மத்திய கல்லூரி
யாழ்ப்பாணம்.
10-01-1982
அன்புள்ள அப்பா, அம்மா, தம்பி யாவருக்கும்,
நான் நலமாக உள்ளேன். உங்கள் நலத்தைக் கடிதம் மூலம் அறிந்து மகிழ்ந்தேன்.
விடுதியகத்தில் வசதிகள் எவ்வாறு உள்ளன என்று அறிய விரும்புவதாக எழுதியிருந்தீர்கள். ஆரம்பத்தில் எல்லாமே அதிருப்தியை அளித்தன என்பது உண்மைதான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. முதல் இரவு இருளிலிருந்து கொண்டு உங்களை எல்லாம் நினைத்து அழுதேன். முதல் ஒரு கிழமைவரை விடுதியக உணவைக் காணவே வெறுப்பாய் இருந்தது. அம்மா “இன்னும் சாப்பிடு, இன்னும் சாப்பிடு” என்று அன்போடு ஊட்டிய உணவு பற்றிய நினைவுகள் என் கண்களைக் கலங்கவைத்தன. உங்களைப் பிரிந்து வந்தபின்தான் உங்கள் அருமையை உணர்ந்தேன். இப்பொழுது எல்லாம் ஓரளவு சீராகி விட்டன. நீங்கள் என்னைப்பற்றி யோசித்துக் கவலைப்பட வேண்டாம்.
காலையில் ஐந்தரை மணிக்கு விடுதி மணி அடிக்கும். நாங்கள் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, படிப்பு மண்டபத்திற்குச் சென்று ஏழு மணிவரை படிப்போம். பின் குளித்து இறை வணக்கம் செய்வோம். ஏழரை மணிக்குக் காலை உணவு உண்போம். பின்பு புறப்பட்டு வகுப்புகளுக்குச் செல்வோம்.
காலைப் பாடங்கள் முடிந்ததும் விடுதி திரும்பி மதிய போசனம் உண்போம். சிறிது ஓய்வின் பின் பிற்பகற் பாடங்கள் தொடங்கும். அவை முடிவுற்றதும் விடுதியில் தேநீர் சிற்றுண்டி வழங்கப்படும். பின்பு ஐந்து மணிவரை விளையாட்டு. ஆறுமணி தொடக்கம் எட்டு மணிவரை படிப்பு. இரவு உணவு உண்டபின், வானொலி அல்லது தொலைக்காட்சி பார்த்துவிட்டு ஒன்பதரை மணிக்கு நித்திரைக்குச் செல்வோம்.
வீட்டிலே புத்தகப் பூச்சியாய் மட்டும் இருந்த நான் இன்று பரந்த மாணவ சமூகத்தோடு பழகிப் புதிய அநுபவங்களைப் பெறுகிறேன். படிப்பறிவோடு அநுபவ அறிவும் கிடைக்கிறது. என்னுடைய உடைமைகளைப் பாதுகாத்து, தூய்மையாய் வைத்துத் தன்னம்பிக்கை மிகுந்தவனாய் விளங்குகிறேன். இவற்றிற்காக இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி செலுத்த வேண்டும்.
இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள மகன்,
இராஜன்.
(பிற்குறிப்பு : அம்மா நீங்கள் மாசி மாதம் வரும்போது முறுக்கும் பகோடாவும் கொண்டு வாருங்கள்.)
(இக்கடிதம் 1982இல் ஒரு கல்லூரி விடுதியகத்தில் சேர்ந்த மாணவன் எழுதியது.)