பாடம் 1 : செம்மொழியாம் தமிழ்

தற்காலத்தில் இந்தோ – ஐரோப்பிய மொழிகள், ஆபிரிக்க, ஆசிய மொழிகள், மொங்கோலிய – சீன மொழிகள், திராவிட மொழிகள் உட்பட ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருந்தபோதும் அவற்றில் பல மொழிகள் எழுத்து வடிவங்கள் இன்றியும், வழக்காறு குறைந்தும் காணப்படுகின்றன. கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், எபிரேயம், சீனம், ஈப்ரு, தமிழ் முதலான சில பழமையான மொழிகளே தொடர்ந்து நிலைத்து வாழும் செம்மொழிகளாக இடம்பெறுகின்றன. அவற்றில் லத்தீன், சமஸ்கிருதம், சிலாவோனியம் போன்ற மொழிகள் ஏட்டு மொழிகளாகப் பேச்சு வழக்கு அருகிக் காணப்படுகின்றன.

செம்மொழித் தகுதி

செம்மொழி (Classical Language) என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழமை அடிப்படையிலும் மொழியில் காணப்படும் பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் ஒப்பிட்டுச் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழிகளின்

தமிழ் எழுத்துக்களில் வரலாற்று மாறுதல்கள்

ஆரம்ப கால இலக்கியப் படைப்புக்கள் தரத்தின் மதிப்பிலும் பண்புகளின் அடிப்படையிலும் பழமை வாய்ந்தவையாகக் காணப்படல் வேண்டும். அவ்வாறு உயர்ந்த தரத்தில் அமைந்த பண்பட்ட இலக்கிய மரபுகள் அம் மொழிக்குச் சொந்தமானதாக அமைந்து காணப்படும். அவை பிற இலக்கிய மரபுகளிலிருந்து பெறப்பட்டதாக இருத்தல் ஆகாது. இவ்வாறான தகைமைகளின் அடிப்படையில் இந்திய அரசால் தமிழ் மொழி செவ்வியல் மொழி என்று 2004ம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் மொழி முதல் இருபது மொழிகளில் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. சுய மொழி கொண்ட மக்கள் தொகையில் ஏறக்குறையத் தொண்ணூறு கோடி மக்கள் தமிழ் மொழியைப் பேசுகின்றார்கள்.

தமிழ்மொழியின் தொன்மை

மிகவும் தொன்மையானது எனப்படும் தமிழ்மொழி எப்பொழுது தோன்றியது என யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. இன்றுள்ள பல மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே தமிழ்மொழி, செம்மொழியாக வழங்கியமைக்குச் சான்றாக இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட சங்ககால நூல்கள் விளங்குகின்றன.

“பஃறுளியாறுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”

என்ற பழம் தமிழ் பாடல் அதற்குச் சான்றாக அமைகின்றது. பல தடவைகள் பொங்கி எழுந்த கடற்கோள்களால் தமிழ்மொழி பேசப்பட்ட பெரும் நிலங்கள் அழிந்து போயின என்ற சேதியைப் பழம் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தனிப்பட்ட ஒரு பாரம்பரியத்தினைக் கொண்டு குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் மத்தியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியத்திலும் இலக்கணத்திலும் சிறந்த நிலையில் தமிழ் மொழி வழக்காற்றில் இருந்தது என அறிய முடிகின்றது.

சங்ககால இலக்கியங்கள்

உலக இலக்கியத்தரம் வாய்ந்த சிறப்பு அம்சங்கள் கொண்ட இலக்கியப் படைப்புக்கள் தமிழ் மொழியில் பண்டைய காலங்களில் இயற்றப்பட்டுள்ளன.

சங்க காலப் பாடல்களிலே அகப் பொருள் பற்றியும், புறப் பொருள் பற்றியும் பாடுகின்ற தொன்மையான இலக்கிய மரபு பேணப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இவ் வகையான தமிழ் மொழியின் சிறப்பை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்கள் எடுத்து கூறும். மேலும் பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் உரை போன்ற பல தொன்மையான செவ்விலக்கிய நூல்கள் தமிழ் மொழியில் ஆக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறும் திருக்குறளுக்கு நிகரான நூல் அக் காலப் பகுதியில் வேறெந்த மொழியிலும் தோன்றி இருக்கவில்லை. சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி ஆகிய ஐம்பெரும் காப்பியங்களும் தமிழ் அன்னையை அலங்கரிக்கும் அணிகலன்களாக வர்ணிக்கப்படுகின்றன. மகாபாரதம், இராமாயணம் ஆகிய காவியங்களும் கிரேக்க இதிகாசங்களான இலியாத், ஒடிஸ்ஸி போன்று தமிழ் மொழியில் ஆக்கம் பெற்றுள்ளன.

