ஆரணி தன் தோழி தாரணியை இரவு விருந்திற்குத் தனது வீட்டிற்கு அழைத்திருந்தாள். தாரணி மிக அண்மையிலேயே இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்கு வந்தாள். எனவே தன் தோழிக்காக ஆரணி இலங்கையில் தமிழ் மக்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகள் சிலவற்றுடன் மேல் நாட்டு உணவுவகைகள் சிலவற்றையும் சமைக்கும்படி தனது அம்மாவிடம் கூறினாள்.
ஆரணியின் அம்மா இடியப்பமும், ரொட்டியும் செய்தாள். அத்துடன் உண்பதற்காக பருப்புக்கறியும், உருளைக் கிழங்குப் பிரட்டலும், சம்பலும், சொதியும் செய்துவைத்தார். ஆரணி உருளைக் கிழங்கு வறுவல், பீற்சா, வெதுப்பிய இறைச்சித் துண்டு ஆகிய இந்நாட்டு உணவு வகைகள் சிலவற்றைச் சமைத்தாள். சாப்பாட்டு மேசையை அலங்கரித்து அதில் தாம் தயாரித்த உணவு வகைகளையும் பழரசத்தையும் அழகாக அலங்கரித்து வைத்தாள்.
தாரணி தான் கொண்டு வந்த முறுக்கு, லட்டு, எள்ளுருண்டை ஆகியவற்றை ஆரணியிடம் கொடுத்தாள். நீண்ட காலத்திற்குப் பழுதடையாமல் இருக்கக்கூடிய இப் பலகாரங்களைத் தான் தாயகத்தில் இருந்து கொண்டு வந்ததாகக் கூறினாள். ஆரணியின் அம்மாவிடம் ஊறுகாய், வடகமும் புழுக்கொடியலும் கொடுத்தாள். இவையும் நீண்டகாலம் பழுதடையாமல் இருக்கக் கூடியவை ஆகும்.
ஆரணியும் தாரணியும் உணவு வகைகளைச் சுவைத்தபடியே தாங்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்கள். ஆரணியின் அம்மா இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டே உணவைப் பரிமாறினாள். அதனிடையே தான் தாயகத்தில் விரும்பிச் சாப்பிட்ட பாலப்பம், நெய்த்தோசை, கூழ், கொத்து ரொட்டி ஆகியவற்றைப் பற்றி ஆசையுடன் கூறினார்.