பாடம் 20: நான் ஒரு நாட்காட்டி (சுயசரிதை)

"எனக்கு மூச்சு விட முடியவில்லை. எனக்கு மேலே பாரமாக நிறையக் கடதாசிகள். இந்தக் கடதாசிக் கழிவுக் கூடையில் ஏனின்று இவ்வளவு கூட்டம்? நான் முட்டித் தள்ளிக்கொண்டு மேலே வருகின்றேன். தலையை மட்டுமாவது வெளியில் நீட்டிக் கொள்வோம். அப்பா... இப்போதுதான் உயிர் வருகிறது. இதோ நான் மதிப்பாக இருந்த அறை. அதோ நான் மாட்டப் பட்டிருந்த இடம். ஐயோ! எனது இடத்தில் வேறு ஒருவன் இருக்கிறானே! என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறான். அவன் என்னைப் போல அழகானவன் இல்லை. ஆனாலும் பகட்டாக இருக்கின்றான். புதியவன் என்ற இறுமாப்பு அவனுக்கு. எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இனி என்னை யாரும் உபயோகிக்க மாட்டார்கள். என் சோகக் கதையை நீங்களும் கேளுங்கள்.

நான் முதலில் ஒரு பெரிய காகிதச் சுருளாக இருந்தேன். எனது மேனி வழுவழுப்பானதாக இருந்தது. காகித ஆலை ஒன்றில் என்னைப் போல பலர் இருந்தார்கள். எங்களில் சிலரை ஓர் அச்சகத்திற்கு எடுத்துச் சென்றார்கள். அங்கே ஓர் இயந்திரத்தில் செலுத்தி எங்களில் வண்ண வண்ணப் படங்களையும் இலக்கங்களையும் பதித்தார்கள். நாங்கள் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் ஆனோம். எங்களைத் துண்டங்களாக வெட்டி இணைத்தார்கள். நான் ஒரு நாட்காட்டியாக மாறினேன். என்னைப் போல் பலர் அப்படி மாறியிருந்தார்கள்.

இரண்டொரு நாட்கள் நாங்கள் அங்கே இருந்தோம். ஒருநாள் ஒரு பெரியவர் அவருடைய வாகனத்தில் ஏற்றி எங்களை இங்கே கொண்டு வந்தார்.

என்னை மட்டும் இந்த அறைக்குக் கொண்டு வந்து மாட்டி வைத்தார். அப்போது எனக்குப் பெருமையாக இருந்தது. தினமும் என்னைப் பலர் பார்ப்பார்கள். என்னைத் தொட்டுப் பார்ப்பார்கள்.

நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படியாக பன்னிரு மாதங்கள் கழிந்தன. புதிய வருடம் பிறந்தது. என்னைக் குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டார்கள். எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. வாழ்க்கை நிலையில்லாதது. அதோ அந்தப் புதியவனுக்கும் அப்படித்தான். ஒருநாள் அவனும் என்னைப் போலவே இங்கே வீசப்படுவான்."

“உலகில் எதுவுமே நிலையானது அல்ல: யாவையும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்” என்ற தத்துவத்தை நினைத்து என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.