பாடம் 7: தமிழரின் விளையாடல்கள்

பொழுது போக்கிற்காக மட்டும் அன்றி, நல வாழ்விற்கும் விளையாடல்கள் மூலம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது இன்றியமையாதது என்பதை தமிழ் மக்கள் அறிந்து இருந்தனர். பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள் மூலம் அதனை நாம் நன்கு உணரலாம். கிரேக்க நாட்டில் ஆரம்பித்த ஒலிம்பிக் பந்தயங்களில் இடம்பெறும் ஆட்டங்கள் இன்று பிரபலமாக இருந்த போதிலும், பண்டைய காலங்களில் இருந்து தமிழராலும் பல விளையாட்டுக்கள் ஆடப்பட்டு வருகின்றன.

ஆண்பாலாரின் புறக் கடமைகட்கும் உடல் வலிவுக்கும், பெண்பாலாரின் அன்றாட கடமைகட்கும், உடல் மென்மைக்கும் ஏற்றவாறு தமிழரின் ஆடல்கள் அமைந்திருந்தன. பண்டைய விளையாட்டுக்களில் பல இன்றும் உற்சாகத்துடன் பொழுதுபோக்கிற்காகவும் ஊர் மக்களிடையே போட்டிக்காகவும் விளையாடப்படுகின்றன. இவ்விளையாட்டுக்கள் தமிழ் மக்கள் வாழ்வுடன் கலந்து இருந்தமையை பல பழைய தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அறியலாம். தமிழர் விளையாட்டுக்களில் பல உபகரணங்கள் எதுவுமின்றி விளையாட முடியுமென்பது சிறப்பாகும்.

தமிழரது பல விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்கது ஏறு தழுவுதல் என்பதாகும். இதனை ஜல்லிக் கட்டு என்றும் மஞ்சு விரட்டல் என்றும் கூறுவார்கள். கொழுத்து, திமில் (hump) பெருத்த கூரிய கொம்புடைய, சினம்மிகுந்த காளையைத் தனித்துநின்று, ஆயுதமின்றி அடக்குவதே, ஏறுதழுவுதல் ஆகும். இந்த விளையாட்டில் கலந்து கொள்ளவும், பார்த்து மகிழவும், ஆர்வத்துடன் தூர இடங்களிலிருந்தும் வந்து மக்கள் குழுமுவார்கள். தமது உயிரையும் மதியாது இளைஞர்கள் பங்கு பற்றும் இவ்விளையாட்டு முல்லை நில ஆயர்களுடையது என அறிகின்றோம். ஆநிரை கவர்தல், மீட்டல் போன்ற போர் முயற்சிகளுக்கு உரிய பயிற்சியாக இது உதவியது. இன்றும் தமிழ் நாட்டில் பல கிராமங்களில் இது பெரும் விழாவாக இடம் பெறுகின்றது.

சடுகுடு விளையாட்டு இரண்டு அணியினரால் விளையாடப்படுவது ஆகும். ஓரணியின் எல்லைக்குள் மற்ற அணியைச் சேர்ந்தவன் சடுகுடு என்று விடாமல் சொல்லிக்கொண்டே ஊடுருவ முயல்வான். அப்படி நுழைய வருபவனை நுழையவிடாது, வளைத்துப் பிடிக்க, எல்லைக்குரிய அணி முயலும். அவர்களை வெற்றிகொண்டு, நுழைந்தவன் பிடிபடாமல் வெளியே வரவேண்டும். இதுவும் போரோடு தொடர்புடைய விளையாட்டே. எதிரியின் நாட்டினுள் நுழைவதற்கும், எதிரியிடம் அகப்படாமல் தப்புவதற்குமான பயிற்சியே இந்த விளையாட்டாகும்.

கிளித்தட்டு எனப்படும் விளையாடல் பலர் சேர்ந்து இரு குழுக்களாக ஆடும் மிகச் சிறந்த உடல் வலுவிற்கான விளையாட்டாகும். முன்னோக்கி ஓடும் ஒருவனை (காய்) எதிரி மறிப்பான். மறிப்பவனை ஏமாற்றும் பொருட்டு ஓடுபவன் பக்கவாட்டில் இடம் வலமாக உச்சுவான். அவ ;வாறு உச்சுபவன் திடீரென்று நிலத்தில் காலால் உதைத்து, மறிப்பவனைத் தடுமாறவைத்து, வெளியேறி ஓட முனைவான். அவன் பாயும்போது அடிபட்டால் அணி ஆட்டமிழக்கும். இவ்விளையாட்டில் கிளியாக சுற்றி ஓடும் வீரனிடமிருந்தும் அடிபடாது ஓடுதல் வேண்டும். அடிக்கோட்டைத் தாண்டியவர் மீண்டும் முன்னோக்கிச் சென்று முன் கோட்டைத் தாண்டின் பழம் அதாவது வெற்றி கிடைக்கும். அவ்வாறு முன்செல்கையில் பின்னோக்கி வருபவரின் கட்டத்துள் காயும் பழமும் வரினும் அணி ஆட்டமிழக்கும், இதே போன்று கபடி ஆட்டமும் கால்களும், உடலும் முறுக்கேறி வலிமைபெறவும் கவனத்தினைச் சிதறவிடாது கருமமே கண்ணாக இருப்பதற்கும் சிறந்த பயிற்சியாக இன்றும் ஆடப்படுகின்றது.

