பாடம் 14:ஊடகங்கள்

செய்திகள், தகவல்கள், விளம்பரங்கள் போன்றவற்றைப் பொதுமக்களுக்கு அறியத்தரும் தொடர்பு சாதனங்களே ஊடகங்கள் எனப்படும். ஊடகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும் தொடர்பு சாதனங்கள் உரோம இராச்சியத்தில் பேரரசன் யூலியசீசர் காலத்திலிருந்தே வளர்ச்சியடையத் தொடங்கிவிட்டன. அக்காலத்தில் கல்வெட்டுக்கள், மரத்துண்டுகள் உலோகத் தகடுகள் போன்றவற்றில் எழுதப்பெற்ற அரச அறிவித்தல்கள் பொது இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டன. இத்தகவல்களைச் சரித்திர ஆய்வுகள் மூலம் விரிவாக நாம் கற்றுக்கொள்ள முடியும்.

பண்டைக் காலத்தில் சீனாவில் மட்டுமன்றி இந்தியா, அரேபியா, ஐரோப்பியா போன்ற இடங்களில் அதிகாரம் கொண்டோரால் பட்டுத் துணிகளில் எழுதப்பட்டு, கழுகு, புறா போன்ற பறவைகள் மூலமும் செய்திகள் பரிமாறப்பட்டன. பிரான்சு, யேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் 15ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்பு சாதனங்கள் நவீன முறைகளில் வளர்ச்சி அடையத்தொடங்கின. அவற்றில் ஒன்றான செய்தி இதழ்களின் வடிவம், அச்சு எந்திரம் கண்டறியப்பட்ட பின் சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாக இங்கிலாந்திலிருந்து முதலாவது வாராந்த இதழ் 1622ஆம் ஆண்டிலும், முதலாவது தினசரிப் பத்திரிகை 1702ஆம் ஆண்டிலும் வெளிவந்தன.

ஊடகங்களின் பாரிய வளர்ச்சிக்கு, 1886ஆம் ஆண்டுக்குப் பின் பாவனைக்கு வந்த அச்சு இயந்திரங்கள் முக்கியமானவை. அவை உலகம் எங்கும் இடம்பெறும் தகவல்கள் பொதுமக்களைச் சென்றடைவதில் முக்கியமான பங்கு வகித்தன.

இந்த நூற்றாண்டில் ஊடகச் செய்திகள் மிக விரைவில் பொதுமக்களைச் சென்றடைகின்றன. அதற்குக் காரணம் அச்சுப் பதிப்பு, ஒலிபரப்பு, தொலைக்காட்சி போன்ற நவீன தொழில்நுட்ப வளர்ச்சியாகும். இவற்றால் செய்திகளும், தகவல்களும் செய்மதிக்கூடாகவும் அனுப்பக்கூடியதாக இருக்கிறது. பத்திரிகைகள், சஞ்சிகைகள், செய்திகள் ஆகியவை கணினி மூலமாக மக்கள் பார்வைக்கு உடனுக்குடன் கிடைக்கின்றது. அதனால் உலகம் சுருங்கிவிட்டது என நாம் குறிப்பிடுகிறோம்.

ஊடகம் இல்லாமல் உலகமே இயங்காது என்ற அளவுக்கு ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துச் செல்கிறது. ஊடகவியல் என்கிறபோது அது மனிதர்களுக்கிடையில் கருத்துக்களையும்

தகவல்களையும் காவிச் சென்று பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற தொடர்பாடல் சம்பந்தப்பட்ட விரிவான ஒரு துறையைக் குறிக்கிறது.

தகவல் பரிமாற்றம் என்பது இரண்டு வகையில் நடைபெறலாம். முதல் வகை தனிப்பட்ட இருவருக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றம். இவ்வகையில்

கடிதப் போக்குவரத்து, தொலைபேசி உரையாடல் ஆகியவற்றைக் கூறலாம். இரண்டாவது வகையான தகவல் பரிமாற்றம் ஒருவர் வெளியிடும் தகவலை ஒரே நேரத்தில் பலரும் பெற்றுப் பயனடைவதனைக் குறிப்பிடலாம். செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றை இவ்வகையில் அடக்கலாம். இந்த இருவகையான தகவல் பரிமாற்றங்களுமே இணையச் சேவைகளாக நமக்குக் கிடைக்கின்றன.

அதுபோலவே இணையம் வழியாகவே இருவர் பேசிக் கொள்ளவும் முடியும். அவ்வாறு பேசிக் கொள்ளும்போது ஒருவர் உருவத்தை மற்றவர் தம் கணிப்பொறித் திரையில் காணவும் முடியும். அத்துடன் இரண்டுக்கு மேற்பட்டோர் குழுவாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் தொழில் நுட்பம் உதவியாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்ற செய்திப் பரிமாற்றத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளும் வசதியும், உடனடிச் செய்திப் பரிமாற்ற வசதியும்

இன்றைக்குச் தொலைபேசி மூலம் யாவருக்கும் கிடைக்கக் கூடியதாக உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரு பாலாரும் தொழில் நுட்பப் பயன்பாட்டின் மூலம் கல்வி சார்ந்த செயற்பாடுகளில் அதிக பயன்பெறும் வாய்ப்பு உள்ளது. படிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கவும், பாடங்கள் தொடர்பான

கருத்து பரிமாற்றம் செய்வதும் இலகுவாகின்றது. பாடம் நடைபெறும்போது சந்தேகங்களைத் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளவும் முடியும் . இதனால் படிப்பதிலும் படிப்பிப்பதிலும் காலவிரயம் தவிர்க்கப்படும். கணினி, ஒரு வழிகாட்டியாக இருந்து பயன்படுவதால், பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஊடகங்கள் உதவி புரிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இன்றைய கால கட்டத்தில் ஊடகங்களால் உலகெங்கும் நொடிப்பொழுதில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அளவு கடந்த தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக உலகமே உள்ளங்கையில் அமர்ந்துள்ளது. இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் யாவரும் இணையத்தளத்தின் மூலமாக எளிதில் வீட்டிலிருந்தபடியே உலகம் முழுவதையும் சுற்றி வர முடிகின்றது. இதன் மூலம் முன்னேற்றமான பல நன்மைகள் சமுதாயத்தினருக்குக் கிடைக்கின்றன. மேலும் ஊடகங்கள் மூலம் சமூக, அரசியல், வர்த்தக, வங்கித் துறைகளில் பல எதிர்பாராத விளைவுகளும் மாற்றங்களும் ஏற்படுகின்றன.

அதே சமயம் சமுதாயத்தைச் சீரழிக்கும் தீமைகளும், சில விஷமிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் காவல் துறையினரால் வேட்டையாடப்பட்டு நீதித்துறையினரால் தண்டிக்கப்படுகின்றார்கள். இவ்வாறான பல விடயங்களில் ஊடகங்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது.