பாடம் 2 : சூழல் மாசடைதல்

இவ்வுலகில் உயிரினங்கள் சிறந்து வாழ்வதற்குத் தேவையான இயற்கைத் தொகுதி நீர், நிலம், மண், தீ, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களால் அமைந்தது. இத்தொகுதியை நீர்த்தொகுதி, நிலத்தொகுதி, வளித்தொகுதி, உயிர்த்தொகுதி என வகுக்கலாம். இவையனைத்தும், ஏற்றவகையில் ஒன்றிணைந்து உருவாகியுள்ள இயற்கைச் சமநிலையே சூழல் ஆகும். இச்சூழல் தொகுதியின் இயற்கை அமைவுமாறுபடின், அந்த நிலைமை உயிர்களின் அழிவிற்கு வழிவகுக்கும். இந்த இயற்கை அமைவின் மாறுபாட்டையே சூழல் மாசடைதல் என்கின்றோம்.

மக்கள் தொகைப் பெருக்கம், குடிநகர்வு, வணிகமயமாதல் போன்ற பல காரணங்கள் சூழலை மாசுபடுத்த வழிவகுக்கின்றன. உலகில் இயற்கை அமைவு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. ஆனால், உயிர்த் தொகுதியோ பல்கிப் பெருகிக்கொண்டே இருக்கிறது. மானிடத்திற்கு வேண்டிய உணவையும், பயன்பாட்டுப் பொருட்களையும் உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் புதிய அறிவியல் முறைகள். எம் சூழலில் தவிர்க்க முடியாத தாக்கங்களினை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்துகின்றன.

உணவுத் தேவையின் பொருட்டு மாந்தரால் அழிக்கப்படும் பசுமையான காடுகள், உயிரினங்களின் நலனுக்கான சூழல் தொகுதியாகும். பசுமையான காடுகளை அழிப்பதனால் நிலத் தொகுதிக்கு வேண்டிய பல்லின உயிர்கள் அழிகின்றன. பயிர்ச் செய்கையில் பசளைகள், பூச்சிகொல்லி, களைகொல்லி ஆகிய வேதியல் (Chemicals) மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வெளிவிடும் நச்சுப் பொருட்களும், அமிலப் பொருட்களும் மழையையும், நீரையும், நிலத்தினையும் நஞ்சூட்டுகின்றன. இதனால், தாவரங்களும் நிலத்தை வளப்படுத்தும் நுண்ணுயிரிகளும் இயற்கையான திறனை இழந்து அழிவுறுகின்றன.

மானிடரின் பயன்பாட்டுப் பொருட்களின் பேரளவு உற்பத்திக்கு கனரக இயந்திரத் தொழிற்சாலைகள் செயற்படுகின்றன. இவற்றின் செயற்பாட்டின் போது வெளியேறும் நச்சுவாயுக்கள் வானில் கலக்கின்றன. அத்துடன் வீதிகளில் செல்லும் எண்ணற்ற உந்துகள் வெளியகற்றும் நச்சு வாயுக்கள் வளி மண்டலத்தில் கலக்கின்றன. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று மாசடைவதுடன் சில இடங்களில், இவ்வாயுக்களால் மழை கூட அமில மழையாகப் பெய்கிறது.

வணிகத்துறையில் பயன்படுத்தப்படும் பொலித்தீன், நெகிழிப் (plastic) பொருள்கள் இலகுவில் உக்கி அழியாத ஒரு பண்டமாகும். உலகம் எங்கும் பலவிதமான நெகிழிப் பொருட்கள் மக்களின் பாவனையில் உள்ளது. இப் பொருட்கள், பாவனையின் பின்னர் வீசி எறியப்படுவதனால், மண்ணை மட்டும் அன்றி நீர் நிலைகளையும் மாசுபடுத்துகின்றன. இவை சூழலை நச்சுப்படுத்துவது மட்டுமல்லாமல், மாந்தருக்கும் மற்றைய உயிரிகளுக்கும் தீங்கை விளைவிக்கின்றன.

பல விதமான தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகளைத் தாங்கிவரும் வடிகால்கள் நீரோட்டத்துடன் சேர்ந்து ஆறுகள் மூலம் கடலிற் கலக்கின்றன. அத்துடன் இன்றைய கடற்கலங்கள் கனிமநெய்களைக் ((Petroleum) கையாளுவதால், அவற்றின் கழிவுகளும் அளவிறந்து கடலிற் கலக்கின்றன. சமுத்திரம், பல சீவராசிகளின் உணவுத் தேவையில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் நீர்த்தொகுதியாகும். அது மாசுபடுவதனால் நீர் வாழ் உயிரிகளும் மாந்தரும் பாதிக்கப்படுகின்றனர்.

மக்கள் தொகை கூடிய நகரங்களில் போதிய நலவாழ்வு (சுகாதாரம்) வாய்ப்புகள் இன்மை, குப்பை கூளங்களின் பெருக்கம் என்பவை மிகக்கடுமையாக சூழலை மாசுபடுத்துகின்றன. இதன் பாதிப்புக்கள் வளர்முக நாடுகளின் முன்னேற்றத்திற்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன. அத்துடன் அமையாது பல வேறு விதமான மானிட நடவடிக்கைகளினால் உலகம் எங்கும் காலத்துக்குக் காலம் பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் காணப்படுகின்றது.

இன்று எழுநூறு கோடியைத் தாண்டியுள்ள மக்கட்தொகுதியின் அவசிய தேவையிலுள்ள மின்னியல், இலத்திரனியல் பொருட்களிலிருந்தும் அணுமின் ஆக்கங்களிலிருந்தும் வெளியாகும் கதிர்வீச்சுகள் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றிற்கு அப்பால், பசுமை வளியினால் (greenhouse gases) விளையும் ஞாயிற்றுக் கதிரின் எதிர்த் தெறிப்பினால் வான்வெளியில் ஓசோன் படலம் சிதைந்து போயுள்ளது. இத்தாக்கத்தால் சூரியனிலிருந்து வரும் ஊதாக்கதிர்களின் நுழைவைத் தடுக்க முடியாமல் உள்ளது. ஊதாக்கதிர்கள் (ultra-violet rays) உயிரினங்களுக்கு நீண்டகால நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவையாகும்.

இவ்வாறு சூழல் தொகுதிகள் மாசுபடும்போது, இயற்கைச் சமநிலை சிதைவடைவதனால் பல அபாயங்கள் ஏற்படுகின்றன. இதனால் தொற்று நோய், கடற்கோள், பெருவெள்ளம், நிலச்சரிவு போன்ற பேராபத்துக்களை உலகம் எதிர் நோக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் உருவாகின்றன. இவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை வருங்கால நலனுக்காக எல்லா நாடுகளும் ஒன்றுபட்டு மேற்கொள்ளுவது இன்றி அமையாதது.