தமிழ் உலகத்தில் ஒளவையார் என்ற பெயர் புகழ் பெற்றது. ஒளவையார் தமிழ் நாட்டிலே வாழ்ந்த பெண் புலவர். அவரைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. சங்க இலக்கியங்களிலே ஒளவையார் பாடிய பாடல்கள் பல உள்ளன. அவரது தமிழ்ப் புலமையை அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னன் மிகவே மதித்து அவருக்கு ஆதரவு அளித்தான். அவன் அளித்த அரிய நெல்லிக் கனியை உண்டு ஒளவையார் நெடுங்காலம் வாழ்ந்தார் என்ற கதையும் உண்டு. எனினும் அந்த ஒளவையார் வேறு, கம்பர் காலத்து ஒளவையார் வேறு என ஆய்வாளர் கூறுவர்.
கம்பரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுகின்றது. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் சோழநாட்டிலே பிறந்தவர். நாட்டுப் பற்று மிகுந்தவர். “சோழநாடு சோறு உடைத்து” என்று சோழநாட்டைப் புகழ்ந்தவர். ஊர் ஊராகச் சென்று பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்தவர். அவர்கள் அன்போடு கொடுத்த கூழையும் குடித்தவர்.
அவர் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடங்களே ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றில் உள்ள பாட வரிகள் அகரத்திலே தொடங்கி மந்திரம் போல் அகர ஒழுங்கில் அமைந்துள்ளன.
உதாரணமாக,
அறஞ்செய விரும்பு.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்.
என்று ஆத்திசூடியிலும்,
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
என்று கொன்றை வேந்தனிலும் பாடங்கள் தொடரும்.
ஒளவையார் பாடிய பிற நூல்கள் மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை என்பனவாகும். இவை தவிர ஏராளமான தனிப்பாடல்களும் அவரது பெயரில் வழங்குகின்றன. பெரிய நீதி நூல்களிலே உள்ள கருத்துக்களை எல்லாம் தொகுத்து மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் பாடிய பெரும் புலவர் ஒளவைப் பிராட்டியார். அவரது மூதுரை என்ற நூலில் உள்ள ஒரு பாடல் இது:
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
‘தென்னை மரத்துக்கு அடியிலே நீர் ஊற்றுகின்றோம். அதனைச் சுவையான இளநீராக அது மேலே காய்க்கும் தேங்காயில் தருகின்றது. அது போல, ஒருவருக்கு நன்மை செய்தால் நமக்கு எப்படியும் நன்மையே உண்டாகும். அதனால் பதிலுக்கு உதவியை எதிர்பார்த்து எதையும் செய்ய வேண்டாம்’ என்பது இதன் பொருள்.
நல்ல அறிவுரைகளைத் தரும் ஒளவைப் பிராட்டியின் நூல்களைப் படிப்போம். நாம் அவற்றைப் பின்பற்றி நல்லவர்களாய் வாழ்வோம்.