(இலண்டன் ஹீத்துரோ விமான நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் இடத்தில் இளவயதினர் நால்வர் சந்தித்து ஒருவரை ஒருவர் தமிழில் அறிமுகம் செய்து உரையாடிக் கொள்கிறார்கள்.)
குமரன் : வணக்கம், என்னுடைய பெயர் குமரன்.
நந்தன் : உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னுடைய பெயர் நந்தன்.
குமரன் : அப்படியா! இவர் யார்?
நந்தன் : இவர் என்னுடைய தங்கை, பெயர் கீதா. இவர் யார்?
குமரன் : இவர் எனது ஒன்றுவிட்ட சகோதரி. பெயர் செல்வி. இலங்கையில் இருந்து பாடசாலை விடுமுறைக்காகக் கனடா வந்திருந்தார். இப்போது நாங்கள் எனது அம்மா அப்பாவுடன் இலங்கைக்குத் திரும்பிச் செல்கிறோம்.
நந்தன் : நீங்கள் கனடாவில் இருந்தா வருகிறீர்கள்?
குமரன் : ஓம், நாங்கள் கனடாவில் இருந்துதான் வருகிறோம். நீங்கள்..?
கீதா : நாங்கள் இலண்டனில் வசிக்கிறோம். இப்போது பாட்டா, பாட்டியைப் பார்க்க நாங்களும் அம்மா அப்பாவுடன் இலங்கைக்குப் போகிறோம். செல்வி : உங்களுக்கு இலண்டன் பிடித்திருக்கிறதா?
கீதா : ஓம், பிடித்திருக்கிறது. இலங்கையில் உள்ள பிரச்சனை காரணமாக எங்கள் பெற்றோர் புகலிடம் தேடி இங்கே வந்திருந்தார்கள். நாங்கள் இலண்டனில் பிறந்ததால் சூழ்நிலைக்கேற்ப வாழப் பழகிக் கொண்டோம்.
குமரன் : எங்கள் பெற்றோரும் அப்படித்தான். கனடாவிற்குப் புகலிடம் தேடி வந்தார்கள். நான் கனடாவில் தான் பிறந்தேன்.
கீதா : செல்வி நீங்கள் எங்கே பிறந்தீங்கள்?
செல்வி : நான் இலங்கையில்தான் பிறந்தேன். இலங்கையில்தான் வசிக்கிறேன்.
கீதா : அப்படியா, ஓய்வு நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
செல்வி : புத்தகம் படிப்பதும், விளையாடுவதுமே தான் எங்கள் முக்கிய பொழுது போக்காக இருக்கிறது. அது மனதுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.
நந்தன் : அங்கே என்ன விளையாட்டுக்கள் விளையாடுவீர்கள்?
செல்வி : நாங்கள் வலைப்பந்தாட்டம், “றவுன்ட்றேஸ்”, கிட்டிப்புள் அடித்தல், ஒளித்துப் பிடித்து விளையாடுவது, கெந்திப் பிடித்தல், கண்கட்டி விளையாடுவது, தாச்சிக்கோடு, எவ்விடம் எவ்விடம் புளியடி புளியடி..
கீதா : அது என்ன புளியடி புளியடி. புதுமையான விளையாட்டாக இருக்கிறதே!
செல்வி : ஒருவரின் கண்ணைப் பொத்திக் கொண்டு அழைத்துச் செல்லும்போது அவர் கேட்கும் கேள்விக்கு இப்படிப் பதில் சொல்வோம். அதாவது அருகே உள்ள மரத்தின் பெயரைச் சொல்லுவோம். இப்படி நிறைய விளையாட்டுக்கள் எங்களிடம் இருக்கின்றன. நான் தற் பாதுகாப்பிற்காகக் கராட்டி பழகுகின்றேன். ஆண்கள் காற்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம் போன்றவற்றையும் விளையாடுவார்கள். இதைவிட மூளைக்குப் பயிற்சி கொடுக்கும் உள்ளரங்கில் விளையாடும் விளையாட்டுக்களும் இருக்கின்றன.
கீதா : அது என்ன விளையாட்டுக்கள்?
செல்வி : தாயம், ஆடு புலி, கொக்கான் வெட்டுதல், டக் டிக் டொக் என்று பலவிதமான விளையாட்டுக்கள் இருக்கின்றன.
குமரன் : கனடாவில் நாங்கள் பனியில் சறுக்கி விளையாடுவோம். ஐஸ் ஹொக்கி விளையாடுவோம். கோடைகாலத்தில் துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், ~பேஸ்போல்| போன்றவற்றை விளையாடுவோம். நீச்சல் குளத்தில் நீந்துவோம். நல்ல பாடல்கள் கேட்போம், படங்கள் பார்ப்போம். விழாக்களுக்குச் செல்வோம். சில சமயம் விடுமுறை முகாங்களுக்குப் போவோம்.
கீதா : ஓய்வு நேரத்தை நான் வேறு விதமாகப் பயன் படுத்துவேன். பல நாட்டு தபால் தலைகளையும், நாணயங்களையும், பிரபலமானவர்களின் புகைப்படங்களையும் சேகரிப்பேன். அதில் இருந்து பல விடயங்களையும் அறிந்து கொள்ள முடியும். இதைவிட தன்னார்வத் தொண்டராக வைத்தியசாலைக்கும், முதியோர் இல்லத்திற்கும் சென்று அவர்களுக்கு உதவி செய்கின்றேன்.
நந்தன் : இலண்டனில் நாங்கள் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற வெளியரங்கு விளையாட்டுகள் விளையாடுவோம். நாங்கள் விடுமுறை முகாங்களுக்குப் போவோம். இதைவிட, புத்தகங்கள் வாசிப்பேன், குறிப்பாக ஈழத் தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம் கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவேன்.
குமரன் : நானும் அப்படித்தான். எங்கள் முன்னோர்கள் பற்றி அவர்கள் வாழ்ந்த இடங்கள் பற்றி அறிந்து கொள்வதில் எனக்கும் அதிக ஆர்வமுண்டு. எங்கள் வரலாற்றை எமது முன்னோர் தகுந்த முறையில் ஆவணப் படுத்தவில்லை. எங்கள் தலைமுறையினராவது அதை ஆவணப் படுத்தி அந்தக் குறையை நீக்க வேண்டும்.
செல்வி : அது நல்ல யோசனை. நிச்சயமாக நாங்கள் அதைச் செய்ய வேண்டும். என்னால் முடிந்த அளவு ஆவணப்படுத்துவதற்கு நான் கட்டாயம் உங்களுக்கு உதவி செய்வேன்.
கீதா : புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்று பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அந்த மொழி அறிவைப் பயன்படுத்தி தமிழர் வரலாற்றை உலகறியச் செய்யவேண்டும். ஓய்வு நேரத்தில் இதைத் தங்கள் வரலாற்றுக் கடமையாக எடுத்துச் செய்வார்கள் ஆயின் எங்கள் தமிழ் மொழி மிகவும் சிறப்புப் பெறும். இதனால் எங்கள் இனம் உலகில் மேன்மை அடையும்.
நந்தன் : எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிந்நாடே! எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியைக் காக்க நாங்கள் பாடுபட்டு உழைப்போம்.
குமரன் : பாரதி சொன்னது போல எங்கள் தந்தையர் நாடு என்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே! நிச்சயமாக நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு அதற்காகப் பாடுவோம்.