பாடம் 20:ஒளவையின் அறிவுரை

ஒளவையார் எழுதிய நீதி நூல்களில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகியவை தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக அமைந்தவைகளாகும். அவற்றில் கீழ்க்காணும் பாடல்களை நாமும் பயின்று பயனடைவோம்.

1. கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே – விற்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீரொழுகு சான்றோர் சினம்.

அரும் சொற்கள் : சினம் - கோபம், வடு - காயம், சான்றோர் - மேலோர், கயவர் - கீழான குணங்கள் கொண்டோர்.
பொருள் :கயவர்களது கோபம் கல்லைப் பிளந்ததுபோல் வடு ஒரு போதும் மறையாது இருக்கும். ஆனால் சான்றோர்களது கோபம் மறுகணமே இருந்த இடம் தெரியாது மாறி விடும்.

2. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்கு

தன்தேச மல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்றவிட மெல்லாம் சிறப்பு.

அரும் சொற்கள் : மாசு - குற்றம், சீர்தூக்கின் - ஆராய்ந்து பார்த்தால்.
பொருள்: நாட்டை ஆளும் அரசனுக்கு அவனுடைய நாட்டிலேதான் சிறப்பு. ஆனால் கல்வி கற்றவனுக்கோ உலகத்தில் எங்கு சென்றாலும் சிறப்பு.

3. கொம்புளதற் கைந்து குதிரைக்குப் பத்துமுழம்

வெம்புகரிக் காயிராம்தான் வேண்டுமே - வம்புசெறி

தீங்கினர் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி.

அரும் சொற்கள் : கரி - யானை, வம்பு - குற்றம், நீங்குவது - விலகிப்போவது, நெறி - முறைமை.
பொருள்: கொம்பு உள்ள மிருகத்திற்கு கிட்டப் போகாது ஐந்து முழ தூரத்திலும், குதிரைக்கு பத்து முழ தூரத்திலும், சினம் கொண்ட யானைக்கு ஆயிரம் முழ தூரத்திலும், இருத்தல் வேண்டும். ஆனால் துட்டத்தனம் கொண்ட தீயவரைக் கண்டால் அவர்கள் கண்களில் படாமல் வெகு தூரத்தில் விலகி இருப்பதே சிறந்த முறை ஆகும்.

4. சாதி இரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையில் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி.

அரும் சொற்கள்: சாற்றுதல் - கூறுதல், மேதினி - உலகம், பட்டாங்கு - நெறிமுறை.
பொருள்: பூமியில் வாழும் மனிதர்கள் மத்தியில் இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளன. இதனையே நீதி தவறாத நல் மார்க்கத்தில் நின்று தருமம் செய்பவர்களை உயர்குலத்தோர் என்றும் அவ்வாறு தருமம் செய்யாதோரைத் தாழ்ந்த குலத்தோர் என்றும் நெறிமுறையான நூல்கள் கூறும்.

ஆசிரியர் குறிப்பு: மாணவர்கள் தரம் மிகுந்த பாடல்களை மனனம் செய்யவும். கற்கவும் உற்சாகப்படுத்துங்கள். பாடல்கள் போதிக்கும் நெறிகளை இலகுவாக விளங்கும்படி கலந்துரையாடவும்.