பாடம் 7: சத்துணவு

உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் உணவு அவசியம். உணவை உண்ணாவிடில் யாரும் இந்த உலகில் உயிர் வாழவே முடியாது. ஆகவே எமது கண்களுக்குத் தெரியாத கிருமிகள் தொடக்கம், பூமியில் வாழும் புல், பூண்டு, செடிகள், கொடிகள், மரங்கள், மீன்கள், மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் வரை எல்லாவற்றிற்கும் உணவு அவசியமாகின்றது.

எமது உடல் இயங்க வேண்டிய சக்தியைக் கொடுப்பது உணவு. உடலின் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களையும் உணவு தருகின்றது. உடலில் உள்ள உறுப்புகள் சீராக இயங்குவதற்கும், நோய்கள் இன்றித் திடகாத்திரமாக இருப்பதற்கும் சத்துள்ள உணவு அவசியம். இந்தச் சத்துணவு சமநிலை உணவாகவும் இருத்தல் அவசியம். இதனால்தான் பல நாடுகளில் சத்துணவு கிடைக்காத இடங்களில் சத்துணவுத் திட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றார்கள். எமது உடலின் இயக்கங்களுக்குத் தூய்மையான நீரும் இன்றியமையாதது.

அரிசி, கோதுமை, குரக்கன், சோளம், உருளைக்கிழங்கு போன்றவற்றில் மாச்சத்து அதிகம் உண்டு. வேலை செய்வதற்கு வேண்டிய சக்தியை இவை தருகின்றன. பருப்பு வகைகள், பால், முட்டை, மாமிச உணவு வகைகளில் புரதம் அதிகம் உண்டு. சிறுவர்கள் புரதச் சத்துள்ள உணவு வகைகளை நிறைய உண்ண வேண்டும். இது உடல் வளர்ச்சிக்கு அவசியம். எண்ணெய், நெய், வெண்ணெய், பாலாடை, இறைச்சி முதலிய உணவுகளிலே கொழுப்புச் சத்து அதிகமாக உண்டு. இது சக்தி தரும் உணவு. மேலதிக கொழுப்பு உடலில் சேமித்து வைக்கப்படும் என்பதால் மிகக்கூடிய அளவு கொழுப்பு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

பழங்களிலும், மரக்கறி வகைகளிலும் உயிர்ச்சத்துகள் அதிகம் உண்டு. கீரை, பொன்னாங்காணி, வல்லாரை, முருங்கையிலை முதலிய இலைக்கறி வகைகளில் கனியுப்பு, உயிர்ச்சத்து, நார்ச்சத்து அதிகமாக உண்டு. நாம் நார்ச்சத்து, நீர் ஆகியன அடங்கிய உணவு வகைகளையும் தெரிவு செய்து உண்ண வேண்டும். ஒரு நாளில் எட்டுக் கிண்ணம் நீர் அல்லது 1.5லீற்றர் நீருக்குக் குறையாமல் அருந்துதல் அவசியமாகும்.

தானிய வகை, பழம், மரக்கறி 6 பங்கு, புரத உணவு 3 பங்கு, கொழுப்பு 1 பங்கு கொண்ட உணவு சம உணவு அல்லது நிறையுணவு எனப்படும். ஆரோக்கியமான வாழ்வுக்கு நிறையுணவு மிக அவசியம்.

இந்தப் பரந்த உலகம் விஞ்ஞான வளர்ச்சியால் குறுகிவிட்டது. மக்களின் மனப் பாங்குகளும் மாறி வருகின்றன. இதனால் எமது நாட்டு உணவுகளையும் மேற்குலக நாட்டு மக்கள் இப்போது விரும்பி உண்கின்றனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்குலக நாடுகளிலிருந்து அராபியர்கள், போத்துக்கீசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்கள் முதலானோர் வாசனைத் திரவியங்களான கறுவா, ஏலம், கராம்பு, சீரகம், உள்ளி, மல்லி, மிளகு, கடுகு, இஞ்சி, வெந்தயம், மஞ்சள், சாதிக்காய் போன்ற சரக்குகளை கீழைத் தேசங்களிலிருந்து வாங்கிச் சென்றனர்.

தமிழருடைய உணவுகளிலே பலசரக்கு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பலசரக்குகள் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும் பயன் படுத்தப்படுகின்றன. பலசரக்கு ஒவ்வொன்றும் தனித்த மருத்துவப் பண்பு கொண்டது. தற்போது பெருகி வரும் மூலிகை மருந்து வகைகளுக்கும் இப் பலசரக்குகள் பெரிதும் பயன்படுகின்றன.