எமது பெற்றோர் தாம் பிறந்த நாட்டில் இருந்து அரசியல், பொருளாதார காரணங்களால் புலம் பெயர்ந்து மேலை நாடுகளில் வாழவேண்டி நேரிட்டது. அவர்கள் தமது தாய் மொழியாகிய தமிழ் மொழியினை உயிர் போலக் கருதினார்கள். பெருமை மிகுந்த தமிழ்க் கலாசாரம், பண்பாடு ஆகியவை தொடர்ந்து உலகம் எங்கும் வழக்கில் இருத்தல் வேண்டும் என்று விரும்பினார்கள். தமது சந்ததியினர் பெருமை மிகுந்த தமிழ்க் கலாசாரத்தை மறவாது இருக்கத் தமிழ் மொழியைக் கற்று அறிதல் வேண்டும் என்று அவாக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான், தாம் வாழும் இடங்களில் பல சிரமங்களுக்கு மத்தியில் தமிழ் மொழிப் பாடசாலைகளை ஆரம்பித்தார்கள்.
நாம் படிக்கும் தமிழ்ப் பாடசாலை எனது வீட்டுக்கு அண்மையில் அமைந்துள்ளது. அங்கே தமிழ்மொழியுடன், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், பரதநாட்டியம், சுரத்தட்டு ஆகிய நுண்கலைப் பாடங்களும் கற்பிக்கப் படுகின்றன. நான் தமிழும், புல்லாங்குழலும் கற்கிறேன். எமது தமிழ்ப் பாடசாலையில் எனக்குப் பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் தமிழ்ப் பாடசாலைக்குச் செல்லும்போது எமது கலாசார முறைப்படி ஆடைகள் அணிந்து செல்வேன். ஆசிரியர்களும் அப்படியான ஆடைகளைத்தான் அணிந்து வருவார்கள். தமிழிலே பல நல்ல கதைகளும், இனிமையான பாடல்களும் இருக்கின்றன. எனக்கு ஆத்திசூடியும், திருக்குறளும் மிகவும் விருப்பமானவை ஆகும். நான் தமிழ்ப்பாடல்களை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பேன். பாடசாலையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், பாடசாலைக் கீதமும் பாடுவோம்.
நாம் எல்லோரும் வகுப்பிலே அன்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறோம். பல புத்தகங்களைப் படிக்கிறோம். திருக்குறள் மனனப்போட்டி, பேச்சுப்போட்டி நாடகப் போட்டி என்பன நடைபெறும். ஒவ்வொரு தவணையும் பரீட்சைகள் இடம்பெறும். வருட இறுதியில் பரிசளிப்பு விழாவும், விளையாட்டுப் போட்டியும் நடைபெறும். எல்லா மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒன்றாக இணைந்து இவ்விழாக்களை நடத்துகிறார்கள். போட்டிகளில் கலந்து கொள்ள ஆசிரியர்களும் பெற்றோரும் உற்சாகம் தருவார்கள். இவற்றைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எமது தமிழ்மொழியையும், நுண்கலைகளையும், கலாசாரத்தையும், நான் எனது தமிழ்ப் பாடசாலையில் கற்றுக்கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்.
நான் தற்போது வாழும் மேலை நாட்டின் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றினைப் பிரதானமாகக் கற்பதுடன், மேலதிகமாகவே தமிழ் மொழியையும் கற்கின்றேன். அதன் மூலம் எமது முன்னோரின் சிறந்த பண்பாடுகளை அறிய முடிகின்றது. பழைய தமிழ் இலக்கியங்களைக் கற்பதன் மூலம் பரந்துபட்ட சமுதாய அறிவைப் பெறமுடிகின்றது. எமது இனத்தினைச் சேர்ந்த எமது வயதினை ஒத்த நண்பர்களுடன் பழகும் போது ஒற்றுமை உணர்வு மேம்படுகின்றது. எனது இனத்தின் பழைமையையும் பெருமையையும் பற்றி எனது பெற்றோர் மூலமும் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர் மூலமாகவும் அறியும் போது வியப்பும், மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது.
மேலை நாட்டு அறிஞர்கள் தமது ஆய்வுகளின் முடிவுகளால் எமது தமிழ் மொழி மிகவும் பழைமை வாய்ந்த செம்மொழி எனக் கூறுகிறார்கள். அவ்வாறு பல நாட்டவர்களாலும் பாராட்டப்படும் பழைமை வாய்ந்த இனிமையான தமிழ் மொழியை நாம் கற்பதற்குத் தமிழ்ப் பாடசாலைகள் மிகவும் அவசியமானவை. எமது பெற்றோரும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து தமிழ் பாடசாலையை நடத்துகின்றார்கள். வாரநாட்களில் யாவரும் தமது பிரதான கடமைகளில் ஈடுபடுவதனால், பெரும்பாலும் வாரநாட்களில் மாலை நேரங்களிலும், சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை பகல் நேரங்களிலும் தான் எமது தமிழ்ப் பாடசாலை இயங்குகின்றது. சேவை மனப்பான்மை கொண்ட பெரியோர்களின் உதவியுடன் எமது பாடசாலை நிர்வகிக்கப்படுகின்றது. எம்மை ஊக்குவிக்கும் பெற்றோருக்கும் தன்னலம் கருதாது சேவை செய்யும் தமிழ் ஆர்வலர்களுக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.