பாடம் 19: குகை பேசுமா?

ஒரு சிங்கம் காட்டில் உணவைத் தேடி அலைந்தது. ஒன்றும் அகப்படவில்லை. நீண்ட நேரம் கழித்து அது ஒரு குகையைக் கண்டது. "இந்தக் குகையில் தங்கும் விலங்கு நிச்சயமாக வரும். அப்போது அதைப் பிடித்துத் தின்னலாம். அதுவரை உள்ளே காத்திருப்போம்" என்று எண்ணிக் குகைக்குள் ஒளிந்து இருந்தது.

அந்தக் குகையில் வசித்து வந்த நரி வழக்கம்போல இரை தேடிவிட்டு வந்தது. குகையின் வாசலில் புதிய பாத அடிகளின் சுவடுகளைக் கண்டது. குகையில் யாரும் இருக்கலாமோ எனச் சந்தேகம் கொண்டது.

குகைக்குள் இருப்பது யாரென அறிய நினைத்தது. குகையை நோக்கி, "குகையே! குகையே! தினமும் நான் வரும்போது வணக்கம் சொல்வாயே! இன்று ஏன் மௌனமாக இருக்கிறாய்? என்மீது கோபமா?" என்றது.

உள்ளே இருந்த சிங்கம், இந்தக் குகை நரியோடு பேசும் என நினைத்தது. 'நாம் பேசாமல் இருந்தால் ஒரு வேளை நரி போய்விடும்.' என எண்ணியது. அதனால், "வணக்கம் நரியாரே, ஏன் இன்று தாமதம்?" என்றது.

சிங்கத்தின் குரலைக் கேட்ட நரி, தப்பினேன்! பிழைத்தேன்! என்று கூறியவாறு ஓடி விட்டது.

நரி ஓடியதைக் கண்ட சிங்கம் "அட, சீ! என்ன முட்டாள்தனம் செய்துவிட்டேன்? நரி தந்திரம் உள்ள மிருகம் என்று தெரிந்திருந்தும் நான் இன்று ஏமாந்துவிட்டேன்" என்று மனத்திற்குள் எண்ணியது.

நாம் பலசாலிகளாக இல்லாவிட்டாலும் தந்திரசாலிகளாக இருந்தால் வரும் ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

அதனால்தான் ‘‘புத்திமான் பலவான்” என்ற ஒரு பழமொழி எமது தமிழ்மொழியில், காலங்காலமாக எமது முன்னோரால் கூறப்பட்டு வந்திருக்கின்றது.