அன்பென்று கொட்டு முரசே - அதில்
ஆக்கம் உண்டாமென்று கொட்டு
துன்பங்கள் யாவுமே போகும் - வெறும்
சூதுப் பிரிவுகள் போனால்
அன்பென்று கொட்டு முரசே - மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்
பாருக்குள்ளே சமத் தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை
யாருக்குந் தீமை செய்யாது - புவி
எங்கும் விடுதலை செய்யும்.
ஒன்றென்று கொட்டு முரசே - அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே
நன்றென்று கொட்டு முரசே - இந்த
நானில மாந்தருக் கெல்லாம்
- மகாகவி பாரதியார
அருஞ் சொற்கள் அருஞ் சொற்கள் அருஞ் சொற்கள்
ஆக்கம் - முன்னேற்றம், சூது - கபடம்,
நிகராம் - சமமாம், பார் - உலகம், பெருகும் - கூடும்,
புவி - பூமி, நானிலம் - உலகம், மாந்தர் - மனிதர்
பாரதியார் தமிழைப் போற்றினார். அவர் பல மொழிகளைக் கற்றவர். அவர்,
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய்,விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர் ! தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.’ ; எனக்கூறியுள்ளார்.
வேறு ஒரு மொழியில் இருந்து தோன்றாது தானே தனித்து இயங்கக்கூடியதும், பல பழைய இலக்கியங்களை உடையதுமான மொழி, செம்மொழி எனப்படும்.
பல ஆயிரம் வருடங்கட்கு முன் நாகரீகம் அடைந்த பல இனங்கள் மத்தியில் வளர்ச்சி அடைந்த மொழிகள் பேசப்பட்டு வந்துள்ளன. சமக்கிருதம், இலத்தீன், கிரேக்கம் முதலிய செம்மொழிகள் இறந்த மொழிகள் என்பர். தொடர்ந்து இன்றும் மக்களால் பேசப்படும் செம்மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் மொழியும் பாராட்டப்படுவது எம் எல்லோருக்கும் பெருமை தருகிறது.