பாரதியார் தமிழ்நாட்டில் எட்டயபுரம் என்னும் இடத்தில் 1882 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் சின்னச்சாமி ஐயர். தாயார் பெயர் இலக்குமி அம்மாள். இவருடைய இளமைப் பெயர் சுப்பிரமணியன். செல்லப்பெயர் சுப்பையா. பாரதியார் தமிழ், ஆங்கிலம், வடமொழி என்பனவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். இவர் தனது தாய்மொழியான தமிழ்மொழியின் மீதும், தான் பிறந்த தாய்நாட்டின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர். இவரை சுப்பிரமணிய பாரதி என்றே எல்லோரும் அழைப்பர்.
பாரதியாருடைய பாடல்கள் மிகவும் இனிமையானவை. நல்ல கருத்துக்களை உடையன. எல்லோராலும் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடியவை. இவர் சிறுவர்களுக்கு ஏற்ற பல பாடல்களைப் பாடியுள்ளார். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்களையும் எழுதியுள்ளார்.
பாரதியார் தனது முப்பத்தொன்பதாவது வயதில் காலமானார். இவரை மகாகவி என்றும் அழைப்பர். இவருடைய கவிதைகள் இன்றும் மக்களின் விடுதலை உணர்வுகட்கு உரம் சேர்ப்பவையாகும்.
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
உடலினை உறுதி செய்
ஏறுபோல் நட
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஓளடதம் குறை
கொடுமையை எதிர்த்து நில்
சூரரைப் போற்று
சொல்வது தெளிந்து சொல்
சோதிடம் தனையிகழ்
தையலை உயர்செய்
புதியன விரும்பு
மதித்து வாழ்
வெடிப்புறப் பேசு
வையந் தலைமை கொள்.