பாடம் 13: தமிழில் சிறுகதை

இலக்கியத்தில் சிறுகதை எனப்படும் வடிவம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஒரு பெரும் பிரிவாக வளர்ந்துள்ளது. இப் பிரிவு எட்கர் அலன் போ, மாப்பசான், துர்கனேவ், அன்டன் செக்கோவ் போன்ற அமெரிக்க, பிரெஞ்சு, ரூசிய எழுத்தாளர்களால் முன்னேடுக்கப்பட்ட கதை வடிவமாகும். நவீன கால உருவ அமைப்பு இல்லாவிடினும் ஈராயிரம் வருடங்களுக்கு முன்னரேயே தமிழ் மொழியில்

“பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்”

என்று தொல்காப்பியர் கூறிய மேல்காணும் அடிகளில் ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி’ என வருவது சிறுகதையைக் குறிப்பதாக அமைகின்றது என அறிஞர் எடுத்துக்காட்டுவர்.

தமிழ் மரபின் தொன்மைக் கதைகள்

சிலப்பதிகாரத்தில் வரும் தேவந்தி கதை, மணிமேகலையில் இடம் பெறும் ஆபுத்திரன், ஆதிரை, காயசண்டிகை ஆகியோரின் கதைகள் சிறுகதைத் தன்மையில் அடங்குவனவேயாகும். காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் எனப் பல்வேறு கதைகளையும் அவற்றில் வரும் உப கதைகளையும் கிளைக் கதைகளையும் மக்கள் கேட்டு வருகின்றனர்.

அச்சு வடிவம்

தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன. இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’. அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிட பூர்வ காலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்ற பல கதைகள் தமிழில் அச்சிடப் பட்டன. இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல வாசிக்கும் வழக்கமும் பரவலாயிற்று. புதிய மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் கல்வி வளர்ச்சியும் அதனால் நூல்களைத் தேடி வாசிக்கும் ஆர்வமும் பெருகியது. ஆங்கிலக் கல்வியின் உந்தலால் புதிய வடிவில் அமைந்த படைப்புகள் தமிழில் வெளிவரத் தொடங்கி மக்களின் வரவேற்பைப் பெற்றன.

தமிழ்ச் சிறுகதையின் தந்தை

தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகள் எனப் பல எழுத்தாளர்களின் படைப்புக்கள் குறிப்பிடப்படுகின்றன. பிறநாட்டுக் கதைகளைப் போல தமிழில் சிறுகதை இலக்கியம் வளரவேண்டும் என சிறுகதைகள் தமிழில் எழுந்த ஆரம்ப காலங்களில் வ.வே.சு.ஐயர் சிறந்த கலைப் படைப்புக்களைத் தந்தார். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனவும் அழைக்கப்பட்டார். ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, ‘மங்கையர்கரசியின் காதல்’ போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை போன்ற சிறுகதைக்குரிய இலக்கணங்கள் அமைந்திருப்பதைக் காணலாம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில் கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கன. கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி போன்று புதிதாகத் தோன்றிய பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் புதிய புதிய எழுத்தாளர்களை அடையாளம் காட்டிச் சிறுகதையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தன.

சிறுகதை மன்னன்

சிற்றிதழாக வெளிவந்த மணிக்கொடி பிரசுரத்தை பி. எஸ். ராமையா முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக 1935ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளாக வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள்

மணிக்கொடி தலைமுறை சார்ந்த எழுத்தாளர்கள் என்று அழைக்கப் படுகின்றார்கள். சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள், சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும், கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது. சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் ‘மாப்பசான்’ எனவும் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும். பேச்சுத் தமிழ், நனவோட்ட உத்தி, நடப்பியல் ஆகியவற்றைச் சிறுகதையில் புகுத்திய பெருமை இவரையே சாரும்.

சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள்

தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, ராஜாஜி, கி. வா. ஜகந்நாதன், தி. ஜானகிராமன், ஆர். சூடாமணி, மு. வ. விந்தன், லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன், டாக்டர் மு.வரதராசன், அகிலன், கு. அழகிரிசாமி, நீல. பத்மநாதன், சிதம்பரரகுநாதன், ரா. கிருஷ்ணமூர்த்தி வண்ணநிலவன், ஜெயமோகன், பிரபஞ்சன், சுஜாதா, பாலகுமாரன், போன்ற பலரைக் குறிப்பிடலாம். அவர்களுடன் மேலும் பல ஈழத்து, மலேசிய, எழுத்தாளர்களும் தரம் மிகுந்த சிறுகதைகள் எழுதியுள்ளனர்.

