எமக்கு நீர், வளி, மண் ஆகிய இன்றியமையாத மூன்று வளங்களை இயற்கை வழங்குகின்றது. அவற்றில் ஒன்றான நீரினால், உலகின் மேல் பரப்பில் 71 பங்கு நிறைந்துள்ளது. நீரின் பரவல், தரம், பற்றி நீரியல்(ர்லனசழடழபல) நிபுணர்கள் அறியத் தருகிறார்கள். ஐதரசனும் ஆக்சிசனும் அடங்கிய வேதிப் பொருளையே நீர் என்கின்றோம். திரவ நிலையில் இருக்கும் போது நீர் எனவும், திட நிலையில் இருக்கும் போது உறைபனி எனவும், வாயு வடிவில் இருப்பதனை நீராவி எனவும் கூறுகின்றோம். மொத்த நீரில் 97 வீதம் கடல் நீராகவும், 2 வீதம் பனிப்படிவாகவும், 1 வீதம் நிலக்கீழ் நீராகவும் உளது. ஆக 0.02 வீதம்தான் எமது அன்றாட பாவனைக்கு உதவும் நன்னீராக (கசநளா றயவநச) ஆறு, குளம், ஏரி, நீரூற்று என்பவற்றிலிருந்து கிடைக்கின்றது.
நீரின்றி உயிரினங்கள் நீண்ட நாள் வாழமுடியாது. இதை எமது மூதாதையர் நன்கு அறிந்திருந்தனர். நீரின் இன்றியமையாமையை தமிழ் மறை என்று போற்றப்படும் திருக்குறளில், வான்சிறப்பு பற்றிக் கூறும் அதிகாரத்தில் வள்ளுவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கூறியிருக்கின்றார்.
உணவு உண்பவர்களுக்கு நல்ல உணவை ஆக்குவதற்கும், உணவை உண்பவர்க்கு உணவாகவும் பயனாகுவது மழையே.
வானிலிருந்து மழை பெய்யாது பொய்த்துவிடுமானால் பெருங் கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் உயிர்களை பசி நீடித்து நின்று துன்புறுத்தும்.
மனிதரின் உடல் சராசரியாக அறுபத்தியாறு வீதம் நீரால் ஆனது. எமது உடலின் வளர்ச்சி மாற்றம், சிதைவு மாற்றம் போன்றவைக்கு நீர் மிகவும் அவசியம். நாம் உண்ணும் நீர் கலந்த உணவுடன் ஏறக்குறைய இரண்டு லீற்றர் தனி நீரும் அருந்துதல் வேண்டும் என உடலியல் வல்லுநர் கூறுகின்றனர். இரைப்பையில் கரைப்பானாக செயல்படும் நீரில் உணவு கலந்து கூழாகியபின்னரே உடலுக்கு வேண்டிய சத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுச் சமிபாடு முடிந்தபின் உண்டாகும் வெல்லப்பொருட்கள் அமினோவமிலங்கள், கொழுப்பு, விற்றமின்கள், தாது வகைகள் முதலியன நீரில் கரைந்த நிலையிலேயே குடற்சுவரால் உறிஞ்சப்படுகின்றன. உடற்கலங்களில் உணவு பயன்படுத்தப்படும்போது கழிவுகளும் தோன்றும். நீரில் கரைந்த திண்மக் கழிவுகள் சிறு நீரோடும் வியர்வையோடும் வெளியேற்றப்படும், வாயுக் கழிவுகள் குருதியிலிருந்து பரவி வெளிச் சுவாசத்தோடு வெளியேறும்.
உடலின் வெப்பத்தைச் சீராக வைத்திருக்கவும் நீர் உதவுகின்றது. உடலில் நீர் குறையுமானால் தலை இடி, தசை நோ, மூட்டுக்களில் நோ போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எமது உடல் சிறுநீர், வியர்வை, மலம், சுவாசம் என்பவற்றினூடாக தினம் ஏறக்குறைய மூன்றரை லீற்றர் நீரை வெளியேற்றுகின்றது. இதை ஈடு செய்வதற்காகவும் நாம் போதியளவு நீரை உட்கொள்வது அவசியம்.
நாம் அருந்தும் செயற்கையான பழச்சாறு போன்ற வர்த்தகத்திற்காக உற்பத்தி செய்யப்படும் குடிபானங்கள் நீர்த்தேவையை பூரணமாக ஈடு செய்யா. சந்தைப்படுத்தப்படும் பல பானங்களில் அதிக அளவு நிறம், சர்க்கரை வேதியல்கனிமங்கள் போன்ற தீங்கு தரும் கழிவுகள் உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடிபானங்களை அதிகமாக அருந்துவோர் அதை ஈடு செய்ய எட்டுக் கிண்ணத்திலும் கூடுதலாக நீரை அருந்துதல் அவசியம்.
