படுக்கைகளை மடித்துச் சீர் செய்வார்கள். பரபரப்பாகக் காலைக்கடன்களை முடித்துத் தத்தமது கடமைகளுக்குப் புறப்படுவதற்குத் தயாராவார்கள். அப்பாவும் அம்மாவும் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களின் உழைப்பே எங்கள் வாழ்க்கைச் செலவுக்கு உதவுகின்றது. வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாங்குவர். தாத்தாவும் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவார். மோட்டார் வாகனத்தை ஓட்டுவதும் அதன் திருத்த வேலைகளைச்
செய்விப்பதும் அப்பாவின் பொறுப்பாகும். அவர் எமது முற்றத்தில் வளரும் புற்களையும், செடிகளையும் மிகுந்த கவனம் எடுத்து அளவாக வெட்டி அழகுபடுத்துவார். தாத்தாவும் ஓய்வான நேரங்களில், தோட்டத்தில் புதிய செடிகளை நாட்டுவதிலும், அவற்றைப் பராமரிப்பதிலும் அக்கறை காட்டுவார். அம்மா யாவருக்கும் வேண்டிய உணவுப் பண்டங்களைச் சமையல் செய்வார். அம்மம்மாவும் சமையலுக்கு உதவி செய்வார். சமைத்த உணவின் ஒரு பகுதியைக் குளிரூட்டியில் சேமித்து, சமையல் செய்யாத நாட்களில் பயன்படுத்துவோம். உணவருந்தியபின் சமைத்த பாத்திரங்களையும் உணவுண்ட பாத்திரங்களையும் கழுவித் துடைத்து, அடுக்குவதை அம்மாவும் அப்பாவும் சேர்ந்து செய்வார்கள். நானும், அக்காவும் அவர்களுக்கு ஒத்தாசையாகச் சுத்தம் செய்ய உதவுவோம்.
எங்களுக்குத் தேவையான ஆடையணிகளையும், பாடசாலை உபகரணங்களையும் எமது பெற்றோர் தேவை அறிந்து வாங்கித் தருவார்கள். பெரும்பாலும் அம்மம்மா காலை உணவைத் தயாரிப்பதில் உதவியாக இருப்பார். யாவரும் எடுத்துச் செல்வதற்கான மதிய உணவையும் அம்மா பெட்டிகளில் இட்டுத் தருவார். தாத்தா காலையில் தம்பியையும் தங்கையையும் பாடசாலைக்குக் கூட்டிச்செல்வார். மாலையில் அவர் சிரமம் பாராது மகிழ்ச்சியாக அவர்களைக் கூட்டிக் கொண்டு வருவார். எமது பெற்றோர் பணி முடித்து வீடு வரும் வரைக்கும் எங்களையும் வீட்டையும் தாத்தாவும், அம்மம்மாவும் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள். சனிக்கிழமை வீட்டைச் சுத்தப்படுத்தும் நாளாகும். அப்பாவும் சித்தப்பாவும் தூசி துடைப்பான்களால் தளபாடங்களின் மீது படிந்துள்ள தூசியைத் துடைப்பார்கள். அதன்பின் வீட்டுத் தரையைக் ‘காற்றுறிஞ்சிக்’ கருவியால் சுத்தம் செய்வார்கள். சமையல் அறையை அம்மாவும் அம்மம்மாவும் சுத்தம் செய்வார்கள். அக்காவும் நானும் குளியல் அறைகளைச் சுத்தம் செய்வோம். தம்பியும் தங்கையும் சிறியவர்கள். அவர்களுக்கு அன்றாட வீட்டு வேலைகளில் பொறுப்புகள் இல்லை. அவர்கள் தங்கள் பொம்மைகளையும் புத்தகங்களையும் அவற்றிற்கான இடங்களில் அடுக்கி வைக்க ஊக்கப்படுத்துவோம்.
அக்காவும் அம்மாவும் சனிக்கிழமைகளில் அழுக்கான உடைகளைத் துவைத்து, காயவைத்து, மடித்து வைப்பார்கள். மேசை விரிப்புகளையும், துடைக்கும் சிறிய பெரிய துவாலைகளையும் சுத்தமாக வைத்திருப்பதில் அம்மா கவனம் எடுப்பார். துவைப்பதற்கும், உலர்த்துவதற்கும் மின்சாரத்தில் இயங்கும் எந்திரத்தை நாங்கள் உபயோகிக்கிறோம்.
நாம் எமக்குத் தேவையான உடைகளைப் பெரும்பாலும் வார இறுதி நாட்களில் மின் அழுத்தியை உபயோகித்து அழுத்தம் செய்வோம். சில சமயங்களில் தேவை ஏற்படின், அவரவர் தமது உலர்ந்த ஆடைகளை அழுத்தி மடித்து வைப்பதும் உண்டு.
எனது தந்தையாரின் மோட்டார் வாகனத்தைச் சுத்தமாக வைப்பதற்கு நான் சில சமயங்களில் உதவி செய்வேன். எனது நண்பன் தனது தந்தையாரின் வாகனத்தை வாராவாரம் சுத்தம் செய்வதை மேலதிகக் கடமையாகச் செய்வதாக கூறுவான். அதற்காக அவனது தந்தையார் பணம் கொடுப்பதுண்டு. நாம் வசிக்கும் வீட்டில் மேலும் சிறு சிறு வேலைகள் பல உண்டு. வாரத்தில் ஒருநாள் குப்பைகூளங்களைப் பைகளில் அல்லது கொள்கலன்களில் இட்டுத் தெருவோரத்தில் வைத்தல் வேண்டும். கோடையில் முற்றத்தில் வளரும் புல்லை அளவாகவும், அழகாகவும் இரண்டு வாரத்துக்கு ஒருமுறையாவது வெட்டுதல் வேண்டும். பனிக்காலத்தில் தெரு ஓரத்திலும் தெருவிலிருந்து வீட்டுக்குச் செல்லும் பாதையில் பெய்யும் படிந்திருக்கும் பனியை வழித்து ஒருபுறமாகத் தள்ளிவிடல் வேண்டும். இவ்வேலைகளை அப்பாவுடன் சித்தப்பாவும் சேர்ந்து செய்வார்.
குடும்பவாழ்க்கை சீராக நிகழ, குடும்ப அங்கத்தவர்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்தல் மிக அவசியம். வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வதால் தனி ஒருவருக்கு வேலைப்பழு காரணமாக உடல் அலுப்பும், மன அழுத்தமும் ஏற்படுவது தவிர்க்கப்படும். வீட்டில் மகிழ்ச்சியும் நிலவும். நாமும் பொறுப்புணர்ச்சியும் கடமையுணர்ச்சியும் கொண்ட சமூக அங்கத்தவர்களாக வளர்ச்சி அடைவோம்!