பிரபலம் அடைந்த எழுத்து ஆற்றல் கொண்டோரால் படைக்கப்படும் சிறுகதைகளைப் படித்த பல ஆசிரியர்கள் சிறப்புற அமையும் சிறுகதைக்குப் பலவாறு விளக்கம் கொடுக்கின்றார்கள். சிறந்த கதை அம்சத்துடன் ஒரு நிகழ்ச்சியை விபரிப்பதாகவும் ஆரம்பம் முதல் இறுதிவரை தொய்வு இன்றி, மனத்தைக் கவர்வதாக இருத்தல் வேண்டும் என ‘சாமர்செட் மாம்’ கூறுகின்றார். அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை எனவும், நாவலின் சுருக்கம் அல்ல சிறுகதை எனவும் ‘எட்கார் ஆலன்போ’ கூறுகின்றார். சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் சிறுகதைக்கான விசேட உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தயம் போலத் தொடக்கமும் முடிவும் ஆர்வத்தை ஏற்படுத்தும் சுவை கொண்டதாக இருத்தல்வேண்டும் என ‘செட்ஜ்விக்’. கூறுகின்றார். தரமிக்க சிறுகதைகளை எழுதிய ‘ஆண்டன் செக்காவ்’ சிறுகதைப் படைப்புக்கான நோபல் பரிசைப் பெற்றார். ருசிய நாட்டைச் சேர்ந்த இவரைச் சிறுகதை உலகின் தந்தை என அழைப்பர்.

சிறுகதையின் தன்மைகள்

யாவற்றையும் தொகுத்துப் பார்க்கும் போது சிறந்த சிறுகதைக்கான தன்மைகள் எனப் பின் வரும் அம்சங்களை நாம் அறியக்கூடியதாக உள்ளது. நன்கு அமைக்கப்பட்ட சிறுகதை மிகவும் குறைந்த நேரத்தில் படிக்கத் தக்கதாய் அமைதல் தற்காலச் சூழலுக்கு வேண்டப்படுகின்றது. படிக்க ஆரம்பித்தால் நிறுத்தாமல் முடியும்வரை ஆர்வம் குன்றாமல் படித்து முடிக்கத் தக்கதாய் இருத்தல் வேண்டும். ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் அமையும் மையக் கருத்தைக் கொண்டு, குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்களைக் கொண்டிருத்தலும், ஓரிரு நிகழ்ச்சிகளில் அமைதலும் சிறுகதைக்கு விளக்கத்தையும் தெளிவையும் அளிக்கும். மிகையாகக் கருதப் படக்கூடிய சொற்களோ, உரையாடல்களோ, நிகழ்சிகளோ சிறுகதையில் அமையாதிருத்தல் வேண்டும். வாசகரின் கண்முன்னே நடப்பது போன்ற உணர்வுத் தூண்டலை ஏற்படுத்துவதுடன் ஆரம்பமும் முடிவும் சுவையுடன் விறுவிறுப்பாக அமைதலும் சிறுகதைக்கு வேண்டப்படும் பிரதான அம்சமாகும்.

சிறுகதைகளின் பல்வேறு வடிவங்கள்

சமீப காலத்தில் சிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களாகக் குறிப்பிடப் படும் வகையில் ஆயிரக்கணக்கான சிறுகதைகள் அசுர வேகத்தில் வெளிவரு கின்றன. இன்றைய அவசரகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக் கதை, சதச்சொற் கதை எனச் சிறுகதை தன் வடிவத்தை மாற்றிக்கொணடு மேலும் வளர்ந்து கொண்டே வருகின்றது.

சமீபகாலத்தில் பல்வேறு நாடுகளிலும் வெளியிடப்படும் பல்லாயிரக்கணக்கான பிரசுரங்கள் பல சிறுகதைகளைத் தாங்கி வருவதைக் காண்கின்றோம். வலைத் தளங்களிலும் பல ஆக்கங்கள் வெளிவருகின்றன. திறமை மிகுந்த படைப்பாளியின் ஆக்கம் கட்டுப்பாடுகளுக்கு உட்படாது வீரியத்துடன் வெளிப்படும் என்பதனை வாசகர்களால் இனம் காண முடியும். பல்வேறு கருப்பொருட்களை மையப்படுத்தி பல பரீட்சார்த்த முயற்சிகளிலும் சமீப காலங்களாகத்; தொடர்ந்து பல எழுத்தாளர்கள் ஈடுபடுகின்றனர். வெற்றிகரமான இலக்கியப் படைப்புக்கள் சாகாவரம் பெற்றவையாகத் திகழும் என்பது வரலாறு கூறும் உண்மையாகும்.

சமூகப் பண்பாட்டின் கண்ணாடி

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் சிறுகதைத் துறை வளர்ச்சியில்புதிய பரிமாணங்களையும் பல்வேறு எல்லைகளையும் தாண்டியமை தமிழ்மொழியின் செழுமையைக் கூட்டுவதாக அமைகிறது. சிறந்த உலகச் சிறுகதைகளின் தரத்திற்குக் குன்றாத உத்தி முறைகள் ஆரம்பக் காலங்களிலேயே தமிழில் அறிமுகம் செய்யப்பட்டு வளர்ச்சி பெற்றது. சமுதாயச் சீர்திருத்த நோக்கும் வட்டாராப் பண்புகளைச் சித்தரிக்கும் பாங்கும், உளவியல் அணுகுமுறையுடன் கூடிய கருப்பொருளும் உள்ளடங்கியதாக தமிழில் சிறுகதை இலக்கியம் பெருவளர்ச்சி கண்டுள்ளது.