எனது பெயர் மதி. எனக்குப் பன்னிரண்டு வயதாகின்றது. நான் ஆறாவது வகுப்பில் லண்டன் ராணி மேரி கல்லூரியில் படிக்கின்றேன். எனது வீடு கல்லூரியிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. பாடசாலை நாட்களில் நான் எனது தந்தையின் மோட்டார் வண்டியில் பாடசாலைக்குப் போவேன். எனது நண்பி அருணி பாடசாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியில் கல்லூரிக்கு வருவார். எமது மாநிலத்தில் பாடசாலை மாணவருக்கு பஸ் கட்டணச் சலுகை உண்டு.
கடந்த மூன்று வருடங்களாகத்தான் இக் கல்லூரியில் நான் படிக்கின்றேன். இலங்கையில் நான் கொழும்பு நாவலர் கல்லூரியில் படித்தேன். அது ஒரு பெண்களின் ஆரம்பப் பாடசாலை. அங்குள்ள பாடசாலைகளில் மாணவர் தொகை சராசரி நாற்பது ஆகும். எனது நண்பி அருணி தென் இந்தியாவில் படித்த பாடசாலையிலும் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தொகை பெரும்பாலும் நாற்பதுக்கு மேல் என்று கூறுகிறார். லண்டன் பாடசாலைகளில் ஒரு வகுப்பில் மாணவர் தொகை சராசரி இருபத்தைந்து ஆகவே இருக்கின்றது.
எனது பாடசாலை காலை எட்டு மணிக்குத் தேசிய கீதத்துடன் ஆரம்பமாகும். மாணவர்கள் யாவரும் சுத்தமாகச் சீருடை அணிந்து பாடசாலைக்கு வருவார்கள். காலையில் மூன்று பாடங்களின் பின் குறுகிய இடைவேளை விடப்படும். அச்சமயம் மாணவர்கள் சிற்றுண்டி உண்பர். கழிப்பறைகளுக்குச் செல்வர். திரும்பவும் ஒரு பாடம் நிகழ்ந்த பின் பன்னிரண்டு மணிக்கு மதிய ஒரு மணி இடைவேளை மணி அடிக்கப்படும். மாணவர் பெரும் ஆரவாரத்துடன் வகுப்பறைகளை விட்டு வெளியேறிச் சாப்பாட்டுக்கூடம் செல்வர். ஒரு மணியிலிருந்து மூன்று மணிவரை பாடங்கள் தொடர்ந்து நடைபெறும்.
நான் கணிதம், இலக்கியம், சங்கீதம், ஓவியம் ஆகிய பாடங்களை விரும்பிக் கற்கிறேன். மேலும் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளையும் ஆர்வத்துடன் படிப்பேன். கலை, அறிவியல், தொழில் நுட்பம் போன்ற பல பாடங்களைத் தொடர்ந்து கற்பதற்கு வேண்டிய அடிப்படைக் கல்வியை எமது பாடசாலையில் போதிக்கிறார்கள்.
எமது ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களைப் போக்கும் விதத்தில் பாடங்களுக்கு ஏற்ற காட்சிப் பொருட்களையும் கற்றல் உபகரணங்களையும் பயன்படுத்திப் போதிப்பார்கள். வீட்டு வேலைகளையும் ஒழுங்காகத் தந்து ஊக்கப்படுத்துவார்கள். தாயகத்தில் ஆசிரியர்கள் பல வசதிகளின்றி கரும்பலகையையும் பாடப் புத்தகத்தையும் உபயோகித்து சிரமப்பட்டே கற்பிக்கின்றனர். மாணவரும் கற்பதற்குச் சிரமப்படுகின்றனர்.
ஆசிரியர்கள் தம் மாணவர்களிடையே உள்ள திறமைகளை இனங்கண்டு பாராட்டுவார்கள். மாணாக்கரின் திறமைகளை வெளிக் கொண்டுவர வேண்டிய முறைகளில் கல்வி கற்பிப்பார்கள். எமது பாடசாலையில் வருடாவருடம் ஆசிரியர்கள் பெற்றோர்களைச் சந்தித்து மாணவரின் முன்னேற்றம் பற்றிக் கலந்துரையாடுவது வழக்கம்.
நான் பாடசாலையின் கூடைப்பந்துக் குழுவில் அங்கம் வகிக்கின்றேன். எமது பாடசாலையில் சதுரங்கம், இலக்கியம், நாடகம் முதலியவற்றிற்கான கழகங்கள் உண்டு. நான் அடுத்த வருடம் இலக்கியக் கழகத் தலைவர் பதவிக்குப் போட்டியிட எண்ணியுள்ளேன்.
இவ்வருடம் நிகழ்ந்த வட்டாரப் பேச்சுச் சுற்றுப் போட்டியில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. நான் கல்லூரியில் பெற்ற பரிசை அறிந்து எனது பெற்றோர் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். நான் எனக்குப் பயிற்சி அளித்து ஊக்குவித்த ஆசிரியருக்கு எனது நன்றியைக் கூறினேன். வருங்காலத்தில் மக்களின் அறியாமையைப் போக்க முயலும் ஆசிரியத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று நான் ஊக்கமுடன் கற்கின்றேன்.