பாடம் 5: நம்பிக்கையின் வெளிப்பாடு

முதல் அங்கம்

(பாத்திரங்கள்:- அரசன், அரசி, விகடகவி , மந்திரி, இடம்: அரண்மனை) (அரச சபையில் அரசன், அரசி, விகடகவி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். மந்திரியார் அரங்கினுள் பிரவேசிக்கின்றார்)

அரசன்: அடாடா! மந்திரியாரே? வாருங்கள், வாருங்கள்! பல நாட்களாக உம்மை இந்தப் பக்கமே காணவில்லையே? உடல் நலம் எப்படி?

விகடகவி: குளிர் கூடிவிட்டதால் மூளை உறைந்து விட்டதோ? அதனால் வீட்டிலேயே பதுங்கி விட்டீர்கள் போல இருக்கிறது.

அரசி: மந்திரியார் தகுந்த காரணம் இல்லாமல் வராது விடமாட்டார். ஏதோ முக்கிய விஷயம் இருக்க வேண்டும், என்ன என்று கேளுங்கள் மன்னவா!

மந்திரி : அரசே ! தேவி கூறுவது சரிதான். தங்களது உளவாளிகள் மூலமும் என் மூலமும் சர்வமும் அறிந்த உங்களுக்குத் தெரியாத புதினத்தையா யான் கூறப் போகின்றேன்.

அரசன்: பரவாயில்லை மந்திரியாரே! பகரும்! பகரும்! நும் வாயால் செய்தியினைக் கேட்க யாம் விரும்புகின்றோம்.

மந்திரி : மன்னவா! பெரிதாக ஏதும் இல்லை, ஆனால் எனக்கு ஒரு தீராத ஐயம் ஏற்பட்டதால் நித்திரை இன்றி அவஸ்த்தைப் படுகின்றேன்.

விகடகவி : அடப் பாவமே! ஐயா மந்திரியாரே! நான் கைவசம் நல்ல மருந்து வைத்து இருக்கின்றேன். எதற்கும் முதலில் சிறிது...... உற்சாக பானம் பிரயோகித்துப் பாருங்கள்.

( சபையில் சிரிப்பும், சலசலப்பும் கேட்கிறது.)

அரசன்: அமைதி! அமைதி! மந்திரியாரே! நோய்க்கு முதலில் காரணத்தினைக் காணுதல் வேண்டும். உமது ஐயம் என்னவெனக் கூறும். பின்னர் அது தீர்க்கும் வழியைக் காணலாம்.

மந்திரி: அரசே! யான் நாட்டில் சஞ்சாரம் செய்துகொண்டிருந்த போது ஒரு அபூர்வப் பிறவியைக் கண்டேன்.

விகடகவி : என்ன, எமக்குத் தீங்கு செய்ய யாரேனும் முளைத்து விட்டார்களா? எமது எதிரிகளின் துப்பறியும் கையாட்கள் யாராவது...?

மந்திரி: அல்ல,அல்ல. யான் கண்ட அம் மனிதன் சாதாரணமான ஒருவன் தான். ஆனால் அவன் சர்வ உலகையும் படைத்துக் காத்து அளிக்கும் முழுமுதல் கடவுளை நம்புபவன் அல்லப் பிரபோ!

விகடகவி : அடப் பாவமே, கடவுளுக்கும் சோதனையா? அம் மானிதப் பதர் முதலில் நம்புவது யாரை? அரசனையா.. அல்லது...எதனை அவன் நம்புகின்றான் எனக் கூறும்- மந்திரியாரே! கூறும்!

மந்திரி: அவன் தனது கைகளையே முதலில் நம்புவதாகச் சொன்னான் பிரபோ!

அரசி: அப்படியா!? நாதா இப்போதே அவனிடம் சென்று எமது கடவுளின் பெருமையை விளக்குதல் வேண்டும்.

அரசன்: மந்திரியாரே இன்று இரவு நாங்கள் மாறுவேடத்தில் ஊரை சுற்றி பார்த்து வர ஏற்பாடு செய்துள்ளோம். மகாராணியாரும் எங்களுடன் வரவேண்டும். நாம் நால்வரும் அந்த விசித்திர மனிதனை பார்த்து விசாரித்து வருவோம்.

விகடகவி : ஆமாம்! ஆமாம்! தேவிதான் குடைந்து கேள்விகளை எழுப்பி விடை காணக்கூடியவர்! தங்களது சித்தப்படியே ஆகட்டும் பிரபோ!.

இரண்டாம் அங்கம்.

