ஒரு நாள் ஓர் ஆற்றங்கரையில் இருந்து அவிவேக பூரண குருவூம் மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற ஐந்து சீடர்களும் உரையாடிக் கொண்டு இருந்தார்கள். “இந்த ஆறு மிகவூம் பொல்லாதது. சென்ற தடவை நாம் உப்பு மூட்டையைக் கொண்டு சென்ற போது மூட்டையை அவிழ்க்காமலே அதற்குள் இருந்த உப்பை இந்த ஆறு விழுங்கி விட்டது. எனவே இன்று அது நித்திரை செய்யும் போதுதான் நாம் இரகசியமாகக் கடக்க வேண்டும்” என்று அறிவுரை கூறினார் குரு.
“நான் சென்று அது நித்திரை செய்கின்றதா? என்று பார்த்து வருகிறேன்” என்றான் மூடன். “மெதுவாகச் செல், நித்திரை செய்யுயம் ஆற்றை எழுப்பிவிடாதே” என்று அறிவுரை கூறினான் பேதை. மூடன் ஒரு நெருப்புக்கொள்ளியை எடுத்துச் சென்று மெதுவாக ஆற்றுக்குள் வைத்தான். நெருப்பு தண்ணீரில் பட்டதும் அது “உஸ்” என்று சத்தமிட்டது. உடனே அவன் பயந்து ஓடிச்சென்று “குருவே! ஆறு இன்னமும் நித்திரை கொள்ளவில்லை” என்றான்.
சிறிது நேரம் கழித்து, மட்டி “நான் இப்போது சென்று ஆறு நித்திரை செய்கிறதா? அல்லது விழித்திருக்கிறதா? என்று பார்த்து வருகிறேன்” என்று கூறினான். மூடன் முன்னர் பயன்படுத்திய நெருப்புக்கொள்ளியையே மட்டியும் எடுத்துச் சென்று ஆற்றுக்குள் இட்டான். அப்போது எதுவித சத்தமும் கேட்கவில்லை. உடனே ஓடிச்சென்று குருவிடமும் மற்றையவர்களிடமும் இதனைத் தெரிவித்தான். இதுதான் தருணம் என்று கூறி எல்லோரும் மெதுவாக ஆற்றைக் கடந்து சென்றனர். ஆற்றின் மறு கரைக்குச் சென்றதும் எல்லோரும் சரியாகப் பாருங்கள் என்றார் குரு. ஒவ்வொருவரும் தம்மை தவிர்த்துவிட்டு மற்றவர்களை மாத்திரம் எண்ணிப்பார்த்து “ஐயோ! எங்களில் ஒருவரை ஆறு விழுங்கிவிட்டதே என ஓலமிட்டு அழுதனர். அப்போது அவ்வழியால் சென்ற ஒரு வழிப்போக்கன் அவர்களது தவறை விளக்கி அவர்களது விசனத்தைப் போக்கினான்.
சீடர்கள் - மாணாக்கர்கள் | உரையாடல்- கலந்து பேசுதல் |
அறிவூரை - புத்திமதி | மெதுவாக - ஆறுதலாக |
நித்திரை - உறக்கம் | முட்டாள் -அறிவு குறைந்தவன் |
கடந்து - தாண்டி | தருணம் - சரியான நேரம் |
இரகசியம் - மறை பொருள் | கூச்சலிடுதல்- உரத்துச் சத்தமிடுதல் |