சிலம்பாட்டம் என்பது நீண்ட கம்புகொண்டு சுழற்றி விளையாடும் ஒரு விளையாட்டாகும். அண்ணளவாக இரண்டு மீற்றர் நீளமுள்ள ஒரு கம்பைக் கையில் வைத்துச் சுழற்றி, எதிரியைத் தாக்குவதும், எதிரியிடமிருந்து தன்னைத் தற்காப்புச் செய்வதும் இந்த விளையாட்டின் நோக்கமாகும். சிறந்த சிலம்பாட்ட வீரன், தன்னை நோக்கி எதிராளியால் வீசி எறியப்பட்ட பொருளையும் சிலம்பினால் தடுக்கும் வல்லமை கொண்டிருப்பான்.

மற்போர் ஆயுதங்கள் இன்றி உடல் வலிமையால் வெற்றிகொள்ளும் விளையாட்டு ஆகும். பண்டைய நாட்களில் இந்திரவிழாவின்போது, தமிழகத்தில் மற்போர் போட்டிகள் நடந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வாள்வீச்சு, ஈட்டியெறிதல், அம்பெய்தல் போன்ற விளையாட்டுகளையும் அனைவரும் விளையாடினர். இவ்விளையாட்டுகள் கையை வலிவுபெறச்செய்யும் விளையாட்டுகளாகும். குதிரை ஏற்றம், யானைஏற்றம் வாள்வித்தை, வேல்வித்தை, வில் வித்தை போன்ற பயிற்சிகள் குருகுலங்களில் இளமையிலேயே பயிற்றப் பட்டன.

பெண்களின் உடல் மென்மைக்கும், அன்றைய இல்லறக் கடன்களுக்கும் பொருந்திய வகையில் எல்லாப் பராயத்துப் பெண்களும் விளையாடினர் என்பது தெரிகிறது. பெண்கள் குரவை, சாழல், பந்தாட்டம், பாண்டி போன்ற விளையாடல்களையும் விளையாடினர். வீட்டில் அம்மியில் அரைத்தல், திருகையில் தானியங்களை திரித்தல், தேங்காய் துருவல், முறத்தில் கொளித்தல் முதலிய வேலைகளும் பெண்களின் உடல் அமைப்பினை திடமாய் வைத்திருக்க உதவியது. உரலில் உலக்கை கொண்டு பாடிப்பாடி இடிப்பது ஒரு விளையாட்டாகும். இது அரிசி குற்றல், மாவிடித்தல், சுண்ணமிடித்தல் போன்ற வேலைப் பயிற்சிக்காகத் தோன்றியிருக்கலாம்.

குரவை என்பது பெண்கள் குழுவாக ஆடும் ஓர் ஆட்டம். இது இன்று கும்மி என்று அழைக்கப்படுகிறது. இவ்வாட்டங்களின் போது பெண்கள் பாடல்கள் பாடி ஆடும் வழக்கம் இருந்தது. குமரிப் பெண்கள் இவ் வகையான விளையாடல்களை ஆடியதாகச் சிலப்பதிகாரம், குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கியங்கள் கூறுகின்றன.

ஆறு குளம் கடல் உள்ள இடங்களில் வாழ்ந்த ஆண்களும் பெண்களும் நீச்சல் செய்து, புனல் விளையாட்டில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்தது.

நோயின்றி நலவாழ்வு பெறுவதற்கு உடல் வலிவு வேண்டும். அதற்கு விளையாட்டுக்களும் உடற்பயிற்சிகளும் இன்றியமையாதவை. ஆதலால் தற்காலத்தில், ஓர் இடத்திலேயே இருந்துகொண்டு மூளையால் வேலை செய்யும் ஆண்களும் பெண்களும் உடற்பயிற்சிக்காக தமது ஓய்வு நேரத்தில் விளையாட்டுத் திடல் சென்று விளையாடுவார்கள். பலர் நவீன மேலை நாட்டு விளையாட்டுக்களை நாடுவதனையும் உடற்பயிற்சி ஏதனங்களைப் பயன்படுத்துவதனையும் காணலாம். மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ற வகையில் இன்று தமிழர் மத்தியில் உதைப் பந்தாட்டம், துடுப்பாட்டம், கூடைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், கைப் பந்தாட்டம் போன்ற பல நவீன விளையாட்டுக்களும் இடம் பெறுகின்றன. இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர்.