(பாத்திரங்கள்: அரசன், அரசி, மந்திரி, விகடகவி, முதியவர். இடம்: குடிசைவாசல்)

(முதியவர் கிழிந்த துணியைத் தைத்துக்கொண்டு இருக்கிறார். மற்ற மூவரும் தேவர்கள் வேடத்தில் அரங்கினுள் வருதல்.)

மந்திரி: இதோ பாருங்கள் ! இங ;கு இருப்பவர்தான் நான் கூறிய அந்த அபூர்வப் பிறவி.

முதியவர்: வாருங்கள், வணக்கம்! அமருங்கள்! அமருங்கள்! (தொடர்ந்து கீழே பார்த்தபடி கிளிசலைத் தைத்தல் )

அரசி: (அரசனைப் பார்த்து) புதுமையாக இருக்கிறதே! நாம் வருகை தந்திருக்கின்றோம். அவரோ எங்களை சாதாரணமானவர்கள் என எண்ணுகின்றார் போல இருக்கின்றது. மந்திரியாரே! எப்படி அவரது கவனத்தினை எம்பக்கம் திருப்பலாம்?

அரசன்: எமது கைவரிசையைக் காட்டுவோம். (முதியவரைப் பார்த்து) பெரியவரே! நாம் தெய்வீக சக்தி கொண்டவர்கள். முதியவரே! எங்களிடம் நீங்கள் விரும்பியதைப் பயமின்றிக் கேளுங்கள். அன்புடன் தருகின்றோம்.

முதியவர்: வரம் தரப்போகிறீர்களா? .ஹஹ்..ஹஹ்ஹா.(சிரித்தல்)

அரசி: வரம் வேண்டுமா என்று தானே கேட்டோம். அதற்கு ஏன் சிரிப்பு?

முதியவர்: தாயே! என் வாழ்வில் தேவைகள் மிகக் குறைவு. எனது தேவைகளை நானே நிறைவு செய்து கொள்கிறேன். அதனால் என் வாழ்வெல்லாம் நிறைவே! எனக்கு எதற்கு வரம்?

மந்திரி: அதனால் என்ன! நீங்கள் வரம் கேட்டுத்தான் ஆக வேண்டும். யாம் யாரைப் பார்த்தாலும் வரம் தந்து செல்வதுதான் வழக்கம். பயமின்றி விரும்பியதைக் கேளுங்கள், முதியவரே.

முதியவர்: சரி,சரி, மிகவும் வற்புறுத்திக் கேட்பதனால் கேட்கின்றேன். இதோ, நான் தைத்துக் கொண்டிருக்கும் ஊசியின் பின் இந்த நூல் செல்லும் வரம் தாருங்கள். அது போதும் தாயே!

அரசி: என்ன சொல்லுகிறீர்கள் முதியவரே! இயற்கையாகவே ஊசியின் பின்தானே நூல் செல்லும். இதற்கு ஏன் வரம்? எமது நேரத்தினை வீணாக்காது விளக்கமாகக் கூறுங்கள்.

முதியவர்: தாங்கள் கூறுவது உண்மைதான் தாயே! ஊசியும் நூலும் போலவே, என் வாழ்க்கையும். நான் செய்யும் நன்மை தீமையை அடிப்படையாகக் கொண்டே எனது இன்பமும் துன்பமும் அமையும். நான் ஒரு நன்மை செய்தால் அதன் பின்பு இன்பம் வரும்! நான் ஒரு தீமை செய்தால் அதன் பின்பு துன்பம் வரும். இதில் எனக்கு எந்த வரமும் உதவப்போவதில்லை?

விகடகவி : ஆகா! ஆகா! எல்லோரும் உம்மைப் போலவே சிந்தித்தால் உலகின் தொல்லைகளில் பாதி குறைந்துவிடும் அன்றோ. வாழ்வும் தாழ்வும் அவரவர் கைகளிலேயே இருக்கின்றது. இந்த உண்மையை அறியாத மாந்தர் தாமே தமது கவலைகளை பெருக்கிக் கொண்டு போகிறார்கள்.

அரசன்: உண்மைதான்! முதியவரே! மனம் நிறைந்தால் யாவும் நிறைவு தான். மக்கள் தமது தேவைகளை அவசியம் இன்றிப் பெருக்கிக்கொண்டு வாழ்கின்றார்கள். பேராசை கொண்டு தமக்குள் போட்டியும் பகையும் பாராட்டி, போராடி மடிகிறார்கள். யாவரும் அன்பும் அகிம்சையும் கொண்டு வாழ்ந்தால் இவ்வுலகம் சொர்க்க பூமியாக விளங்கும் அல்லவா! நீவிர் பாக்கியவான்! வாழ்க!வாழ்க!