பாடம் 16: இன்றைய உலகிற் கணினி

இன்றைய உலகில் எங்கும் கணினி என்பதே பேச்சாக உள்ளது. கணினி இன்றி உலகம் இல்லை என்னும் அளவுக்கு அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகின்றது. கல்வி, கைத்தொழில், வணிகம், மருத்துவம், போக்குவரத்து, விளையாட்டு, ஊடகம், அரசியல், பாதுகாப்பு, விண்வெளி முயற்சிகள் முதலிய துறைகள் அனைத்தும் கணினியில் தங்கியுள்ளன.

கணினி என்பது திட்டமிட்டவாறு தரவுகளைக் கையாளவல்ல ஒரு மின்பொறி. கணினியின் இயக்கத்துக்கு மின்சாரம் அவசியமாகும். கணினி என்ற சொல் கணி என்ற வினையடியாகப் பிறந்தது. கணி என்றால் கணக்கிடு அல்லது மதிப்பிடு என்று பொருள்.

மருத்துவத் துறையிற் சிலவகைச் சத்திர சிகிச்சைகள் கணினியின் உதவியோடு செய்யப்படுகின்றன. சில படை விமானங்கள் மாலுமி இன்றிக் கணினியாற் செலுத்தப்படுகின்றன. விண்வெளி ஆய்வுக்குக் கணினி பெரிதும் உதவி வருகின்றது.

ஆரம்ப காலத்தில் கணிதம் தொடர்பான செயல்களைச் செய்யவே கணினி பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இன்றோ எழுதுதல், எழுதியவற்றைத் திருத்துதல், அந்தரங்க தகவல்களைக் கோப்புகளிற் பாதுகாத்தல், படங்கள், ஆவணங்கள் போன்றவற்றைச் சேமித்தல், பொதுத் தகவல்களை இணையத் தளங்களிற் சேகரித்து வைத்தல், மின்னஞ்சல்களை அனுப்புதல், செய்திகளை வெளியிடுதல், ஒளிப்படங்கள்,இசைப் பாடல்கள் சேமித்தல், வெளியிடல் போன்ற பன்முகப் பணிகளைச் செய்யக் கணினி பயன்படுத்தப் படுகின்றது.

தொடக்கத்திற் கணினி அளவிற் பெரியதாகவும் அதிக இடத்தை எடுப்பதாகவும் இருந்தது. இன்றைய கணினிகள் அளவிற் சிறியனவாக உள்ளன. அவற்றை மேசைகளிலோ மடிகளிலோ வைத்துப் பயன்படுத்த முடியும். ஆரம்பத்தில் தொழில் நிலையங்களில் அல்லது அலுவலகங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி இன்று வீடுவரை வந்துவிட்டது. சொந்த வாகனங்களை வைத்திருப்பதைப் போலத் தனியாட் கணினியை வைத்திருப்பதுவும் ஒரு தேவையாகிவிட்டது.

இன்று கணினிகள் பலவிதமான வடிவங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றுள் மேசைக்கணினி, மடிக்கணினி, சட்டைப்பைக் கணினி, கைக்கடிகாரக் கணினி என்பன சில ஆகும். ஒரு சாதாரண மேசைக் கணினி கணிக்கும் பெட்டி, திரை, விசைப்பலகை, சுட்டி, குறுவட்டு, நெருவட்டு போன்ற கண்ணால் காணக்கூடிய ஆகிய வன்பொருள் உறுப்புக்களைக் கொண்டுள்ளது. கணிக்கும் பெட்டியே கணினியின் மையச் செயலகம். இதுவே அதன் மூளையாகும்.

இன்றைய காலத்திற் கணினிக் கல்வி முக்கிய இடத்தை வகிக்கின்றது. கணினிக் கல்வியால் நிரல் மென் பொருள்களை ((Programme Software) திட்டமிட்டு உருவாக்கும் வல்லமையும் வளர்ந்து வருகின்றது. குறுவட்டு, நெடுவட்டு போன்றவற்றில் பொதிந்துள்ள நிரல்களே மென் பொருட்களாகும். மென் பொருட்கள் கணினியைக் கொண்டு; புதுப்புதுச் செயற்பாடுகளைச் செய்விக்க உதவுகின்றன.

கணினியில் பல தரவுகள் நிரலாக்கல் (Programme) வழியாக உள்ளீடு (input) செய்யப்பட்டுள்ளன. இவை கணினியின் மையச் செயலகத்தின் நினைவகத்தில் (memory) பதித்து வைக்கப்பட்டுள்ளன. விசைப் பலகை அல்லது சுட்டி மூலம் ஒருவர் மையச் செயலகத்துக்குக் கட்டளை இடலாம். மையச் செயலகம் கட்டளைப்படி தன்னிடமுள்ள தரவுகளை ஆராய்ந்து (Processing) விடையைத் தளமுகம், அச்சாக்கி, குறுவட்டு அல்லது ஒரு கோப்புக்கு வெளியீடு (ழரவிரவ) செய்கின்றது.