பாடம் 9: குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகள்

மானிட இனம் சமூகங்களாக வாழத் தொடங்கிய காலம் தொட்டே குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகள் இடம் பெற்ற வண்ணம் இருக்கின்றன. குற்றச்செயல்கள் பல்வேறு சூழ்நிலைகளில் நடைபெறுகின்றன. வாழும் வகை தெரியாமல், வறுமையின் காரணமாக, பிறர் பொருள் மீது கொண்ட பேராசை காரணமாக, முரட்டுத்தனமான மனப்போக்கு காரணமாக, வஞ்சம் தீர்க்கும், பழிவாங்கும் எண்ணத்தால், தவறான பேரால், எண்ணித் தெளிந்து சீர்தூக்கிப் பாராத செயல்களால், கீழ்த்தரமான பாலியல் ஆசைகளினால் எனப் பல்வகையான ஏதுக்களால் குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன.

எது குற்றநடவடிக்கை என்பதன் விளக்கம் காலத்திற்குக் காலம் மாறிக்கொண்டே போகின்றது. எது விலக்கப்பட்டுள்ளதோ, எது செய்யத் தகாதது என்று தடை செய்யப்பட்டுள்ளதோ, அதைச் செய்வது குற்றம் எனலாம். செய்வது குற்றம் என, தெரியவந்தால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும், சிலர் குற்றங்கள் செய்கின்றனர். தண்டனை பெறுவோர் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தம் இனிய வாழ்வை நாசமாக்குகின்றனர். சிலகுற்றவாளிகள் திரும்பத்திரும்ப குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது வாழ்நாளில் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழிக்கின்றனர். இன்று குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் மூலம் தண்டனைகள் அளிக்கப்பட்டபோதிலும், குற்றச் செயல்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன.

தமது விருப்பங்களை எப்படியாவது எம் முறையைக் கையாண்டும் நிறைவேற்றலாம் என எண்ணி நீதி நெறிகளை மீறிச் செயல்படும்போது குற்றச் செயல்கள் இடம் பெறுகின்றன. திருந்தாத மனங்களின் தேவைகள் நிறைவேறாதபோது, குற்றம் நிகழ்கிறது என்றால், அந்த மனங்களைத் திருத்த முயல வேண்டும். இயல்பான தேவைகள், நுகர்வுகள் கிடைக்காதபோது ஒருவர் குற்றவாளியாகிறார் என்றால், அவரது ஏற்றுக்கொள்ளத்தக்க தேவைகள் அரசின் சமூக சேவை மையங்களின் கண்காணிப்புடன் நிறைவு செய்யப்படல் வேண்டும்.

குடிமக்களின் வாழ்வு அமைதியாகவும், முன்னேற்றமாகவும் நிலைபெறுவதற்குக் குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகள் அவசியமானது. குற்றங்கள் தவிர்ப்பது சம்பந்தமான கல்வியை சிறாரிலிருந்தே தொடங்கல் வேண்டும் என்பதனை பல அறிஞர்கள் வலியுறுத்துகின்றார்கள். அத்தகைய கல்வி இளையோரின் உள்ளங்களை நிரப்புவதால், குற்றச் சிந்தனைகள் தோன்றும் எண்ணங்கள் மாற வாய்ப்புண்டு. அகவைக்கு ஏற்ற வகையில் மனமாற்றத்தை ஏற்படுத்தும் கற்கை நெறிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

அறியாமை குற்றத்திலிருந்து விடுதலை பெற வழி செய்யாது எனவும் குற்றத்தின் பரிசு தண்டனை என்பதையும் தெளிவாக விளக்குவதில் கல்விக் கூடங்களும், சமூகமன்றுகளும், இறையியல் சார்ந்தோரும், பல்கலைக் கழகங்களும் ஒன்றிணைந்து செயற்படல்வேண்டும். இன்றைய இளையோரே நாளைய சமுதாயத்தினராவர். எனவே சமூகத்தின் தளமாகக் கருதப்படும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தமது குழந்தைகட்கு நன்மை, தீமை என்பவற்றின் பொருளை விளக்கி நல்வழி காட்டுவதைத் தமது தலையாய கடமையாகக் கொள்ளவேண்டும்.

பொது மக்கள் தமது இன விழுமியங்களையும், பண்பாட்டுச் சிறப்புக்களையும் அறிந்து ஒழுகும்போது குற்றச் செயல்கள் இடம் பெறுவது தவிர்க்கப்படுகின்றது. நாட்டின் சகல பிரசைகளும் தாம் ஒரு மதிப்பு வாய்ந்த சமூகத்தின் அங்கம் எனும் உரிமையில் நம்பிக்கையும், அதனைக் காப்பாற்றும் உறுதியும் கொண்டவராக வாழ்தல் வேண்டும். பல நூற்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட வள்ளுவரின் குறளும் அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி ஆகிய நூல்களும் தரும் ஒழுக்கமுறைகளைக் கடைப்பிடிக்கும் மன உறுதி கொண்டோர் குற்றவியல் செயல்களை ஊக்கப்படுத்த மாட்டார்கள்.

