பல நாட்களுக்குப் பின் அன்றுதான் இடியோடு மழை “சோ” எனப் பொழிந்து கொண்டிருந்தது. எனது எசமானி அவசரமாக அந்த மழையில் வெளியில் போவதற்காக மூலையில் கிடந்த என்னை விரித்துப் பார்த்தாள். எனது உடம்பில் பல பாகங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அத்தோடு எனது எலும்புகள் இரண்டு முறிந்திருந்தன. இதைக் கண்ட எசமானி இனி நான் உதவ மாட்டேன் என்று வெறுப்புடன் என்னை ஒரு மூலையில் எறிந்தாள். நான் எனது அவல நிலையைக் கண்டு கண்ணீர் வடித்த வண்ணம் எனது முற்கால சந்தோசமான வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன்.
இங்கிலாந்து தேசத்தில் உள்ள ஓர் ஊரில் பெரிய கட்டடத்தினுள் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அங்கேதான் என்னையும் என் நண்பர்களையும் உருவாக்கினார்கள். முதலாவதாக, ஒரு வளைந்த கைப் பிடியுடைய கம்புடன் பல கம்பிகளை எலும்புகள் போலக் கட்டினார்கள். பின், கம்பிகளை மூடி ஒரு கறுப்புத் துணியைப் போர்வையாகப் போர்த்து, நூலால் தைத்தார்கள். எங்களில் ஒருசிலரை ஒன்று சேர்த்து, ஒரு வண்டியிலும் பின் கப்பலிலும் ஏற்றி அனுப்பினார்கள்.
நாங்கள் ஒரு துறைமுகத்தில் வந்து இறங்கினோம். எங்களின் வரவைப் பார்த்துப் பல வியாபாரிகள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னையும் என் நண்பர்களையும் வாங்கிச் சென்றார். தன் கடையில் பார்வைக்காக
அழகுடன் அடுக்கி வைத்தார். கடைக்கு வந்த ஓர் அழகி என் அழகையும், கம்பீரத்தையும் கண்டு, விருப்புடன் என்னை வாங்கிச் சென்றாள். மழை நாட்களில் என்னை அன்புடன் எடுத்துச் சென்று உபயோகிப்பாள். வீடு வந்து சேர்ந்ததும் ஒருபுறமாக என் ஈரம் காய உலரவைப்பாள். பின் என்னைச் சுருட்டிக் கவனமாகத் தன் மேசையில் வைப்பாள். நானும் மகிழ்ச்சியோடு என் சேவையைச் செய்து கொண்டிருந்தேன்.
ஒருநாள் காற்று அகோரமாக வீசியது, மழையும் இடைவிடாமல் கொட்டிக் கொண்டிருந்தது. அந்தக் காற்றிலும் மழையிலும் என் எலும்புகளில் இரண்டு முறிந்துவிட்டன. இதனால் கவலைப்பட்ட என் எசமானி, வீடு வந்து சேர்ந்ததும் என்னை ஒரு மூலையில் வீசி எறிந்துவிட்டாள். நான் கண்ணீர் விட்டு அழுதேன்.
அதற்குப் பின் எசமானி என்னைத் தொடுவதே இல்லை. ஒருநாள் ஓர் எலி வந்து என் உடம்பில் சில பாகங்களை நன்னி, ஓட்டைகளை ஏற்படுத்தியது. அதனால் எனக்கு அழுகையே வந்துவிட்டது.
இன்னொருநாள் என்னை விரித்துப் பார்த்த என் எசமானி, நான் இனிப் பயன்பட மாட்டேன் என்று வெறுப்புடன் கூறிவிட்டுச் சென்றாள். என் அழகும், கம்பீரமும் அழிந்துவிட்டன. “நான் இனி உதவ மாட்டேனா?, ஐயோ கடவுளே!” என்று அழுது கொண்டு இந்த மூலையில் முடங்கிக் கிடக்கிறேன். யாராவது என்னைப் பழுதுபார்த்து உபயோகிக்க முன் வருவார்கள் என்று எதிர்பார்த்த வண்ணம், எனது நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன்.