முன்னொரு காலத்தில் கோபால் என்பவன் வட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்துவந்தான். பணம், தங்க நகைகள், பாத்திரங்கள் போன்றவற்றை வாடகைக்கு விட்டு அநியாய வட்டி வாங்குவான். அநேகர் அவனிடம் தங்கள் பொருட்களையும், மானம் மரியாதையையும் இழந்திருக்கிறார்கள். இதனைக் கண்டு வருந்திய தென்னாலி இராமன் வியாபாரிக்கு எப்படியாவது புத்தி புகட்ட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டான்.
தென்னாலி இராமன் அந்த நாட்டு அரசரின் மதிப்பிற்கு உரியவன். ஒரு நாள் கோபாலின் கடைக்குச் சென்று தனது தாயாரின் நினைவாக நூறு ஏழைகளுக்கு உணவு வழங்க விரும்புவதாகக் கூறினான். அதற்காக சற்றுப் பெரிய பாத்திரங்கள் தேவையாக இருக்கின்றன என்றான். கோபால் “அதற்கென்ன உங்களுக்கு இல்லாததா? எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றான். தென்னாலி இராமன் சில பாத்திரங்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றான். இரண்டு நாட்கள் கழிந்தபின் கொண்டுபோன பாத்திரங்களுடன் அதே போன்று சிறிய பாத்திரங்கள் சிலவற்றையும் கொண்டு வந்து கொடுத்தான் தென்னாலி இராமன். “நீங்கள் கொடுத்த பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தன. எனது வீட்டிற்குப் போனவுடன் அவை போட்ட குட்டிகள்தான் இவை” என்று கூறினான்.
வட்டிக் கடைக்காரனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. தென்னாலி இராமன் ஒரு முட்டாள் போலிருக்கிறதே என்று மனதிற்குள் எண்ணினான். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. “அப்படியா! இருக்கலாம் இருக்கலாம். நான் அவைகளைக் கவனிக்கவில்லை. நீங்கள் எவ்வளவு உண்மையானவர்” என்று கூறி எல்லாவற்றையும் வாங்கி உள்ளே வைத்தான்.
ஒரு வாரம் கழித்து மறுபடியும் தென்னாலி இராமன் கடைக்கு வந்து “நான் ஒரு யாகம் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். அதற்கு வெள்ளியாலும், தங்கத்தாலும் செய்யப்பட்ட பாத்திரங்கள் வேண்டும்” என்றான். பேராசை வட்டிக் கடைக்காரனின் கண்களை மறைத்தது. “தங்கமும் வெள்ளியுமா? அதற்கு வாடகை மிக அதிகமாகுமே?” என்றான். “அது மட்டுமல்லாமல் அந்தப் பாத்திரங்கள் எல்லாம் கர்ப்பமாக உள்ளன. விரைவில் குட்டி போடவும் கூடும். அதனால்தான் தயங்குகிறேன்.” என்று கூறினான்.
உடனே தென்னாலி இராமன் “நான் எவ்வளவு உண்மையானவன் என்று உங்களுக்குத் தெரியும்தானே. கவலைப்படாமல் கொடுங்கள். வரும்போது குட்டிகளுடன் கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்றான்.
மூன்று நாட்களாகத் தென்னாலி இராமன் பாத்திரங்களுடன் கடைக்கு வராமையால் பதைபதைத்த வட்டிக் கடைக்காரன் தென்னாலி இராமன் வீட்டுக்கு ஓடிவந்தான். தென்னாலி இராமன் தனது வீட்டுத் திண்ணையில் சோகமாக உட்கார்ந்திருந்தான். “மூன்று நாட்களாகிவிட்டன. ஏன் எனது பாத்திரங்களைத் திருப்பிக் கொண்டு வந்து தரவில்லை?” என்று ஆவலுடன் கேட்டான். “அதனை எப்படிச் சொல்வது என்றுதான் தயங்குகிறேன். நீங்கள் கொடுத்த பாத்திரங்கள் எல்லாம் குட்டி ஈனும்போது இறந்துவிட்டன” என்று பதில் கூறினான் தென்னாலி இராமன்
வட்டிக் கடைக்காரன் அந்த நாட்டின் அரசரிடம் சென்று “தென்னாலி இராமன் தனது பாத்திரங்களைப் பொய் சொல்லி அபகரித்துவிட்டான்” என்று முறையிட்டான். எல்லாவற்றையும் தீர விசாரித்த அரசன் “பாத்திரங்கள் குட்டி போடுவது உண்மையானால், அவை பிரசவ சமயத்தில் இறந்து போகவும் கூடுமல்லவா?” என்று தீர்ப்புக் கூறினார். தனது பேராசையினால் வந்த அவமானத்தால் வாய் திறவாமல் தனது கடைக்குப் போய்ச் சேர்ந்தான் அந்த வட்டிக்கடைக்காரன். தென்னாலி இராமன் அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் விற்று அநியாய வட்டி கொடுத்தவர்களுக்கு உதவி செய்தான்.