குற்றத்தடுப்பிற்காகச் செயல்படும் சிறைச்சாலைகள் மந்தைகளைக் கட்டுப்படுத்தும் இடங்கள்போல் இருத்தல் ஆகாது. அவை கண்டிப்பும், தண்டனையும் கொண்ட வெறுக்கத்தக்க நடுவங்களாக இயங்கக்கூடாது. குற்றங்கள் தண்டிக்கப்படல் வேண்டும். ஆனால் குற்றவாளி முதலில் மனிதனாக மதிக்கப்படல் வேண்டும். தண்டனைக் காலத்தில் அவர்கள் திருந்திய மனிதர்களாக மாறும் வகையில் வழிநடத்தப்படல் வேண்டும். குற்றவாளிகள் தீயவர்கள் அல்லர் என்ற பார்வையுடன் நடத்தப்படல் வேண்டும். அன்பும், பரிவும் காட்டி, குற்றவாளிகளின் உள்ளத்தில் அன்பு தோன்றவைக்கும் இல்லங்களாகச் சிறைக் கூடங்கள் அமைதல் வேண்டும் .

குற்றவாளியைத் துன்புறுத்தி, அவருடைய மனதில் வெறுப்பை வளர்த்துப் பழிவாங்கும் உணர்வை வளர்க்கும் சிறைக் கூடங்கள் குற்றவாளிகள் மனம் திருந்தும் வாய்ப்பினை வழங்காது. எனவே சிறைச்சாலைகளில் வேலைசெய்யும் சகல பணியாளர்களுக்கு குற்றவாளிகளுடன் மனோதத்துவ அடிப்படையில் உதவும்படியான உளவியல் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். தண்டனைஅனுபவிப்போரை கீழ்த்தளச் சமுதாயத்தினர் எனவும், தவறானவர்கள் எனவும் கருதும் பொதுவான மனப்பான்மை மாறுதல் வேண்டும். வன்முறைகளைப் பயன்படுத்திக் குற்றவாளிகளைத் திருத்தலாம் என்பதும் தவறான கருத்தாகும். எனவே வன்முறையின்றி குற்றம் புரிந்தோர் தமது தவற்றினை உணர்ந்து, திருந்த வைப்பதே சிறந்த குற்றத்தடுப்பு நடவடிக்கை ஆகும்.

குற்றம் புரிந்தோர் மீளவும் தவறான வழிக்குப் போகாதவாறு எல்லா நாடுகளிலும் அவர்களுக்காகச் சீர்திருத்தப் பள்ளிகள் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால் அச் சீர்திருத்தப் பள்ளிகள், குற்றவாளிகளின் உறைவிடம்போல் இருப்பது மனிதாபிமானமுள்ள செயல் அன்று. மனம் திருந்தி தண்டனைக் காலம் முடிந்ததும் கண்ணியமாக வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற பயிற்சிகளை அங்கு பயிற்றுவது ஏற்றதாகும். அதன் மூலம் அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களை நாடாது நல்ல குடிமக்களாக மனம் திருந்தி வாழ வழி செய்யும்.

இளையோரை மட்டுமன்றி வளர்ந்தவர்களையும் கவரும் இன்றைய மின்னியல் கலாச்சாரத்தின் தவறான வழிகாட்டல்களைத் தடை செய்தல் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக அமைகின்றது. உலகெங்குமுள்ள வர்த்தகர்கள் அவர்களால் விற்பனை செய்யப்படும் வன்முறையைப் பாராட்டும் விளையாட்டுக் கருவிகளையும், இணையத்தளங்களையும் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் முக்கியமானதாகும். அம் முயற்சியில் அரச நிறுவனங்கள் முனைப்பாக ஈடுபடுதல் மூலம் தவறான வழிகாட்டல் பரவுவது தடுக்க வழிசெய்யும்.

சமுதாயத்தில் குற்றச்செயல்களையும், வன்முறைகளையும் ஊக்குவிக்கும் திரைப்படங்களும் ஊடகங்களும் தடைசெய்யப்படுதல் வேண்டும். இன்றைய ஊடகத்தின் பெருக்கத்தினால் தவறான முன்மாதிரிகளை பின்பற்றி தமது நல் வாழ்க்கையை இழக்கும் பலரை நாம் அறிகின்றோம். ஊடகங்கள் சமூக நன்மையினைப் பேணும் அறநெறிகளைக் கைக் கொள்ள வேண்டும்.அரசாங்கங்கள் குற்றவியல் தடுப்பு நடவடிக்கையாக, சமுதாய நலனைப் பேணும் தணிக்கைச் சபைகளையும், நெறிப்படுத்தும் சட்டங்களையும் நிறுவியுள்ளது.

இவ்வாறான பல குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்வதால் மட்டும் எதிர்பார்க்கும் பயன்கள் உடனடியாக விளையப்போவதில்லை. சமூக முன்னேற்ற ஆர்வம் கொண்ட பெற்றோர், ஆசிரியர் நிறுவனங்களும், நீண்ட கால நல்நோக்கு கொள்கையுடன் திகழ்வது மிக முக்கியமானதாகும். அதே சமயம் ஒவ்வொரு சமுதாய அங்கத்தவரும் தன்னலம் பேணும் அதே சமயத்தில், பொது நலனைப் பாதிக்கா வண்ணம் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாகச் செயற்படின் குற்றம் குறைந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.