பாடம் 6: பராக் ஹசெயின் ஒபாமா

2009ம் ஆண்டு தைமாதம் இருபதாம் நாள் உலக வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத நாளாகும். அமெரிக்க சனாதிபதியாக வெள்ளை மாளிகைக்கு கறுப்பு இன பராக் ஒபாமா 44வது சனாதிபதியாகப் பதவியேற்றார். இவரே கறுப்பு இன முதலாம் சனாதிபதியாவார். இவர் 2009ம் ஆண்டிற்கான நோபல் சமாதானப் பரிசு பெற்றதும் பெருமைக்குரியதாகும். இவருடைய தந்தை கென்யாக் கறுப்பு இன ஆபிரிக்கர். ஒபாமாவுடைய தாயார் அமெரிக்க ஆங்கில வெள்ளை இன மாது. பராக் ஒபாமா 1961ம் ஆண்டு ஆவணித் திங்கள் நாலாம் நாள் பிறந்தார்.

17ம் நூற்றாண்டில் கறுப்பு இனத்தவர்கள் ஆபிரிக்காவிலிருந்து வெள்ளை இனத்தவர்களால் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமைகள் மந்தைகள் போல விற்று வாங்கப்பட்டனர். இதைக் கண்ட மனித நேயம் கொண்ட அன்றைய சனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அடிமை விலங்கு அறுக்கைச் சட்டம் இயற்றினார். சட்டம் இருந்தாலும் பெரும்பாலான வெள்ளை இனத்தவர் கறுப்பு இனத்தவரைச் சமமாக மதிக்கவில்லை. 1960 வரை கறுப்பு, வெள்ளை இன மக்களிடையே பேதங்கள் காட்டப்பட்டன. கறுப்பு இன மக்களுக்கான தனிப் பள்ளிக்கூடங்கள், பேருந்துகள், வைத்திய நிலையங்கள் ஏற்படுத்தி வேறுபாடுகள் ஏற்படுத்தப்பட்டன.

கறுப்பு இனத் தலைவரான மாட்டின் லூதர் கிங் ஜுனியர் குடி உரிமை மற்றும் விடுதலை இயக்கம் ஏற்படுத்திப் பேதம் நீக்க முனைந்தார். அவர் பேச்சிலே மீண்டும் மீண்டும் கூறப்பட்ட சொற்கள் ~~நான் கனவு காண்கிறேன். எனது நான்கு பிள்ளைகளும் அவர்களின் தோல் நிறத்தால் அல்ல அவர்களின் உள்ளத்திலே நிறைந்த நற் பண்புகளால் மதிக்கப்படும் தேசியத்தில் வளருவார்கள் எனக் கனவு காண்கிறேன்|| என்பதே. அவர் பேதமற்ற சமுதாயத்தைக் காண விரும்பியதால் அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். சனாதிபதி லின்டன் ஜோன்சன் இனபேதம் நீக்கும் சட்டத்தை 1964ம் ஆண்டு சட்டமாக்கினார். இதனால் லூதர்கிங் கண்ட கனவு 2009ல் சனாதிபதியாகும் கறுப்பு இனத்தவரான பராக் ஒபாமாவால் நனவாக்கப்படுகிறது.

பராக் ஒபாமா தன் தேர்தல் பேச்சுக்களிலே "ஆம், நாம் மாற்றத்தைக் கொண்டு வருவோம், ஆம் எங்களால் முடியும்" என எல்லாக் கூட்டங்களிலும் கூறினார். "அமெரிக்காவில் வாழ்பவர் கறுப்பராக இருந்தாலென்ன வெள்ளையராய் இருந்தாலென்ன, வேறெந்த நிலையிலிருந்தாலும் நாமெல்லாம் அமெரிக்கர்களே" என்பார். இத்தகைய மனிதநேயம் அவரை அமெரிக்காவின் நாற்பத்தினாலாவது அமெரிக்க சனாதிபதியாகத் தெரிந்தெடுப்பதற்கு வாய்ப்பானது.

திரு பராக் ஒபாமா, புலம் பெயர்ந்து வாழும் எம் போன்ற சகல இன மக்களுக்கும் வழிகாட்டி ஆகிறார். ஒபாமா இரண்டு வயதாயிருக்கும் போது, தந்தை தாயைப் பிரிந்து சென்றுவிட்டார். அங்கு தன் பாட்டன் பாட்டியுடன் ஹவாயில் வாழ்ந்தார். இவ்வாறு வாழ்ந்தும் கல்வியில் முன்னேறினார். உயர்கல்வியை ஹாவாட் பல்கலைக்கழகத்தில் படித்து சட்டத் துறையில் பட்டம் பெற்றார். சிகாகோ நகரில் கறுப்பு இன மக்களிடையே சமூகசேவையில் ஈடுபட்டார். அங்கு மக்களின் ஆதரவைப் பெற்று, அமெரிக்க காங்கிரசில் சனநாயக கட்சி சார்பாக "செனேற்றர்" ஆகத் தெரிவு செய்யப்பட்டார். பெருமைதரும் சனாதிபதிப் போட்டியில் பங்குபற்றி, அதிக பெரும் பான்மையான வாக்குகளைப் பெற்று, 20.01.2009ல் முதலாவது அமெரிக்க கறுப்பு இன சனாதிபதியானார்.

பிள்ளைகளே! நீங்களும் நாங்கள் சிறுபான்மை இனம் என்று உங்களைக் குறைத்து எண்ண வேண்டாம். சமூகத் தொண்டில், செய்யுந் தொழிலில், அரசியலில் நேர்மையாக முற்போக்குச் சிந்தனையுடன் செயற்பட்டால் வெற்றி வாழ்வைப் பெற முடியும். பராக் ஒபாமாவின் தாரக மந்திரக் கூற்று, ~~ஆம்! நாம் மாற்றத்தைக் கொண்டு வருவோம், ஆம்! எங்களால் முடியும்|| இது உங்களை ஊக்கும் என்று நம்புங்கள். மேலும் எங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தும் கறுப்பு வெள்ளை நிறபேதம், ஆண் அதிகாரம், சாதி பேதம் ஆகிய மனித நேயத்துக்கு ஒவ்வாத மனக் கோலங்களை மாற்றுங்கள். பாரதியார் பாடிய ~~எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம்|| என்ற உயர்ந்த பெரு நோக்குள்ளவர்களாக வாழ்வோம், வளருவோமாக! "ஆம், எங்களால் முடியும்".