மாந்தர் தம் ஓய்வு நேரப் பொழுது போக்குக்காகப் பல்வேறு ஆடல், பாடல்களையும், விளையாட்டுக்களையும் போட்டிகளையும் ஏற்படுத்தினர். இன்று உலகளாவிய முறையில் நிகழும் போட்டிகளில் நான்கு வருடத்துக்கு ஒருமுறை நிகழும் ஒலிம்பிக் போட்டியே முதன்மையானது. அனைத்துலக ஒலிம்பிக் அமைப்பினரால் தெரிவு செய்து, தீர்மானிக்கப்படும் நகரத்திலேயே இப் போட்டிகள் இடம்பெறும்.
கிரேக்க தேசத்தில் சூஸ் (Zeus) கடவுளுக்கு மகிமை செலுத்தும் நிகழ்வாக கி.மு. 776ம் ஆண்டு ஒலிம்பியா நகரில் இப்போட்டி ஆரம்பமானது. அன்று ஓட்டப்போட்டி, மெய்வல்லுநர் போட்டி என்பவற்றுடன் கவிதைப் போட்டியும் நடைபெற்றன. நாலாண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒலிம்பிக் போட்டி கி.பி. 393ல் ரோமச் சக்கரவர்த்தி தியடோசியஸ் உத்தரவினால் நிறுத்தப்பட்டது.
1896ம் ஆண்டில் ஏதென்ஸ் நகரில் மீளத் தொடங்கப்பட்டது. இதைத் தொடக்கிய பெருமை பிரெஞ்சு நாட்டவரான பியர் குபர்தன் (Baron Pierre de Coubertin) என்பவருக்கு உரியதாகும். இவரின் நோக்கில் இப்போட்டியின் இலக்கு “விரைவாய், உயர்வாய், உறுதியாய் மக்கள் உடலிலும் உள்ளத்திலும் அழகுற ஓங்குவதாகும்”. மேலும
சாதி, மத, நிற, அரசியல் என்பவற்றுக்கு அப்பால் மக்கள் ஒன்றுபட்டு சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும் எனவும் கூறினார். இந்த இலட்சியத்தை வெவ்வேறு நிறமுடைய, பின்னப்பட்ட வளையங்கள் உடைய வெண்ணிற 'ஒலிம்பிக்' கொடி உணர்த்துகின்றது. 1896இல் ஓட்டப் போட்டிகளும், மெய் வல்லுநர் போட்டிகளுமே நிகழ்ந்தன. இன்றோ பல விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தனித்து
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பனியிற் சறுக்கி விளையாடும் போட்டிகள் மட்டும் நிகழும். இவ்விரு போட்டிகளும் நிகழ்ந்தபின் வலுக் குறைந்தோர்களுக்கு ஊக்கம் அளிக்கப் 'பரா' ஒலிம்பிக் போட்டியும் நடைபெறுகின்றது. ஒலிம்பிக் போட்டியின் ஆரம்பத்தில் ஒலிம்பிக் தீபம் ஏற்றி அதன் முன் நடுவர்களும் போட்டியாளர்களும் சத்தியப் பிரமாணம் எடுப்பர். பின்பு ஒலிம்பிக் கொடி ஏற்றப்படும். போட்டிகள் முடிந்த பின் தீபம் அணைக்கப்பட்டு கொடி இறக்கப்படும். பின்பு ஒலிம்பிக் கொடி அடுத்த போட்டி நிகழும் பட்டினத்தின் நகர பிதாவிடம் கையளிக்கப்படும்.
உலக மக்கள் விருப்புடனும் ஆவலுடனும் பார்க்கும் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்பத்திலும் முடிவிலும் எல்லா மக்களையும் கவரும் நோக்கில் ஆடல், பாடல், கவின்கலை நிகழ்ச்சிகள், வரலாற்றுக் காட்சிகள், வாண வேடிக்கை என்பன வியக்கத்தக்க வகையில் நடைபெறும்.
போட்டியில் வெல்லும் முதல், இரண்டாம், மூன்றாம் வல்லுநர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பரிசாக அளிக்கப்படும். போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் அதிவிரைவாக ஓடித் தங்கப் பதக்கம் பெறுபவருக்கும், அதிகூடிய பதக்கங்களைப் பெறும் வீரர்களுக்குமே உலக அளவில் சிறந்த பாராட்டுக்கள் வழங்கப்படும்.
ஒலிம்பிக் போட்டி உலக மக்களை அரசியலுக்கு அப்பால் ஒன்றுபடுத்தும் உன்னதமான போட்டி என்று தயங்காது கூறலாம்.