மதுரை மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி

தமிழர் பண்பாட்டின் புராதன சான்றுகள்

தமிழ் நூல்கள் மட்டும் அன்றிப் பல புராதன கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் மறைந்து போன தமிழர் பண்பாட்டிற்குச் சான்று பகர்கின்றன. அவற்றுடன் சிந்துவெளி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துப் பதிவுகள், பழம் திராவிட எழுத்துக்கள் எனக் கமில் சுவலபில், அருள் திரு ஹரஸ், ஐராவதம் மகாதேவன் ஆகிய அறிஞர்கள் கருத்துக் கூறுகின்றார்கள். திருவண்ணாமலையில் கண்டெடுத்த ஓடுகளில் சிந்துவெளிப் பதிவுக்கு ஒத்த எழுத்துக்கள் கண்டறியப்பட்டபின், சிந்து வெளி எழுத்து திராவிட எழுத்துக்களைச் சேர்ந்தது எனத் திடமாக ஆய்வாளர்களால் கூறப்படுகின்றது. காலத்துக்குக் காலம் தமிழ் நாட்டில் கண்டு எடுக்கப்பட்ட புராதன கலைச் செல்வங்களும், சமீபத்தில் மதுரைக்கு அருகே இடம்பெற்ற அகழ்வாராய்ச்சியும் தமிழர் பண்பாட்டின் தொன்மையை விளக்குவனவாக அமைந்துள்ளன.

தமிழர் வாழ்வின் நெறிமுறைகள்

புறநானூறு எனும் பாடல் திரட்டில், கணியன் பூங்குன்றனார் எனும் புலவரின் பாடல் தமிழ் மக்களின் உன்னதமான பண்பாடு பற்றி விளக்குகின்றது.

யாதும் ஊரே, யாவரும் கேளீர், தீதும் நன்றும் பிறர் தரவாரா| நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன| சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!

உலகத்து மக்கள் யாவரும் எமது சுற்றத்தவரே என்றும், நாம் அனுபவிக்கும் நன்மையும் தீமையும் எமது செயல்களின் விளைவாகவே அமையும் எனும் ஆழ்ந்த தத்துவக் கருத்து வெளிப்படுகின்றது. அத்துடன் இயற்கையின் நியதியை உணர்ந்து இன்பதுன்பங்களை மன அமைதியுடன் ஏற்று வாழும் பண்பும் கூறப்படுகின்றது. இக் கருத்துக்களுக்கு இணையான கருத்துக்களை சம கால வேற்று மொழி இலக்கியங்களில் காண்பது அரிது.

தமிழ் மொழியின் சிறப்பு

இலகுவாகப் பேசவும், வசனங்களை அமைக்கவும். பாடல்களை இயற்றவும் யாவரும் கற்பதற்கு ஏற்றவாறு மொழியின் கட்டுக்கோப்பு அமைந்தமையும் தமிழ் மொழியின் சிறப்பாகும். இலக்கணச் சிறப்பும் இயல்புத் திறனும், மொழித் திருத்தமும் தமிழ் மொழியில் அமைந்துள்ளது. பேச்சு மொழியினை யாவரும் திருத்தமாகப் பேசுவதற்காக ஒலிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துக்கள் மூன்று வகையாக வகுக்கப்பட்டுள்ளன. இலக்கணத்தில் இவற்றின் கால எல்லைகள் மாத்திரைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மூவகையாக அமைந்த தமிழ் எழுத்துக்கள் மெல்லின, இடையின, வல்லின ஓசைகள் கொண்டு பேச்சுத் தமிழுக்கு இனிமை சேர்க்கின்றன. முறையாக எழுத்துக்களின் ஓசை, கால எல்லை கொண்டு அமைவதனால் தமிழ் மொழி பேசுவதற்கு எளிதாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் அமைந்துள்ளது.

“பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சம் நிமிர் சீறடியள் ஆகி அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்.”

(பஞ்சி – செம்பஞ்சுக் குழம்பு, விஞ்சு – மிக்க, குளிர் - குளிர்மை பொருந்திய பல்லவம் - கை அணி, கஞ்சம் - தாமரை, மஞ்சை – மயில்)

கம்பராமயணத்தில் சூர்ப்பனகை வருகையை, மெல்லின மெய் எழுத்துக்களாலான எளிய சீர்களைத் தேர்ந்து கம்பர் பாடுகின்றார். அவ்வாறு மென்மையான பதங்களைத் தொகுத்துக் கூறுவதன் மூலம் கேட்பதற்கு இனிமையாகவும் மென்மையாகவும் ஆக்கப்பட்ட மேலே காணப்படும் பாடல், ஓசை நயத்தினை விளக்குவதற்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

எழுத்துக்களாலான பொருள் தரும் சொற்கள் மூலம் திணை, பால், எண், இடம், வினை, வேற்றுமை எனும் பாகுபாடுகள் விளக்கமாகத் தமிழ்மொழி இலக்கணத்தில் காணப்படுகின்றன. எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியக் கூற்று. அதிகமான தமிழ்ச் சொற்கள், வேர்ச் சொல்லில் இருந்து பிறந்த காரணப் பெயர்கள் ஆகும். காரணம் காட்டாத இடுகுறிப் பெயர்கள் தமிழ்மொழியில் மிகக் குறைவாகவே உள்ளன.

தமிழின் கிளை மொழிகள்

தமிழ்மொழி திராவிட மொழிக் குடும்பத்தினைச் சேர்ந்தது என மொழியியலறிஞர் வகுத்துள்ளார்கள். தற்போது வழக்கு அருகிக் காணப்படும் இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, யெருகுளா போன்றவையும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். தென் திராவிட மக்களால் பெரு வழக்கில் இருந்து வந்த தமிழ்மொழி பல கிளை மொழிகளைக் கொண்டது. கன்னடம், தெலுங்கு, மலையாளம், குடகு, துளு ஆகிய மொழிகள், தமிழில் இருந்து திரிந்து, வளர்ச்சி பெற்ற மொழிகள் ஆகும். தமிழ்மொழியிலுள்ள பல அடிச் சொற்கள் பிற மொழிகள் பலவற்றில் இடம் பெற்றுள்ளன. பெற்றோரைக் குறிக்கும் அம்மை, அப்பன், அரிசி போனற பல தமிழ் சொற்கள் கடல் கடந்து பல்வேறு மொழிகளிலும் வடிவு திரிந்து வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்மொழியின் தனித்துவம்

செம்மொழியின் தனித்துவமான ஒரு சிறப்பு சுயமாக இயங்க முடியும் தன்மை கொண்டதாக இருத்தல் ஆகும். வேத காலத்தில் ஓங்கியிருந்த சமஸ்கிருத மொழியின் செல்வாக்கு தமிழைப் பாதிப்பதற்கு முன் தமிழ் மொழி தனித்துவமாக விளங்கியது என்பதனை மொழி அறிஞர்களது பல ஆய்வுகள் அறியத் தருகின்றன. அவ்வாறு பிற மொழிச் செல்வாக்கு இன்றிச் சுயமாகவே தமிழால் தனித்து இயங்க முடியும் என்று பன்மொழி வல்லுநர் ஆயர் கார்டுவெல் கூறியுள்ளார். பரிதிமால் கலைஞர், மறைமலை அடிகள் போன்றோரால் ஆரம்பிக்கப்பட்ட தனித் தமிழ் இயக்கம் தமிழின் தனித்து இயங்கும் தன்மையை நிறுவிய இயக்கமாகும். அதே சமயம் மக்கள் வழக்கில் இடம் பெற்ற வடசொல், திசைச் சொல் ஆகியவற்றையும் அடக்கிய இலக்கண வரம்புக்கு உட்பட்ட செம்மையையும் தமிழ் மொழி கொண்டுள்ளது. இன்று வழக்கிலுள்ள மொழிகள் யாவற்றிலும் சிறந்த விழுமியங்கள் கொண்டது தமிழ்மொழி எனும் கூற்று சாலப் பொருந்தும்.