உடற் சுத்தம், வாய்ச் சுத்தம், உடைச் சுத்தம் ஆகியவற்றுக்குப் பயன் படுவதுடன் தீ அணைப்புக்காகவும், தொழிற்சாலைத் தேவைகளுக்கும், விவசாயத்திற்கும் அதிக அளவு நீர் தேவைப்படுகின்றது
தூய நீரே உடலுக்கு வேண்டுமாதலால் பல வழிகளைக் கையாண்டு நீரினை தூய்மைப்படுத்துகின்றனர். வடிகட்டல் மூலமும், காய்ச்சி வடித்தல் மூலமும், வேதியல் முறைகள் மூலமும் நீர் தூய்மைப்படுத்தப்படுகின்றது. அத்துடன் கடலில் நிறைந்து இருக்கும் உவர்நீரை இராசாயன முறையில் உப்பு நீக்கம் செய்து நல்ல நீராக மாற்றுகின்றனர். இம் முறையினை, நன்னீர் அரிதான வரட்சி மிகுந்த பாலை நிலம் கொண்ட பல அரேபிய நாடுகள் பயன்படுத்துகின்றனர்.
இன்றைய உலகில் பல மில்லியன் தொகைக்கு மேலான மக்கள் தூய்மைப்படுத்தப்படாத நீரையே அருந்துகின்றனர். தொற்றடைந்த நீரினால் பல வியாதிகள் வளர்முக நாட்டு மக்களைப் பாதிக்கின்றது. இந்த நிலைமை வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப் படுகின்றது. சூழல் நீர் மாசடையாது பாதுகாத்தல் மிகமிக அவசியம்.
வீட்டுக்கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், விவசாயத்தில் பயன்படுத்தும் இராசாயனப் பசளைகள், களைகொல்லிகள், பூச்சிகொல்லிகள் போன்றவற்றுடன் அணுமின்னுலைகளின் கழிவுகளும் சூழல் நீரை மாசுபடுத்துகின்றன. பல தீங்கு விளைவிக்கும் கிருமிகள் நீரில் கலந்து காவப்படுவதன் மூலம் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்ப்பது மக்களினதும் அரசாட்சியினரதும் தவிர்க்க முடியாத கடமையாகும்.
உலகில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகின்றது. ஆனால் வளங்கள் பெருகமாட்டா. வரும் காலங்களில் மக்களின் நுகர்வின் அதிகரிப்பினால் நன்னீரின் பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம். இன்று உலகில் உற்பத்திக்கு வேண்டிய மூலப் பொருட்களுக்காகவும், நிலக்கீழ் கனிமங்களுக்காகவும், நாடுகளுக்கிடையே போட்டியும் பூசல்களும் இடம் பெறுகின்றன. வருங்காலத்தில் நன்னீருக்காகவும் போட்டியும் போரும் நிகழக்கூடும். அந்த நிலை ஏற்படின் இலவசமாகக் கிடைக்கும் நீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் ஏற்படலாம்.
புராதன காலங்களில் மரபுசார் முறைகளைப் பின்பற்றி மக்களின் தேவைக்கான நீரைச் சேமித்து வைப்பதற்காக, பண்டைய காலம் தொட்டு அணைகளும் குளங்களும் மன்னர்களால் கட்டப்பட்டன. இக்காலத்தில் எல்லா நாடுகளும் பல நவீன திட்டங்களைக் கையாண்டு நீரைச் சேமிக்கவும் விநியோகிக்கவும் வழிவகைகள் செய்கின்றன. தற்போது பல நகரங்களில் நீர்ப் பயன் பாட்டிற்காக பொது மக்கள் கட்டணங்கள் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
வருங்காலத்தில் வாழப்போகும் எமது சந்ததியினருக்காக நாம் நீர் நிலைகளை மாசு சேராது பாதுகாக்கவும், நீரை வீணாக்காது பயன்படுத்தவும் வேண்டிய நெறி முறைகளை அறிந்து கடைப்பிடிக்கக் கடமைப்பட்டு இருக்கின்றோம். நாம் வாழும் மண்ணையும், சுவாசிக்கும் வளியையும் மாசுபடுத்தாது பேணவேண்டிய எமது பாரிய கடமையை எண்ணிச் சிந்திப்போம்! செயற்படுவோம்!